மணி ஓசைக்குரலால் மனம் கவர்ந்த இசைமணி...!


மணி ஓசைக்குரலால் மனம் கவர்ந்த இசைமணி...!
x
தினத்தந்தி 19 Jan 2019 6:45 AM GMT (Updated: 19 Jan 2019 6:45 AM GMT)

இன்று (ஜனவரி 19-ந் தேதி) பின்னணிபாடகர் சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த தினம்.

தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி தான் எனது தந்தை சீர்காழி கோவிந்தராஜனுக்கும் சொந்த ஊராகும். எளிய மிட்டாய்க் கடைக்காரர் குடும்பத்தில் சிவசிதம்பரம்-அவயாம்பாள்தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே நாடகத் துறையின் மீது கொண்ட நாட்டமும் இசையின் மீது கொண்ட ஈடுபாடும் அவரை கலைத்துறைக்கு ஈர்த்தது. தேவி நாடக சபாவில் இசைநாடக நடிகராகப் பாடி நடித்து, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் துணை நடிகராக மாதச்சம்பளத்தில் பணி புரிந்து, முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் போராடி படிப்படியாக முன்னேறினார். தமிழ் இசைக்கல்லூரியின் “இசைமணி” பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, சென்னை மத்திய அரசு இசைக் கல்லூரியில் “சங்கீத வித்வான்” பட்டம் பயின்று தனது தகுதியை உறுதிப்படுத்திக்கொண்டார். வந்தார்! தமிழால் வளர்ந்தார்! உழைப்பால் உயர்ந்தார்! இசைமணியாய் இசையால் நிறைந்தார்!

கர்நாடக சங்கீதம், இசை நாடக சங்கீதம், பக்தி இசை, மெல்லிசை, சினிமா இசை, திரை நடிப்பு, கிராமிய இசை என அனைத்திலும் தனது தனி முத்திரையைப் பதித்து சிறப்புப் பெற்றார். சினிமாவில் பின்னணிப் பாடகராக பதினாராயிரம் பாடல்களுக்குமேல் பாடினார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி முதல் ரஜினிகாந்த், பாண்டியன் வரை குரல் கொடுத்த நான்கு தலைமுறைப் பணி செய்த பெருமை இவரைச் சாரும். திரையில் நல்ல தரமான பாடல்களை மட்டுமே தேர்வு செய்து பாடும் மரியாதையை திரையுலகம் இவருக்கு அளித்தது. திரைஇசை மேதைகள் ஜி. ராமனாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சுதர்சனம், எஸ்.வி.வெங்கடராமன், டி.ஜி.லிங்கப்பா, கே.வி.மகாதேவன், டி.ஆர்.பாப்பா, எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி முதல் தேவா வரை அனைத்து இசை அமைப்பாளர்களும் இவருக்கென பிரத்தியேகமாக மெட்டமைப்பது தனிச் சிறப்பாகும்.

