நிலாவில் துளிர்விட்ட முதல் தாவரம்


நிலாவில் துளிர்விட்ட முதல் தாவரம்
x
தினத்தந்தி 21 Jan 2019 9:03 AM GMT (Updated: 21 Jan 2019 9:03 AM GMT)

மனிதன் நிலாவில் காலடி வைத்து சரித்திரம் படைத்து சுமார் 48 வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனால், இதுவரையில் நிலாவில் குடியிருப்புகளை நிறுவும் மனிதனின் ஆசை மட்டும் ஈடேறவில்லை!

நிலாவுக்கு இதுவரை பல்வேறு விண்கலங்கள் செலுத்தப்பட்டு, பல்வேறு வகையான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணமாக, நிலாவின் சுற்றுச்சூழலில் இருக்கும் காற்றில் பிராண வாயு இருக்கிறதா? மனிதன் சுவாசிக்கும் அளவுக்கு அந்த காற்று நச்சுகள் இல்லாமல் சுத்தமாக இருக்கிறதா? நிலாவில் தண்ணீர் இருக்கிறதா? உள்ளிட்ட பல விண்வெளி ஆய்வுகளைக் கூறலாம்.

ஆனாலும், இதுவரையிலான பல்வேறு ஆய்வுகள் பூமிக்கு நெருங்கிய நிலவின் பகுதி அல்லது பூமியை நோக்கியிருக்கும் நிலவின் பகுதியில்தான் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆனால் நிலாவின் ‘இருண்ட பக்கம்’ (dark side of the moon) எனப்படும் பூமியை நோக்காத பகுதிக்கு இதுவரையில் யாராலும் விண்கலங்களை அனுப்ப முடியவில்லை. அதனால் நிலாவின் அந்த ரகசியமான/மர்மமான பகுதி எப்படி இருக்கும், அல்லது அங்கு என்னதான் இருக்கும் என்பது பற்றி இதுவரையில் யாருக்கும் தெரியாமலேயே இருந்து வந்தது.

இந்த நிலையில், மிகவும் சுவாரசியமாக, கடந்த ஜனவரி 3-ந்தேதியன்று, நிலாவின் இருண்ட பகுதியில் தனது சாங்-இ 4 விண்கலத்தை தரையிறக்கி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது சீனாவின் விண்வெளி ஆய்வு மையம். இதன்மூலமாக, நிலாவின் இருண்ட பகுதி அல்லது தொலைவான பகுதியில் ஒரு விண்கலத்தை இறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை சீனா தட்டிச் சென்றது!

இதுபோதாதென்று, நிலாவின் அதே இருண்ட பகுதியில் தற்போது மற்றுமொரு அதிசயத்தை நிகழ்த்தி மீண்டும் உலகை ஆச்சரியத்தில் உறைய வைத்திருக்கிறது சீனா. அது என்னவெனில், நிலாவில் முதல் முறையாக பருத்தி விதைகளில் பருத்திச் செடிகளை வெற்றிகரமாக துளிர்விடச் செய்து அசத்தி இருக்கிறார்கள் சீனாவின் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள்.

நிலாவின் இருண்ட பகுதியில் தரையிறங்கிய, சீனாவின் சாங்-இ விண்கலத்தின் ‘லேன்டர் (lander) அல்லது தரையிறங்கி’ எனப்படும் விண்வெளி கருவியில் உள்ள உலோகப் பெட்டியில் பருத்தி விதைகளை துளிர்விடச் செய்திருக்கிறார்கள். சுவாரசியமாக, நிலாவில் மனிதன் உயிரியல் வளர்ச்சி பரிசோதனைகளை மேற்கொள்வது உலகில் இதுவே முதல் முறை என்கிறார் இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளர் சீ கெங்சின் (Xie Gengxin).

மேலும், அந்த உலோகப் பெட்டியில், பருத்தி விதைகளுடன் சேர்த்து உருளைக்கிழங்கு விதைகள், முட்டைக் காளான் எனப்படும் ஈஸ்ட் விதைகள், rapeseed எனப்படும் ஒரு வகையான பூவின் விதைகள் மற்றும் இதர சில தாவரத்தின் விதைகளும் இருந்தன என்கிறார்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆய்வை மேற்கொண்ட சீனாவின் சாங்கிங் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள்!

முக்கியமாக, இந்த தாவரங்களின் விதைகள் செடிகளாக வளர்ந்துவரும்பட்சத்தில், நிலாவில் பிற உயிர்கள் வாழத் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவினை இந்த தாவரங்கள் அளிக்கும் என்றும் கூறுகிறார்கள் சீன விஞ்ஞானிகள்.

அதுமட்டுமல்லாமல், நிலாவில் பருத்திச் செடிகள் நன்றாக வளர்ந்துவிட்டால், அதிலிருந்து எடுக்கப்படும் பருத்தியைக்கொண்டு ஆடைகள் உற்பத்தி செய்யலாம் என்றும், உருளைக்கிழங்கு செடிகள் விண்வெளி ஆய்வாளர்களுக்குத் தேவையான உணவையும், ரேப்சீட் செடிகள் எண்ணையையும் உற்பத்தி செய்யும் என்றும் கூறுகிறார்கள் சீன விஞ்ஞானிகள்!

அது சரி, உலகில் மனிதன் பயன்படுத்திவரும் எத்தனையோ வகையான உணவுத் தாவரங்கள் இருக்க, குறிப்பாக பருத்தி, உருளைக்கிழங்கு மற்றும் ரேப்சீட் தாவரங்கள் மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன?

ஏனெனில், இந்த மூன்று தாவரங்கள் அளவில் சிறியவை என்பதாலும், மிகவும் அதீதமான வெப்பம் மற்றும் குளிர்ச்சி ஆகிய இரண்டு வெப்பநிலைகளையும் தாங்கும் சக்தி கொண்டவை என்பதாலும், மற்றும் மிகவும் முக்கியமாக, நிலாவில் உள்ள கதிர்வீச்சுக்கு எதிரான சகிப்புத்தன்மை இந்த மூன்று தாவரங்களுக்கும் அதிகம் என்பதாலுமே இந்த மூன்று தாவரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்கிறார்கள் சாங்கிங் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள்!

மேலும், நிலாவில் இருக்கக்கூடிய மிகவும் குறைவான ஈர்ப்பு விசை (low gravity), சக்திவாய்ந்த கதிர்வீச்சு மற்றும் இயற்கையான ஒளி ஆகிய சுற்றுச்சூழலில் தாவரங்கள் எப்படி வளரும் என்பதைக் கண்டறிய இந்த உயிரியல் பரிசோதனை உதவும் என்கிறார் தலைமை ஆய்வாளர் சீ!

ஆக மொத்தத்தில், நிலாவின் இருண்ட பக்கத்தில் இருக்கக்கூடிய, கனிம வளத்தின் வேதியல் தகவல்கள் மற்றும் அதன் புறப்பரப்பு/மேற்பரப்பின் தகவமைப்பு ஆகியவை பற்றிய உண்மைகளைக் கண்டறிவதே நிலாவின் இருண்ட பக்கத்தில் தரையிறக்கப்பட்ட சாங் இ விண்கலத்தில் முதன்மையான நோக்கம் என்கிறது சீன விண்வெளி ஆய்வு மையம். அதேசமயம், இந்த திட்டத்தின் மூலமாக, சூரியன் மற்றும் இதர கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் தோற்றம் குறித்த சில தகவல்களும் கண்டறியப்படும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story