‘நாட்டாமை’க்கு வந்த சோதனை


‘நாட்டாமை’க்கு வந்த சோதனை
x
தினத்தந்தி 20 Jan 2019 6:34 AM GMT (Updated: 20 Jan 2019 6:34 AM GMT)

இந்த உலகத்தில் பிரச்சினையே இல்லாதவர்கள் யார் என்று கேட்டால், இரண்டே பேர்தான். அவர்களில் ஒருவன் இறந்துவிட்டான்; இன்னொருவன் இன்னும் பிறக்கவில்லை.

ந்த உலகத்தில் பிரச்சினையே இல்லாதவர்கள் யார் என்று கேட்டால், இரண்டே பேர்தான். அவர்களில் ஒருவன் இறந்துவிட்டான்; இன்னொருவன் இன்னும் பிறக்கவில்லை.

அதாவது, இந்த பூமியில் பிரச்சினையே இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை என்பதை விளக்க இவ்வாறு சொல்வார்கள்.

இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, நாடுகளுக்கும் பொருந்தும். வீட்டுக்கு வீடு வாசல்படி என்பது போல் ஒவ்வொரு நாட்டுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. நாடு பெரிதாக இருந்தால் பிரச்சினைகளும் பெரிதாகத்தான் இருக்கும்.

தூரத்து தண்ணீர் தாகத்துக்கு உதவாது என்பதால் அண்டை வீட்டுக்காரனை பகைத்துக்கொள்ளாதே என்பார்கள். ஆபத்தான நேரங்களில் தூரத்தில் இருக்கும் உறவினர்கள் வந்து உதவி செய்யும் முன் பக்கத்து வீட்டுக்காரன்தான் கைகொடுப்பான் என்பதற்காக இவ்வாறு சொல்லிவைத்தார்கள். இதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆனால் பலரிடம் கேட்டால் வாசலில் குப்பை கொட்டுவது, காம்பவுண்டு சுவர் தகராறு, அதிக சத்தம்-கூச்சல், பக்கத்து வீட்டு மரம் தங்கள் காம்பவுண்டுக்குள் தலையை நீட்டுவதாக தகராறு என்று அண்டை வீட்டுக்காரர்கள் மீது அடுக்கடுக்காக புகார்களை கொட்டுவார்கள்.

அண்டை வீட்டுக்காரர்களால் ஏற்படும் தலைவலி தனிமனிதர்களுக்கு மட்டும் அல்ல; நாடுகளுக்கும் உண்டு.

பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், சீனாவால் இந்தியா எவ்வளவு தொல்லைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்பது கணக்கில் அடங்காது. ஒரு பக்கம் நேசக்கரம் நீட்டுவதாக பாசாங்கு செய்தாலும், எல்லையில் இரு நாடுகளும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன.

நமக்கு பாகிஸ்தான், சீனாவால் தலைவலி என்றால், பெரிய அண்ணனான அமெரிக்காவுக்கு பக்கத்து நாடான மெக்சிகோவால் தீராத தலைவலி.

மிகப்பெரிய விலங்கான யானையின் காதுக்குள் ஒரு சிறிய வண்டு நுழைந்து அதை தூங்கவிடாமல் செய்துவிட முடியும். அப்படித்தான் மெக்சிகோ என்ற வண்டு அமெரிக்கா என்ற யானையை தற்போது பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது.

பல நாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து நாட்டாமை செய்து கொண்டு இருக்கும் அமெரிக்கா, அண்டை நாடான மெக்சிகோவால் ஏற்படும் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் தவித்தபடி கையை பிசைந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ள மெக்சிகோ 19 லட்சத்து 72 ஆயிரத்து 550 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ள தேசம். இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பகுதியின் நீளம் 3,145 கிலோ மீட்டர்.

மெக்சிகோ நாட்டில் அமெரிக்காவை யொட்டிய எல்லைப் பகுதியில் பஜா கலிபோர்னியா, சோனோரா, சிகாஹுவா, கோவாகியூலா, நுவோலியோன், தமாலிபாஸ் ஆகிய 6 மாகாணங்கள் அமைந்து உள்ளன. இதில் சிகாஹுவா அதிக நீளமும், நுவோலியோன் குறைந்த தூரமும் அமெரிக்காவுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன.

