மேகாலயா மரணங்கள்: மெத்தனத்தின் உச்சம்


மேகாலயா மரணங்கள்: மெத்தனத்தின் உச்சம்
x
தினத்தந்தி 19 Jan 2019 7:20 AM GMT (Updated: 19 Jan 2019 7:20 AM GMT)

மேகாலயா மாநிலத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட எலி வளைச் சுரங்க விபத்தும், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனமான நடவடிக்கைகளும் நம் நாட்டில் மனித உயிர்கள் இத்தனை மலிவா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

வடகிழக்கு மாநிலமான மேகாலயா, தாது வளம் நிறைந்தது. குறிப்பாக நிலக்கரி வளத்துக்குக் குறைவில்லை. இம்மாநிலத்தின் ஜைந்தியா குன்று உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரிப் படிவுகள் லட்சக்கணக்கான டன் அளவில் உள்ளன.

வேலைவாய்ப்புகள் அரிதான வடகிழக்குப் பிராந்தியத்தில், இந்த நிலக்கரிப் படிவுகளை அடிப்படையாக வைத்துச் சிலர் ‘சுயவேலைவாய்ப்பை’ ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

அதாவது, அவர்கள் தாமாகவே எலி வளை போன்ற குறுகிய சுரங்கங்களைத் தோண்டி, அவற்றின் வழியே நிலக்கரிப் படிவுகளை வெட்டி எடுத்து வெளியே விற்கிறார்கள்.

இந்த சட்டவிரோத எலி வளைச் சுரங்கங்கள், எந்தவித அறிவியல் நுட்பமும், நவீன சாதனங்களின் உதவியும் இன்றி, அனுபவ அறிவின் அடிப்படையில், பழமையான உபகரணங்களைக் கொண்டே அமைக்கப்படுகின்றன.

நிலக்கரிப் படிவுகள் உள்ள மலைச்சரிவுகளில் முதலில் 15 அடி முதல் 400 அடி அளவிலான செங்குத்துத் துளையையும், பின்னர் நிலக்கரிப் படிவு அடுக்கை ஒட்டி தேவைக்கேற்ப கிடைமட்டத் துளையையும் அமைக்கிறார்கள்.

அதன் வழியே நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வெளியே கொண்டுவரப்படுகிறது. சற்றுத் தொலைவில், சுரங்கப் பணி நடைபெறாத இடத்தில் அது குவிக்கப்படுகிறது. பல்வேறு எலி வளைச் சுரங்கங்களில் இருந்து இப்படி ஆங்காங்கே குவிக்கப்படும் நிலக்கரி, பின்னர் நெடுஞ்சாலையை ஒட்டிய பெரிய திறந்தவெளிக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தேவையான இடங்களுக்கு அனுப்பப்படுகிறது.

முழுக்க முழுக்க மனித சக்தியில் அமைக்கப்படும் எலி வளைச் சுரங்கங்களில் விபத்துகள், அபாயங்களுக்குக் குறைவில்லை. உயிரிழப்புகள் சர்வ சாதாரணம். இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில், கடந்த 2015-ம் ஆண்டு மேகாலயாவில் எலி வளைச் சுரங்கங்களை அமைக்கவும், அவற்றில் இருந்து வெட்டி எடுக்கும் நிலக்கரியைக் கொண்டு செல்லவும் அம்மாநில அரசு தடை விதித்தது.

ஆனால் தடை ஒருபக்கம் இருந்தாலும், மேகாலயாவில் ஆயிரக்கணக்கான எலி வளைச் சுரங்கங்கள் இன்று வரை சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. சட்டத்தை மீறி இந்தச் சுரங்கங்கள் செயல்படுவதற்கு, அரசியல்வாதிகள், அதிகாரிகள், போலீசார் கூட்டணியின் சர்வ ஆசீர்வாதம்தான் காரணம்.

இந்த எலி வளைச் சுரங்கங்களில் ஒன்றில்தான், கடந்த டிசம்பர் 13-ந் தேதி தொழிலாளர்கள் சிலர் சிக்கிக் கொண்டனர். அப்பகுதியில் ஓடும் லைதீன் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சுரங்கத்துக்குள் தண்ணீர் பாய்ந்தது.

