டாலர் மதிப்பு அடிப்படையில் தாவர எண்ணெய் இறக்குமதி 15 சதவீதம் குறைந்தது


டாலர் மதிப்பு அடிப்படையில் தாவர எண்ணெய் இறக்குமதி 15 சதவீதம் குறைந்தது
x
தினத்தந்தி 25 Jan 2019 12:01 PM GMT (Updated: 25 Jan 2019 12:01 PM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

டிசம்பர் மாதத்தில் டாலர் மதிப்பு அடிப்படையில் தாவர எண்ணெய் இறக்குமதி 15 சதவீதம் குறைந்துள்ளது.

சோயா எண்ணெய்

நாட்டின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் (சமையல் எண்ணெய் மற்றும் இதர எண்ணெய் வகைகள்) இறக்குமதியில் சமையல் எண்ணெயின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. பாமாயில் பெரும்பாலும் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறிய அளவில் சோயா எண்ணெய் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது.

நம் நாட்டில், சென்ற நிதி ஆண்டில் (2017-18) 2.30 கோடி டன் சமையல் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் ஏறக்குறைய 1.50 கோடி டன் எண்ணெய் இறக்குமதி ஆகி இருந்தது. இறக்குமதியாகும் சமையல் எண்ணெயில் பாமாயிலின் பங்கு 60 சதவீதமாக உள்ளது.

டிசம்பர் மாதத்தில் 72 கோடி டாலருக்கு தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2017 டிசம்பரில் அது 85 கோடி டாலராக இருந்தது. ஆக, டாலர் மதிப்பில் தாவர எண்ணெய் இறக்குமதி 15 சதவீதம் குறைந்து இருக்கிறது. ரூபாய் மதிப்பு அடிப்படையில் தாவர எண்ணெய் இறக்குமதி 6 சதவீதம் குறைந்து ரூ.5,104 கோடியாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் அது ரூ.5,433 கோடியாக இருந்தது.

நம் நாட்டில் நவம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலம் எண்ணெய் பருவம் ஆகும். கடந்த பருவத்தில் (2017-2018) 1.50 கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதி ஆகி உள்ளது. 2016-17 பருவத்தில் அது 1.54 கோடி டன்னாக இருந்தது. ஆக, இறக்குமதி 2.72 சதவீதம் குறைந்து இருந்தது. இதில், பாமாயில் இறக்குமதி (92.90 லட்சம் டன்னில் இருந்து) 87 லட்சம் டன்னாக குறைந்து இருக்கிறது.

பாமாயில்

பத்து ஆண்டுகளுக்கு முன் நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயிலின் பங்கு 86 சதவீதமாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் (2017-18) அது 62 சதவீதமாக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டில் இது 56 சதவீதமாக குறையும் என எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Next Story