இதேபோல் அமெரிக்காவின் கலிபோர்னியா, அரிசோனா, நியூமெக்சிகோ, டெக்சாஸ் ஆகிய 5 மாநிலங்கள் மெக்சிகோவுடன் எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் டெக்சாஸ் மாநிலம் அதிக தூரமும், கலிபோர்னியா மாநிலம் குறைந்த தூரமும் மெக்சிகோவுடன் எல்லையை பகிர்ந்து கொண்டு இருக்கின்றன.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் என்று உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வேலைதேடி லட்சக்கணக்கானோர் அமெரிக்கா செல்கிறார்கள். அமெரிக்காவுக்கு சென்றால் ஒரு நிலையான-வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் என்பதால், அந்த நாட்டுக்கு செல்வது பலருடைய கனவாக உள்ளது. அப்படி இருக்கும் போது வேலை இல்லாமலும், போதிய வருமானம் இல்லாமலும் தவிக்கும் அண்டை நாட்டினரான மெக்சிகோவாசிகள் சும்மா இருப்பார்களா?

மெக்சிகோவில் இருந்து வேலை தேடி லட்சக்கணக்கான பேர் எல்லைப்பகுதியை தாண்டி சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள். இவர்கள் தவிர பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்களும் எல்லைப்பகுதி வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்து விடுகிறார்கள். எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் அதிக அளவில் போதை மருந்து கடத்தப்படுகிறது.

இது இன்று, நேற்று ஏற்பட்ட பிரச்சினை அல்ல, ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது.

2005-ம் ஆண்டில் மட்டும் 11 லட்சத்து 89 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்குள் ஊடுருவி இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

2015-ம் ஆண்டில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் மெக்சிகோவில் இருந்து தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இருப்பதாக அமெரிக்க அரசின் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற ஆண்டுகளில் இந்த ஊடுருவல் எண்ணிக்கை சற்று கூடி அல்லது குறைந்து இருக்கலாமே தவிர எல்லை தாண்டுவது மட்டும் நின்றபாடில்லை.

இப்படி அத்துமீறி நுழைபவர்களால் அமெரிக்காவில் சமூக-பொருளாதார பிரச்சினைகள் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. எப்படி இந்தியாவுக்கு காஷ்மீர் விவகாரம் ஒரு நிரந்தர பிரச்சினையாக இருக்கிறதோ, அதுபோல் அமெரிக்காவுக்கு மெக்சிகோ ஊடுருவல் விவகாரம் தீராத தொல்லையாக இருந்து வருகிறது.

எல்லையில் நடைபெறும் ஊடுருவலை தடுப்பது தொடர்பாக அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையே கடந்த 1970-ம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தால் எந்த பலனும் ஏற்படவில்லை.

இதனால் அதன்பிறகு மெக்சிகோவை எதிர்பார்க்காமல் அமெரிக்கா தானே முன்வந்து தடுப்பு சுவர் கட்டும் முயற்சியை மேற்கொண்டது. இதற்கான சட்டத்தில் 2006-ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கையெழுத்திட்டார்.

3,145 கிலோ மீட்டர் எல்லை சமவெளி, மலைகள், காடுகள், ஆறுகள், பாலைவனம், பள்ளத்தாக்கு பகுதிகளை கொண்டது. சில இடங்களில் நகர்ப்புற பகுதிகள் உள்ளன. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல்பாசோ உள்ளிட்ட சில நகரங்கள் மெக்சிகோ எல்லையையொட்டி அமைந்து உள்ளன.

மெக்சிகோவில் திஜுயானா, சியூடாட் ஜாரஸ், சிகாகியூயா ஆகியவை எல்லையையொட்டி அமைந்துள்ள நகரங்கள் ஆகும்.

மொத்த எல்லைப் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு தூரம் ஏற்கனவே தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 2007 முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 882 கிலோ மீட்டர் நீளத்துக்கு வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

பண பிரச்சினை ஒருபுறம் இருந்தபோதிலும், மாறுபட்ட நில அமைப்பை கொண்ட எல்லை என்பதால் தடுப்பு வேலி அமைப்பது அமெரிக்க அரசுக்கு பெரும் சவாலான பணியாக இருக்கிறது. பல அடி உயரத்துக்கு சிமெண்டு சுவர், இரும்பு வேலி என்று இடத்துக்கு தகுந்தாற்போல் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதுவரை கலிபோர்னியா, அரிசோனா மாகாணங்களிலும், நியூமெக்சிகோ மாகாணத்தில் குறிப்பிட்ட தூரத்துக்கும் வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் இந்த விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக கையில் எடுத்தார். மண்ணின் மைந்தர் கொள்கையை உயர்த்திப்பிடிக்கும் அவர் தனது பிரசாரத்தின் போது, வெளிநாட்டினரின் வருகையால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாக குற்றம்சாட்டினார்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுக்குள் ஊடுருவலை தடுக்க, மெக்சிகோ எல்லையில் 55 அடி உயரத்துக்கு கோட்டை சுவர் போன்று பெரிய தடுப்பு சுவர் கட்டப்படும் என்றும், இதற்கான தொகையை மெக்சிகோவிடம் கேட்டு பெறுவேன் என்றும் ஆணித்தரமாக கூறினார்.

