இயற்கை மருத்துவத்தில் ‘கிரியா’ சிகிச்சை


இயற்கை மருத்துவத்தில் ‘கிரியா’ சிகிச்சை
x
தினத்தந்தி 3 Feb 2019 1:06 PM IST (Updated: 3 Feb 2019 1:06 PM IST)
t-max-icont-min-icon

‘கிரியா’ என்பதற்கு, யோகா முறையில் உடலின் உள்உறுப்புகளை சுத்தப்படுத்துதல் என்று பொருள்.

‘கிரியா’ என்பதற்கு, யோகா முறையில் உடலின் உள்உறுப்புகளை சுத்தப்படுத்துதல் என்று பொருள். இந்த வகை சிகிச்சை பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் திண்டுக்கல் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவப்பிரிவு டாக்டர் கல்யாணி கூறியதாவது:

“கிரியா சிகிச்சையில் 6 வகைகள் உள்ளன. முதலாவது வகைக்கு கபாலபதி என்று பெயர். 2-வது வகைக்கு நேதி என்றும், 3-வது தவுதி, 4-வது நவுலி, 5-வது திராடகா, 6-வது பஸ்தி என்றும் பெயர். இதில் கபாலபதி சிகிச்சை முறையில் ரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றலாம். அதனால் மூளையின் செல்கள் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி பெறும். வயிற்றின் உள்உறுப்புகளும் நன்றாக செயல்படும்.

இதன் செய்முறை என்பது, பத்மாசன முறையில் அமர்ந்து கொண்டு அடிவயிற்று தசைகளை பயன்படுத்தி வேகமாக மூச்சை வெளியே விட வேண்டும். அதன்பிறகு லேசான உள்மூச்சோடு அடிவயிற்றை விடுவிக்க வேண்டும். ஒரு நிமிடத்துக்கு 60 முறை என்று ஆரம்பித்து 120 முறை செய்ய வேண்டும். மூச்சை உள்ளே அழுத்தி வைக்கக்கூடாது.

2-வது வகையான நேதி சிகிச்சையில், மூக்கு பாதையை சுத்தப்படுத்தலாம். இதில் ஜலநேதி, சாத்திநேதி, துத்தநேதி, கிருதநேதி என 4 முறைகள் உள்ளன. ஜலநேதியின் செய்முறை என்பது, அதற்கென உள்ள பிரத்யேக பாத்திரத்தில் இளஞ்சூடான நீரால் நிரப்பி, அதில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து கலக்க வேண்டும். அதன்பிறகு அந்த பாத்திரத்தின் மூக்கு குழாயை வலது நாசியில் லேசாக நுழைத்து மூச்சு காற்றை வெளிவிடுவதற்கு வசதியாக வாயை திறந்து வைக்க வேண்டும்.

அப்போது தலையை இடது பக்கவாட்டில் சாய்க்க வேண்டும். இதில், தண்ணீர் வலது நாசியில் உள்ளே சென்று இடது நாசி வழியே வெளியேறும். அதேபோல் இதே முறையில் இடது நாசியிலும் செய்ய வேண்டும். அதன்பிறகு மூக்கிற்குள் உள்ளே உள்ள தண்ணீர் வெளியே வர நாசியை மாற்றி, மாற்றி அடைத்து மூச்சுக்காற்றை வெளியேற்ற வேண்டும். சாத்திநேதியில், சிறிய ரப்பர் குழாயையும், துத்தநேதியில் தண்ணீருக்கு பதிலாக பாலையும், கிருதநேதியில் நெய்யையும் பயன்படுத்தி மூக்கை சுத்தப்படுத்தலாம்.

தண்ட தவுதி வகை சிகிச்சைக்கு, முதலில் இளஞ்சூடான உப்பு கலந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இதில் துணிக்கு பதிலாக, ஒரு சென்டிமீட்டர் விட்டம், ஒரு மீட்டர் நீளமுள்ள ரப்பர் குழாயின் ஒரு முனையை மெதுவாக வாயின் வழியே வயிற்றுக்குள் நுழைத்து விழுங்க வேண்டும். அந்த குழாயின் முனை, அடி வயிற்றை அடைந்தவுடன் முன்புறம் மெதுவாக குனிந்து குழாயின் வழியாக வயிற்றில் உள்ள அனைத்து நீரையும் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேற்ற வேண்டும். அவ்வாறு அனைத்து நீரும் வெளியேறிய பிறகு மெதுவாக குழாயை வெளியே எடுக்க வேண்டும். இவை அனைத்தும் சூரிய உதயத்துக்கு முன் செய்வது நல்லது.