சுரங்கத்தின் நுழைவுப் பகுதியில் இருந்த தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பிவிட, சுமார் 350 அடி ஆழத்தில் இருந்த 15 தொழிலாளர்கள் வெளியேற வழியின்றி மாட்டிக்கொண்டனர்.

இதுகுறித்த செய்தி, ஊடகங்களில் வெளியான பிறகுதான் மாநில அரசும், அதைத் தொடர்ந்து மத்திய அரசும் விழித்துக்கொண்டன. அதற்குள் சில நாட்கள் ஓடிவிட்டன.

விமானப் படை, கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், ஒருவர் மட்டுமே நுழையக்கூடிய எலி வளைச் சுரங்கத்தின் சிக்கலான அமைப்பும், அவற்றிலிருந்து தண்ணீரை முழுமையாக வெளியேற்ற இயலாத நிலையும் மீட்பு நடவடிக்கையைச் சிக்கலாக்கின.

சுரங்கத்துக்குள், நீருக்கடியில் சென்று படம்பிடிக்கும் சிறிய வாகனத்தைச் செலுத்தி கடற்படையினர் சோதனை செய்தபோது, சுமார் 110 அடி ஆழத்தில் தொழிலாளர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்து, அதை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் சிக்கி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், எஞ்சியவர்களும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தும், இது பறித்திருக்கும் உயிர்களும் சில கேள்விகளை அழுத்தமாக எழுப்புகின்றன.

நம் நாட்டில் ஏன் எப்போதும் மனித உயிருக்கு மதிப்பே இல்லை? தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட தகவல் வெளியானதும் ஏன் உடனடியாக உயிர் காப்பு, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை? எலி வளைச் சுரங்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டு நான்காண்டுகள் கடந்தும் ஆயிரக்கணக்கில் அவை தொடர்ந்து செயல்பட்டு வந்தது எப்படி? விண்ணை அளக்கும் நம்மால், ஆழ்துளைக் கிணறு, சுரங்கங்கள் என்று மண்ணுக்குள் ஏன் மரணங்களைத் தடுக்க முடியவில்லை? எப்போதும், பாதிக்கப்படுபவர்கள் எளிய மக்களாக இருக்கிறார்களே, ஏன்?

கடந்த ஆண்டு, தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் ஒரு கால்பந்து அணிச் சிறார்களும், அவர்களின் பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டது சர்வதேச செய்தியானது. மீட்புக்கு உதவிக்கரம் நீட்ட உலக நாடுகள் ஓடோடி வந்தன. ஆனால் மேகாலயாவில் இத்தனை பேர் நிலத்தடியில் சிக்கிக்கொண்ட செய்தி, தேசிய அளவிலும் சிறு சலனத்தை ஏற்படுத்தாதது ஏன்?

கேள்விகள்... கேள்விகள்... அவற்றுக்கான பதில்கள், மேகாலயா சுரங்கங்களில் முகந்தெரியாத தொழிலாளர்களின் சடலங்களைப் போல பல நூறு அடி ஆழத்தில் புதைந்து கிடக்கின்றன.

-அகிலன்.

69 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட 33 பேர்

சிலி நாட்டின் அட்டகாமா பாலைவனத்தில் உள்ள சான் ஜோஸ் தாமிர தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 33 சுரங்கத் தொழிலாளர்கள் 2 ஆயிரத்து 300 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து நிகழ்ந்தது, 2010 ஆகஸ்டு 5-ந் தேதி. அனைத்துத் தொழிலாளர்களும் மீட்கப்பட்டது, அக்டோபர் 13-ந் தேதி. அதாவது, 69 நாட்கள் கழித்து. அத்தனை தொழிலாளர்கள் அவ்வளவு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது மட்டுமல்ல, அந்த மீட்பு நடவடிக்கையை 100 கோடிப் பேர் டி.வி. நேரலையில் பார்த்ததும் உலக சாதனைதான்.

Next Story