‘அமுதும் தேனும் எதற்கு’ (தைபிறந்தால் வழிபிறக்கும்), ‘என்னை விட்டு ஓடிப்போக முடியுமா’ (குமுதம்) போன்ற காதல் பாடல்களாகட்டும் , ‘சங்கே முழங்கு’ (கலங்கரை விளக்கம்), ‘புதியதோர் உலகம் செய்வோம்’ (சந்திரோதயம்) , ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’ (உலகம் சுற்றும் வாலிபன்) , ‘தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே’ (முத்துச்சிப்பி) போன்ற தமிழ் முழக்கங்களாகட்டும் , ‘அறுபடை வீடு கொண்ட திருமுருகா’ (கந்தன் கருணை) , ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா’ (திருமலை தென்குமரி) போன்ற பக்தி சுவைப் பாடல்களாகட்டும், ‘தேவன் கோவில் மணியோசை’ (மணிஓசை), ‘ஓடம் நதியினிலே’ (காத்திருந்த கண்கள்) போன்ற தத்துவ இசையாகட்டும், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ (கர்ணன்) போன்ற சோக ரசப் பாடல்களாகட்டும், ‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்’ (எதிர்நீச்சல்), ‘நாளைபொழுது உந்தன் நல்ல பொழுதாகும்’ (பொற்சிலை)போன்ற நம்பிக்கைப் பாடல்களாகட்டும், இப்படி ஆயிரக்கணக்கான வெற்றிப் பாடல்கள் இன்றும் நிலைபெற்று நிற்க, திரை இசைப் பாடல்களின் தன்மை உணர்ந்து பாடியதே முக்கிய காரணம். சினிமாவில் நடிகர்களுக்கேற்ப பாவங்களை பாடலில் கொடுக்கலாமே தவிர, குரலை மாற்றி இசை நயத்தை மாற்றிவிடக்கூடாது என்ற எண்ணம் உள்ளவர். ‘உள்ளத்தில் கள்ளம் இல்லாமல், தூய வெள்ளை மனதுடன் உன்னிடம் உள்ள நல்ல தொண்டையில் பாடினாலே போதும். உன் இசைத் திறன் மென்மேலும் பரிமளிக்கும்’ என்று தனது சுயமரியாதைக் கொள்கையை இளம் பாடகர்களுக்கு அறிவுரையாக வழங்குவார். ‘தமிழ்க் கடவுள் முருகனை நம்பினோர் கைவிடப்படார்’ எனும் நம்பிக்கை வாசகம் உள்ளதைப் போல, சீர்காழியை நம்பிய தமிழ்க் கவிஞர்கள் பலர் சினிமா பாடலுக்கு நிகரான புகழை, இவருக்கு பக்திப் பாடல்கள் எழுதித் தந்ததன் மூலம் பெற்றிருக்கிறார்கள். கவிஞர்கள் டாக்டர் உளுந்தூர்பேட்டை சண்முகம், கலைமாமணி திருச்சி பாரதன், நெமிலி எழில்மணி, பூவை செங்குட்டுவன், கீதப்பிரியன், இணுவில் வீரமணி ஐயர், பழனி இளங்கம்பன் போன்றோர் இவ்வாறு தனிப் பாடல்கள் தந்து சிறந்தவர்கள். கவிவேந்தர் வாலி கூட இவ்வாறு பல பாடல்களைத் தந்ததுடன், தனது முதல் திரையுலகப் பிரவேசம் சீர்காழியாரின் குரலில் டி.ஆர்.பாப்பாவின் இசையில் ‘சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்’ பாடல் மூலம் எம்.ஜி.ஆரின் ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் கைராசியாக நிகழ்ந்ததைச் சொல்வார்.

நல்ல தமிழ் எங்கிருந்தாலும் அதை தேடிச் சென்று ஆதரிக்கின்ற தமிழ் உள்ளம் சீர்காழியாருடையது.

தன் ஆலய மணிக்குரலால் ஆலயங்கள்தோறும் இசை நிகழ்த்தி, சீர்காழியால் பாடல் பெற்ற தலங்களாக்கி, கர்நாடக சங்கீதத் திறத்தால் மத்திய அரசின் “பத்மஸ்ரீசங்கீத நாடக அகாடமி விருது, தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருது, “கலைமாமணி” விருது, ‘இசை ஞான பூபதி’, மொரிஷியஸ் இசைத் தூதர், வெளிநாட்டு விருதுகள் பல என நூறுக்கணக்கான மதிப்புயர் விருதுகளைப் பெற்றவர். தருமபுர ஆதீனம், காஞ்சி காமகோடி பீடம், குன்றக்குடி ஆதீனம் போன்ற ஆன்மீக பீடங்களின் இசைப் புலவராகப் பட்டங்கள் சூட்டப் பெற்றவர்.

எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படம் தயாரிப்பின் போது பிரபல பின்னணி பாடகர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. அப்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து அப்பா மிகவும் கவலையுடன் எம்.ஜி.ஆர். நம்மை மறக்க மாட்டாரே என்று வருத்தப்பட்டு கூறிக்கொண்டு இருந்த போது எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து ஒரு போன் வந்தது, அதில் பேசியவர்கள் உடனே புறப்பட்டு வரும்படி கூற அப்பா அங்கு சென்றார். எம்.எஸ்.விஸ்வநாதன் அப்பாவிடம் படத்தின் டைட்டில் பாடலை நீங்கள் தான் பாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கூறி இருக்கிறார் என்றார். அதை ஏற்று எனது தந்தையும் பாடினார். அந்த பாடல் தான் “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்” என்ற பாடல்.

கடைசியாக இந்த பாடலை பாடியுள்ளோம் படத்தின் டைட்டிலில் நமது பெயர் வருமா என்ற சந்தேகம் அப்பாவுக்கு. ஆனால் பட டைட்டிலில் பின்னணி பாடகர்களில் இரண்டாவது பெயர் அப்பாவின் பெயரே இடம் பெற்றதைப் பார்த்து மிக்கமகிழ்ச்சி அடைந்து எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து நன்றி கூறினார். எம்.ஜி.ஆர் பாட்டு பிரமாதமாக வந்து இருக்கிறது என்று கூறி அப்பாவின் கன்னத்தை தட்டி பாராட்டு தெரிவித்து குளிர்பானம் கொடுத்து உபசரித்தார். அப்பா, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் தங்களின் காவல்துறை மாநாடு, உலகத் தமிழ் மாநாடு போன்றவற்றில் முக்கிய நிகழ்ச்சிகளில் பாடச் சொன்னதையும், அண்ணா இவர் பாடிய திருக்குறள் இசைத் தட்டினை வெளியிட்டு மகிழ்ந்ததையும் பெருமையாகக் கருதுவார். டாக்டர் கலைஞர் இவரது இசையில் பேரன்பும் பற்றும் கொண்டவர். முதல்வராக எம்.ஜி.ஆர் பொறுப்பில் இருந்தபோது தான் தமிழக அரசவைக் கலைஞராக சீர்காழி நியமிக்கப்பட்டார். நான் மருத்துவராக இருப்பதால் ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன் அப்பாவிடம் கொடுத்து ஆசி வாங்குவேன். அப்பாவின் மணி விழா நெருங்குவதை ஒட்டி அதை பிரமாதமாக நடத்த ஆசைப்பட்டேன். அதற்காக பணத்தை சேர்த்து வந்தேன். ஆனால் அந்த வைபவத்தை நடத்த கொடுத்து வைக்காமல் அப்பா காலமாகி விட்டார். அந்த ஏக்கம் இன்றும் என் மனதில் நீங்காத வடுவாக இருந்து கொண்டே இருக்கிறது. அரசியல் சார்பற்று, அனைத்து மக்களின் உள்ளத்திலும் நிலையான இசைப் புகழைக் கொண்டு, தன் பாட்டுக்கும் பண்பாட்டுக்கும் அன்பர்களைக் கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 24-3-88 அன்று காலமானார். தனது இறுதி மூச்சிலும் ‘உலகம் வாழ்க, உலகம் வாழ்க’ என்று பிரார்த்தித்தவாறு கண் மூடியதைக் கண்டு உலகமே நெகிழ்ந்து அழுதது. இசையிலும் குணத்திலும் உயர்ந்து சிறந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அந்த உன்னதக் கலைஞனைப் போல், இனிமையாகப் பாடவும் பழகவும் ‘அவருக்கு முன்னரும் யாருமில்லை. அவருக்குப் பின்னரும் யாரும் பிறக்கவில்லை’ என்று உலகம் இன்றளவும் போற்றுகிறது.

-டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்
(சீர்காழி கோவிந்தராஜன் மகன்)

Next Story