கொக்கென்று நினைத்தாயோ...!


கொக்கென்று நினைத்தாயோ...!
x
தினத்தந்தி 20 Jan 2019 6:10 AM GMT (Updated: 20 Jan 2019 6:10 AM GMT)

உள்ளூர் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறும் போது, “இந்த ஆட்டம் போடுகிறீர்களே, வாருங்கள் வெளிநாட்டுக்கு உங்களை குப்புறத்தள்ளும் உதை காத்திருக்கிறது” என்று நையாண்டி செய்தவர்கள் முகத்தில் சாதாரண கரியை அல்ல நிலக்கரியை அரைத்துக் குழைத்து முகத்தில் பூசி இருக்கிறது இந்திய அணி.

ள்ளூர் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறும் போது, “இந்த ஆட்டம் போடுகிறீர்களே, வாருங்கள் வெளிநாட்டுக்கு உங்களை குப்புறத்தள்ளும் உதை காத்திருக்கிறது” என்று நையாண்டி செய்தவர்கள் முகத்தில் சாதாரண கரியை அல்ல நிலக்கரியை அரைத்துக் குழைத்து முகத்தில் பூசி இருக்கிறது இந்திய அணி. இந்திய அணி வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து அதன் சொந்த மண்ணில் இரண்டு தொடரில் வெற்றி ஒரு தொடரில் சமம் என்கிற வெற்றிக் கொடியை ஆழமாக நாட்டி இருப்பது வெறும் விந்திய சாதனை அல்ல. இமயத்தையே தொட்ட சாதனை. விமர்சனக் கணைகளை எதிர் கொண்டு மவுனம் சாதித்த இந்திய அணி தன் செயலால், சாதனையால் விமர்சகர்களுக்கு சுடச்சுட பதில் அளித்து இருக்கிறது. குல்தீப் யாதவ் இல்லை என்றால் என்ன கேதர் ஜாதவ் உள்ளே வருகிறார். வெற்றிக்கு தன் பங்கையும் சிறப்பாகச் செய்கிறார். ராகுல் இல்லாவிட்டால் என்ன உடனே தமிழ்நாட்டிலிருந்து விஜய்சங்கர் வரவழைக்கப்படுகிறார். இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் ஆடாத சாஹல் வாய்ப்பு வந்த போது தன் இருப்பை சக்தியுடன் வெளிப்படுத்துகிறார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆறு விக்கெட்டுகள் என்பது எளிதான காரியமல்ல.

டோனிக்கு வயதாகி விட்டது ‘ஹெலிகாப்டர் அடிகளை மறந்துவிட்டார்’, ‘தடாலடியாக’ ஆடக்கூடியவர் இப்போது வட்டார வழக்கில் சொல்வதென்றால் ‘தடவுகிறார்’. ஐந்து தடவைகள் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து இறுதியில் 87 ரன்கள் சேர்த்து அவர்தான் வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். குல்தீப்புக்கு பதிலாக உள்ளே வந்த கேதர் ஜாதவ், டோனிக்கு துணை நின்றுள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1000 ரன்கள் சேர்த்த நான்காவது வீரர் டோனி. இந்தத் தொடரில் அதிக ரன்கள் சேர்த்தவர்களில் டோனிக்கு இரண்டாவது இடம். ஆடும் இடத்தைவிட்டு பல தப்படிகள் முன்வந்து எதிரணியின் வேகப் பந்துவீச்சை பிஞ்ச் லாவகமாக சமாளித்து ஆடுவதை கவனித்த டோனி, புவனேஷ்வர்குமாரிடம் ஏதோ ஒரு சூத்திரத்தை சொல்லிவிட்டு வருகிறார். அடுத்த பந்தில் பிஞ்ச் ‘அவுட்’. இதை அனுபவத்தின் அனுகூலம் என்கிறார்கள். அது டோனியிடம் நிறைய இருக்கிறது.

அணியில் கோலி உள்பட இன்னார்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. மரம் சாய்ந்தால் யாராவது ஒருவர் வலுவாக முளைத்து வந்துவிடுகிறார். சச்சின், டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமணன், கங்குலி, யுவராஜ் சிங் இன்னும் இது போன்ற ஜாம்பவான்கள் உரிய வயதை அடைந்தபின் ஒருவரை அடுத்து ஒருவர் ஓய்வு பெற்று வெளியேற கருமேகங்கள் அணியைச் சூழ்ந்தன. இன்றைய நிலை என்ன?.

கோலி, புஜாரா, ரோகித், தவான், ரஹானே, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்த பிரித்வி ஷா, ஹனுமான் விஹாரி, மயங்க், சுப்மான் உள்பட எத்தனை எத்தனை இளம் வீரர்கள் இந்திய அணியின் கதவை ஓங்கித் தட்டிய வண்ணம் காத்திருக்கிறார்கள். ஒரு டட்டு பட்கரைத் தவிர வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்கிற நிலை இருந்தது. இன்று ஏகப் பட்ட வேகப்பந்து வீச்சாளர்களை கையில் வைத்துக் கொண்டு யாரை களமிறக்குவது என்பது ஒரு பிரச்சினையாக மாறி இருக்கிறது என்று கூடச் சொல்லலாம். போட்டி ஆட்டங்களில் இந்திய அணியை எதிர்கொள்ளும் அணிகள் தாங்கள் வெற்றி பெற என்ன வழி என்பதைப்பற்றி சிந்திப்பது இல்லை. இந்திய அணியை எப்படி தோற்கடிக்கலாம் என்பது பற்றி திட்டமிடுவதிலேயே காலத்தை வீணடிக்கிறார்கள். எந்தச்சூழ்நிலை என்றாலும் கடைசிப் பந்து வீசப்படும் வரை இந்தியஅணியை எழுதித் தள்ளி விட முடியாது. இப்போது நடந்து முடிந்த ஆட்டமும் அதற்கு ஒரு சாட்சி.

ஓர் அனுபவஸ்தர் சொன்னார், “இந்திய அணியில் பளபளக்கும் நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என்பதை விட துணிச்சலுடன் எந்தச் சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் திறமை வாய்ந்த செயல் வீரர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை”.

முன்பெல்லாம் அணியில் தானாகவே இடம் பெற்று விடக்கூடிய ஆட்டக்காரர்கள் இருந்தார்கள் ஆனால் இப்போது கோலி நீங்கலாக அத்தனை வீரர்களும் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள போராடும் நிலையிலேயே இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆரோக்கியமான போட்டி இருக்கிறது. இத்தகைய வலுவான அணியின் உலகக் கோப்பை வெற்றிவாய்ப்புகள் எப்படி? சற்று எட்டிப்பார்க்கலாமே !!!

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (விளையாட்டு விமர்சகர்)

Next Story