இப்படி சுவர் கட்டுவதற்கு ரூ.56 ஆயிரம் கோடி முதல் ரூ.84 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று அப்போது சில மதிப்பீடுகள் தெரிவித்தன. இன்னும் சில மதிப்பீடுகள் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதல் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று கூறின.

தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் ஜனாதிபதி ஆனதும், 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பு சுவர் கட்டுவதற்கான நடவடிக்கைகளை அவரது அரசு மேற்கொண்டது.

இதுதொடர்பாக அந்த மாதம் 27-ந் தேதி வெள்ளை மாளிகையில் அவரும், மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோவும் சந்தித்து பேசுவதாக இருந்தது. அதற்கு முன்னதாக பேசிய டிரம்ப், எல்லையில் சுவர் கட்டும் செலவை சமாளிப்பதற்காக மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 20 சதவீதம் வரி விதிக்கும் என்று அறிவித்தார்.

இது என்ரிக் பெனா நீட்டோவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதால், டிரம்ப்புடன் நடைபெறுவதாக இருந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டு, சுவர் கட்ட மெக்சிகோவால் பணம் எதுவும் தர முடியாது என்று கைவிரித்ததோடு, அப்படி ஒரு சுவர் கட்டுவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

என்றாலும் தடுப்பு சுவர் கட்டும் முயற்சியை டிரம்ப் கைவிடுவதாக இல்லை. 2017-ம் ஆண்டிலும், 2018-ம் ஆண்டிலும் அமெரிக்க அரசின் பட்ஜெட்களில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் மிகப்பெரிய அந்த திட்டத்துக்கு டிரம்ப் அரசு ஒதுக்கிய நிதி யானை பசிக்கு சோளப்பொரி போட்டது போல் ஆகிவிட்டது.

தடுப்பு சுவர் கட்டும் திட்டத்துக்காக, உள்நாட்டு நிதியில் இருந்து சுமார் 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரத்து 500 கோடி) பெற விரும்பிய ஜனாதிபதி டிரம்ப், அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற முயன்றார். ஆனால் அவரது இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி முட்டுக்கட்டையாக இருக்கிறது. மெக்சிகோ எல்லை சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது என்பது அந்த கட்சியின் உறுதியான நிலைப்பாடு. இதனால் அரசின் செலவின மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தர முடியாது என்று அக்கட்சி கூறிவிட்டது.

என்றாலும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், செலவின மசோதாவை டிரம்ப் அரசு நிறைவேற்றிவிட்டது.

100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையில் இந்த மசோதா நிறைவேற குறைந்தபட்சம் 60 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் அங்கு குடியரசு கட்சிக்கு 51 உறுப்பினர்களே இருப்பதால் ஜனநாயக கட்சியின் ஆதரவை பெற வேண்டிய கட்டாய நிலை டிரம்ப் நிர்வாகத்துக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனால் தடுப்பு சுவர் கூடாது என்பதில் ஜனநாயக கட்சி உறுதியாக இருப்பதால், செலவின மசோதாவுக்கு அந்த கட்சி ஆதரவு அளிக்க மறுத்துவிட்டது.

இதனால் கடந்த டிசம்பர் 22-ந் தேதி முதல் 9 துறைகள் செயல் இழந்து பணிகள் முடங்கி உள்ளன. 8 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. டிரம்ப்பும், ஜனநாயக கட்சியும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் போல் நடந்துகொள்வதால், அரசின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன.

இந்த பிரச்சினையில் இரு தரப்புக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், தோல்வியே ஏற்பட்டது. இரு தரப்பினரும் பிடிவாதமாக இருப்பதால், சிக்கல் நீண்டு கொண்டே போகிறது.

தீர்வு ஏற்படுவது எப்போதோ?

குறைந்த சம்பளத்துக்கு ஆள் கிடைக்குமா?

உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கையும், அகதிகளாக நுழைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து உள்ளது.

2016-ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, ‘விசா’ காலம் முடிந்தும் 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் அமெரிக்காவில் தங்கி இருப்பதாக தெரியவந்தது. அகதிகளாக நுழைபவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள்தான் என்று கூறப்படுகிறது. அகதிகளாக வருபவர்களை தங்க வைத்து உணவு அளித்து பராமரிப்பது அரசுக்கு பெரும் சுமையாக இருக்கிறது.

