தினம் ஒரு தகவல் : ஆம்புலன்ஸ் வரலாறு


தினம் ஒரு தகவல் : ஆம்புலன்ஸ் வரலாறு
x
தினத்தந்தி 24 Jan 2019 6:13 AM GMT (Updated: 24 Jan 2019 6:13 AM GMT)

தற்போது பெரும்பாலும் மக்களின் பயன்பாட்டுக்காகத்தான் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது. ஆனால் தொடக்க காலத்தில் ஆம்புலன்ஸ் ராணுவத்துக்காக மட்டும் தான் பயன்படுத்தப்பட்டது.

போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு முதல் உதவி கொடுத்து மருத்துவமனைக்கு கொண்டு போகும் வாகனமாகத்தான் ஆம்புலன்ஸ் இருந்துள்ளது. இந்த சேவையை முதன்முதலாக பிரிட்டனில் இருக்கும் ஆங்கிலோ சாக்ஸன் என்ற குழு கி.பி.900-ம் ஆண்டில் தொடங்கியதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

1487-ம் ஆண்டில் ஸ்பெயின் ராஜ தம்பதியான பெர்டினார்ட் இசபெல்லா, ஸ்பெயின் ராணுவத்திற்காகப் போர்க்களத்தில் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தினர். ஆனால் இன்றைய ஆம்புலன்சுக்கான முன்மாதிரி வடிவம் 18-ம் நூற்றாண்டில் உருவாகியது. நெப்போலியன் ராணுவத்தில் பணியாற்றிய மருத்துவர் டொம்னிக் ஜீன் லாரேதான் முன்மாதிரி ஆம்புலன்சை கண்டுபிடித்தார். 

கி.பி. 1792 முதல் ஆம்புலன்ஸ் சேவை பிரஞ்சு ராணுவத்திற்காக டொம்னிக் ஜீன் லாரேயால் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது குதிரை வண்டிகள் தான் ஆம்புலன்ஸ் சேவைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியில் முகாமிட்டிருந்த ராணுவத்தினருக்காக 16 குதிரை வண்டிகள் ஆம்புலன்சாக பயன்பட்டன. இவற்றை அவர் பறக்கும் ஆம்புலன்ஸ் என்று அழைத்துள்ளார். ஒவ்வொரு ஆம்புலன்சுக்கும் தனி மருத்துவர்கள் உட்பட 340 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். முதலில் இத்தாலி முகாமில் மட்டும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து நெப்போலியன் பிரெஞ்சு ராணுவம் முழுவதுக்கும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த உத்தரவிட்டார்.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் மக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டது. 1832-ல் லண்டனில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துவர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 

1887-ல் செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் என்னும் நிறுவனம் லண்டனில் தொடங்கப்பட்டது. இது மிகவும் வெற்றிகரமான மக்கள் சேவைக்கான ஆம்புலன்சாக திகழ்ந்தது. பின்பு லண்டன் முழுவதும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. இந்தியாவில் இந்த அமைப்பின் முலம் 1914-ம் ஆண்டு முதல் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. 

Next Story