புன்னகை பூக்களின் புதிய விளையாட்டு


புன்னகை பூக்களின் புதிய விளையாட்டு
x
தினத்தந்தி 16 Jan 2019 10:09 AM GMT (Updated: 16 Jan 2019 10:09 AM GMT)

பொங்கல் வந்தாலே நம்மையும் அறியாமல் ஒரு உற்சாகம் மனசுக்குள் பரபரக்கும்.

கரும்பு, சர்க்கரை பொங்கல் இவற்றை எல்லாம் தாண்டிய குதூகலம் பிறக்கும். அது சொந்தங்களை ஒன்றாய் காணும் சந்தோஷம். திரைகடல் ஓடி திரவியம் தேடிய தமிழன் பொங்கல் பண்டிகையை வாசப்பொங்கல், பட்டிப்பொங்கல் (மாட்டுப்பொங்கல்), உழவர் திருநாள் என்று கொண்டாடியதுடன் காணும் பொங்கல் என்று ஒரு உற்சாக பொங்கலையும் சேர்த்தே வைத்தான்.

வீரம், தீரம், விளையாட்டு, கலை என்று அத்தனையிலும் சிறந்து விளங்கிய தமிழனுக்கு அவற்றை வெளிக்காட்ட நேரம் போதவில்லையே தவிர விளையாட கலைகள் இல்லாமல் இல்லை. தெருக்கூத்து முதல் பாவைக்கூத்து வரை பல்வேறு கலை வடிவங் களை கொண்ட தமிழன் விளையாட்டுகளிலும் பலவற்றை தனக்கு சொந்தமாகவே வைத்திருந்தான். அவற்றின் சிதறல்கள் இன்னும் பல கிராமங்களில் புத்துணர்ச்சி பெற்று வளர்ந்து வருகிறது.

பொங்கல் பண்டிகை இப்போதெல்லாம் கல்லூரிகளின் கலாசார விழாவாக மாறி விட்டது. பாரம்பரிய ஆடைகளையே மறந்து விட்ட தற்கால மாணவ- மாணவிகள் வேட்டி, சேலையை ஆராதிக்கும் ஒரு நாளாக பொங்கல் விழா இருக்கிறது. வெறும் ஆடை அலங்காரம் மட்டுமின்றி, கலகலப்பான போட்டிகளையும் வைத்து அன்று ஒரு நாள் மட்டும் கல்லூரி வளாகத்தில் சுதந்திரப்பறவைகளாக அவர்கள் சுற்றித்திரியும் நிகழ்வாகவும் அது உள்ளது.

உறியடி, வடம் இழுத்தல், கோலம்போடுதல், பொங்கல் வைத்தல் என்று பல்வேறு போட்டிகளை பார்த்து ரசித்த நமக்கு, புதிதாக இன்னொரு விளையாட்டையும் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள் நவீன யுவதிகள்.

மண்பானையை தலையில் வைத்துக்கொண்டு ஓடும் போட்டி இது. இந்த விளையாட்டில் ராஜஸ்தானியர்கள் சிறந்தவர்கள். இது அவர்களின் ஒரு கிராமிய விளையாட்டு. வெளிநாட்டினரை கவரும் வகையில் ராஜஸ்தானில் நடைபெறும் புஷ்கர் கலைத்திருவிழாவில் பிரசித்தி பெற்ற இந்த விளையாட்டை நாம் புதிதாக பார்த்தது ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில். பொங்கல் பண்டிகைக்காக சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் மண்பானைகளுடன் வந்து கலந்து கொண்டனர் 10-க்கும் மேற்பட்ட சுறுசுறுப்பான மாணவிகள்.

போட்டி தொடங்கியது. ‘சும்மாடு’ சுற்றிய மாணவிகள், அதற்கு மேல் மண்பானையை வைத்துக் கொண்டு அதை பிடிக்காமல் நடந்தார்கள். பின்பு ஓடினார்கள். குழுமி இருந்த மாணவிகளின் உற்சாக ஆரவாரம் மகிழ்ச்சியை கூட்டியது. விளையாட்டு மைதானமே இளமையில் ஜொலித்தது. இது அறிமுக விளையாட்டு என்பதால் வெற்றி தோல்வியின்றி கலகலப்பாக முடிந்தது.

மாணவிகள் இதுபற்றி கூறும்போது, “உண்மையில் மிகவும் சிறப்பான விளையாட்டு இது. கோவில் விழாக்களில் கரகம் ஆடுபவர்களை பார்க்கும்போது அவர்கள் சுலபமாக கரகத்தை தலையில் வைத்து ஆடுவது போன்று இருக்கும். ஆனால் சிறிது நேரம் பானையை தலையில் வைக்க எவ்வளவு சிரம மாக இருந்தது என்பதை பார்க்கும்போது அந்த கலையின் மகத்துவம் தெரிகிறது.

ராஜஸ்தானில் இதே விளையாட்டை தண்ணீரை வைத்துக்கொண்டு ஓடுவார்கள் என்பது, அவர்கள் தண்ணீரை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. அதுமட்டுமல்ல, பானையை தலையில் வைத்து அது விழாமல் இருக்க வேண்டும் என்கிறபோது மனம் ஒரு புள்ளியில் குவிகிறது. அதே நேரம் நாம் ஓடவும் வேண்டும். பானை கீழே விழுந்து விடக்கூடாது. கால் தடுக்கி கீழே விழுந்து விடவும் கூடாது. கைகளால் பானையை தொடவும் கூடாது என்கிறபோது தலையை அசைக்காமல் நேர்க்கோட்டில் நடக்க வேண்டியிருக்கிறது. உடலை நிமிர்த்திக்கொண்டு வெற்றிகரமாக ஓடும் இந்த விளையாட்டு சிறந்த மனப்பயிற்சியை தருவதாக இருந்தது” என்றார்கள்.

பின்பு மாட்டு வண்டியில் ஜாலியாக பயணம் மேற் கொண்டார்கள்.

Next Story