தவுதி வகை சிகிச்சையில், வயிறு வரை உள்ள உணவு பாதையை சுத்தப்படுத்தலாம். இதிலும் ஜல, வஸ்திர, தண்ட என 3 வகைகள் உள்ளன. ஜல தவுதியில், முதலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டு உப்பு கலந்த இளஞ்சூடான நீரை வயிறு நிறையும் வரை குடிக்க வேண்டும். அதன்பிறகு இடது, வலது பக்கம் என இடுப்பை வளைத்து அசைக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து பாதங்களை சேர்த்து வைத்து உடலை முன்புறமாக 90 டிகிரி கோணத்தில் நிறுத்தி, நின்றுகொண்டு வாந்தி எடுக்க வேண்டும். கைவிரலின் உதவியால் தொண்டையின் உள்பகுதியை தூண்டி வயிற்றில் உள்ள அனைத்து நீரையும் வாந்தி எடுக்க வேண்டும். அவ்வாறு அனைத்து நீரும் வெளியேறும் வரை இதுபோல் செய்ய வேண்டும்.

வஸ்திர தவுதியில், 4 விரல் அகலம், 7 மீட்டர் நீளமுள்ள துணியை ஒரு பயிற்சியாளர் அல்லது குருவின் வழிகாட்டுதல்படி மெதுவாக விழுங்க வேண்டும். அவ்வாறு நீளமான துணியை முழுவதுமாக விழுங்கியவுடன் பலவந்தமாக இல்லாமல் மெதுவாக துணியை வெளியே எடுக்க வேண்டும்.

அடிவயிறு மற்றும் குடல்களை சுத்தப்படுத்துவதற்கு நவுலி வகை சிகிச்சை என்று பெயர். இந்த சிகிச்சை முறையில், வயிற்றில் உள்ள குடல் உறுப்புகளை தனிமைப்படுத்தி, அதனை உருள செய்வதன் மூலம் அடிவயிறு மற்றும் குடல்களை சுத்தப்படுத்தலாம். இதில், உட்டியானா, மத்யமதவுலி, தட்சிணதவுலி, நவுலி சாலானா என 4 வகைகள் உள்ளது. இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையாகும். அந்தந்த முறைப்படி பயிற்சி செய்தால் அடிவயிறு, குடல்கள் சுத்தமாகும்.

மனதை ஒருநிலைப்படுத்துதலே திராடகா என்னும் பயிற்சி. பத்மாசனம், வஜ்ராசனம் அல்லது வேறு ஏதேனும் ஆசனங்களில் நேராக அமர்ந்து, சுமார் ஒரு மீட்டர் தூரத்தில் விளக்கு வைத்து சுடரேற்ற வேண்டும். அந்த விளக்கில் எரியும் சுடரை இமைகள் சிமிட்டாமல் பார்க்க வேண்டும். முதலில் தொடர்ந்து 10 வினாடிகள் என ஆரம்பித்து அதன்பிறகு வினாடிகளை அதிகரித்து கொள்ளலாம்.

இதுபோன்று தொடர்ந்து பயிற்சி செய்வதால் மனம் ஒருநிலைப்படும். கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்படும். அதனால் நாளடைவில் பார்வை குறைபாடுகள் சரி ஆகும். இந்த பயிற்சியின்போது ஒரு சிலருக்கு தலைவலி வரலாம். அப்போது கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

மலக்குடலை தூய்மைப்படுத்தும் பயிற்சிக்கு பஸ்தி பயிற்சி என்று பெயர். இதன் செய்முறை என்பது, முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் நீரை நிரப்பி கொள்ள வேண்டும். அதன்பிறகு குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு நீர் நிரப்பிய அகன்ற பாத்திரத்தை ஆசனவாய்படும்படி வைத்துக்கொண்டு, அஸ்வினி முத்ரா பயிற்சி செய்ய வேண்டும். இதில், ஆசனவாயின் வழியாக தண்ணீரை மலக்குடலுக்கு இழுத்து சிறிது நேரம் நிறுத்த வேண்டும்.

அதன்பிறகு உள்ளே இழுத்த தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு முடிந்த வரை செய்ய வேண்டும். இதுபோல் தொடர்ந்து பயிற்சி செய்வதால் மலக்குடல் சுத்தமாகும். இத்தகைய சிகிச்சைகளை டாக்டரின் ஆலோசனையை பெற்று முறையாக செய்வது நல்லது.
1 More update

Next Story