அமெரிக்காவில் வீட்டு வேலை செய்வது போன்ற உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர்களில் கணிசமானோர் மெக்சிகோவாசிகள்தான். குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

அவர்கள் மட்டும் இல்லை என்றால் வீட்டு வேலை செய்வது போன்ற உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்கு குறைந்த சம்பளத்தில் ஆட்கள் கிடைப்பது குதிரை கொம்பாகிவிடும். அந்த பணிகளில் அமெரிக்கர்களை அமர்த்தினால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சுரங்க பாதை வழியாக போதைப்பொருள் கடத்தல்

கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு எவ்வளவுதான் கண்காணித்தாலும் எல்லைப் பகுதிகளில் தரையின் அடிப்பகுதி வழியாக ஊடுருவல் நடைபெறுவதை தடுப்பது எல்லா நாடுகளுக்கும் பெரும் சவாலாகவே உள்ளது.

இந்தியாவை எடுத்துக்கொண்டாலும், காஷ்மீரில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பூமிக்கு அடியில் சுரங்க பாதை தோண்டி அதன் வழியாக ஊடுருவியதும், ஆயுதங்களை கடத்தியதும் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இந்த வகையான கடத்தலுக்கு ‘பெரிய அண்ணன்’ அமெரிக்காவும் விதிவிலக்கு அல்ல. மெக்சிகோவில் இருந்து தரைமார்க்கமாக மட்டுமின்றி, பூமிக்கு அடியில் சுரங்க பாதை அமைத்து அதன் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருட்களை கடத்திய சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்து உள்ளன. 1989, 1993, 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில், போதை மருந்து கடத்துவதற்காக சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மெக்சிகோவில் எல்லையையொட்டி அமைந்துள்ள திஜுயானா நகரில் இருந்து அமெரிக்காவுக்குள் 1,500 அடி தூரம் வரை ஒரு சுரங்க பாதை தோண்டப்பட்டு இருந்ததை 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 1989-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சுரங்க பாதை 300 அடி நீளம் கொண்டதாக இருந்தது.

போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒரு சுரங்க பாதையை திஜுயானா நகரில் உள்ள விமானநிலையம் அருகிலேயே தோண்டி இருந்ததை கண்ட அந்த நாட்டு அதிகாரிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

பல்லாயிரக்கணக்கானோர் பலி

தடுப்பு வேலி அமைக்கப்பட்ட எல்லைப் பகுதியிலும், வேலி அமைக்கப்படாத எல்லைப்பகுதிகளிலும் அமெரிக்க பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி கண்காணித்து வருகிறார்கள். என்றாலும் அவ்வளவு நீளமான எல்லைப்பகுதியை 24 மணி நேரமும் முழுமையாக கண்காணித்து ஊடுருவலை தடுப்பது இயலாத காரியமாக உள்ளது. தடுப்பு வேலி அமைக்கப்பட்ட இடங்களில் கூட அவற்றின் மீது ஏறி குதித்து அமெரிக்காவுக்குள் நுழைந்துவிடுகிறார்கள். அப்படி நுழைபவர்களில் பலர் பிடித்து தண்டிக்கப்படுகிறார்கள்.

தடுப்பு வேலியை தாண்டி, அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கிறார்கள். 1994 முதல் 2007-ம் ஆண்டு வரை மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் இறந்து இருப்பதாக மெக்சிகோவின் தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்து உள்ளது. 2003-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2004-ம் ஆண்டு மே மாதம் வரை சோனோரன் பாலைவனத்தில் எல்லையை கடக்க முயன்ற 61 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

அரிசோனா மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள பாலைவன எல்லைப்பகுதியில் 2004-ம் ஆண்டில் இருந்து இதுவரை மட்டும் 1,086 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

இப்படி அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்குள் நுழைய முயன்று பெண்கள், குழந்தைகள் என அப்பாவிகள் உயிர் இழக்கும் சோகம் வார்த்தைகளில் அடங்காதது.

சில சமயங்களில் குடும்பத்துடன் எல்லையை தாண்டி நுழைய முயற்சிப்பதும், அமெரிக்க பாதுகாப்பு படையினரை பார்த்ததும் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக குழந்தைகளை தூக்கிக்கொண்டு அலறியபடி ஓடும் பரிதாபமும் தொடர்கதையாக நீடிக்கிறது.

வயிற்று பிழைப்புக்காக அடைக்கலம் தேடி நுழைபவர்கள் விரட்டி அடிக்கப்படுவதற்கும், தண்டிக்கப்படுவதற்கும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஆனால் தங்கள் நாட்டின் எல்லையையும், தங்கள் மக்களின் நலனையும் பாதுகாக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக அமெரிக்க அரசு கூறுகிறது.

Next Story