யானைகளையும் வாழ வைப்போம்...!


யானைகளையும் வாழ வைப்போம்...!
x
தினத்தந்தி 7 Feb 2019 7:10 AM GMT (Updated: 7 Feb 2019 7:10 AM GMT)

ஓசை காளிதாசன்,கோவை கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது சின்னத்தம்பி. கோவை, தடாகம் பகுதியிலிருந்து பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மனித நடமாட்டமற்ற காட்டுப் பகுதியில் விடப்பட்ட இந்த யானை மறுநாளே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலத்தை தேடி வந்துவிட்டது.

அதனால் அதனை காட்டுப் பகுதிக்கு விரட்ட வனத்துறை பெரும் முயற்சி எடுத்து வருகிறது. சின்னத்தம்பி, விநாயகன் என மக்களால் பெயர் வைக்கப்பட்ட யானைகள் தடாகம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித் திரிந்தன. அவை தொடர்ந்து விளைநிலங்களை சேதப்படுத்தியதாலும், சில நேரங்களில் வீடுகளை தாக்கியதாலும் பாதிக்கப்பட்ட மக்கள் யானைகள் வராமல் தடுக்க வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன் விளைவாக அந்த இரண்டு யானைகளையும் பிடித்து வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் முடிவை எடுத்தனர். முதலில் விநாயகர் யானை பிடிக்கப்பட்டு முதுமலைப் பகுதியில் விடப்பட்டது. இதுவரை காட்டுப் பகுதியிலேயே இருந்து வருகிறது. ஆனால் பின்னர் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை காட்டில் விட்ட மறுநாளே வெகுதூரம் நடந்து விளைநிலங்களை தேடி வந்துவிட் டது. அதனை காட்டுப் பகுதிக்கு விரட்டும் முயற்சி தொடர்கிறது. அந்த முயற்சி வெற்றி பெற்று அது காட்டுக்குள்ளேயே வாழப் பழகிவிட்டால் அனைவரும் மகிழ்ச்சி கொள்வோம். ஆனால் மீண்டும் மீண்டும் அது விளைநிலங்களுக்கு வந்தால் அதனை வளர்ப்பு யானையாக மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை.

ஒரு காட்டு யானை வளர்ப்பு யானையாக மாற்றப்படுவது சிறைவாசம்தான். அந்த யானை செய்த தவறு என்ன? இதை இந்த ஒரு யானையின் பிரச்சினையாகப் பார்க்காமல் ஒட்டுமொத்த யானைகளின் பிரச்சினையாக பார்த்தால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும். யானைகளுக்கு உணவு, குடிநீர் தேவைக்காக தடைகளற்ற தொடர்ச்சியான வனப்பகுதி அவசியம் தேவை. ஒரு காட்டுப் பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு ஆண்டுதோறும் அவை செல்லும் வலசைப் பாதைகள் மிக முக்கியமானவை. காலங்காலமாய் தமது முன்னோர்கள் போய் வந்த பாதைகளையே பெரும்பாலும் யானைகள் பயன்படுத்துகின்றன. அந்தப் பாதைகள் காடுகளில் மட்டுமன்றி தனியார் நிலத்திலும் உள்ளன. கோவை வனக்கோட்டத்தில் சமவெளிக் காடுகள் மிகக் குறைவு. பெரும்பாலும் சரிவான மலைப் பகுதியே இங்கு உள்ளது. சமவெளியின் பெரும் பகுதி தனியார் நிலம். யானைகள் சமவெளி பகுதியையே கடந்து போக பயன்படுத்துகின்றன. இங்குள்ள விவசாயிகள் மற்றும் பழங்குடிகளிடம் அந்த நிலம் இருக்கும்வரை யானைகள் தங்கு தடையின்றிப் போய்வந்தன. விவசாயமும் இடையூறின்றி நடைபெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களால் யானைகள் கடந்து போகும் பாதைகள் தடைபடத் தொடங்கிய பின்பே அவை விளைநிலங்களுக்குள் வரத் தொடங்கின.

மலைப்பகுதி பாதுகாப்பு விதிகளை நுட்பமாக மீறி யானைகளின் வலசைப் பாதைகளை மறித்துக் கல்வி நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், ஆசிரமங்கள் என கட்டிடம் கட்டியவர்கள் எந்த பாதிப்பும் அடையாமல் உள்ளனர். தடாகம் பகுதியில் விதிகளை மீறி ஆழமாக குழிதோண்டி யானைகளின் பாதைகளை மறித்த செங்கல் சூளைக்காரர்களும் நலமுடன் உள்ளனர்.

யானை நாட்டின் பாரம்பரிய விலங்கு. விவசாயிகள் நாட்டின் உயிர். நமக்கு உணவளிப்பவர்கள். இந்த இரு பிரிவினரின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு சில முடிவுகளை உடனடியாக எடுத்தாக வேண்டும். யானைகளின் பாரம்பரிய வலசைப் பாதைகளில் தடை ஏற்படுத்தும் செயல்பாடுகளைத் தடுக்கும் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் மிச்சமிருக்கும் அவற்றின் வாழ்விடங்களை காப்பாற்ற முடியும். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை நிபுணர் குழு அமைத்து ஆராய்ந்து அவற்றின் பரிந்துரைகளுக்கு ஏற்ப யானைகள் தடைகளின்றி கடந்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இரவு பகலாகப் போக்குவரத்து இருக்கும் மலைப் பாதைகளில் தேவையான மேம்பாலங்கள் அமைத்து அதன் கீழே யானைகள் கடக்க வழி செய்ய வேண்டும்.

யானை விரட்டும் பணியாளர்களுக்கு டார்ச் லைட், வாகனம் உள்ளிட்ட தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும். அவர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். எல்லாத் தடைகளையும் மீறி காட்டு விலங்குகள் நுழைந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தினால் சந்தை விலைப்படி இழப்பீடு வழங்க வேண்டும். சேதப்படுத்தப்படும் உடைமைகளுக்கும் சரியான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். உயிரிழப்புக்கு வழங்கப்படும் தொகையை அதிகரிக்க வேண்டும்.

தங்கள் நிலங்களில் அகழி, மின்வேலி அமைத்துக்கொள்ள விவசாயிகளுக்கு மானியம் அளிக்க வேண்டும். காட்டைவிட்டு வெளியே வரும் யானைகளை அடையாளம் கண்டு ரேடியோ காலர் பொருத்துதல் போன்ற ஆய்வுகள் மூலம் அவற்றைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும். யானைகளின் நடமாட்டத்தை அறிந்து மக்களுக்குத் தெரிவிக்க எச்சரிக்கை மணி, எச்சரிக்கை விளக்குகள் உள்ளிட்ட முன்னறிவிப்பு முறைகளை தேவையான இடங்களில் அமைக்க வேண்டும். இவைகளையெல்லாம் தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும். விவசாயிகளும் யானைகளுக்கு எதிராக காட்டும் கோபத்தை யானையின் பாதைகளை மறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வெளிப்படுத்த வேண்டும்.

யானைகள் காட்டின் உயிர்ச் சூழலைக் காப்பாற்றுகின்றன. எனவே யானைகளைப் பாதுகாப்பதன் மூலம் நமது காடும் அதன் மூலம் விளைநிலங்களும், நமது வாழ்வும் காப்பாற்றப்படுவதை விவசாயிகள் உணர வேண்டும். யானைகளே இருக்கக் கூடாது என்ற மனநிலை தவறானது. யானைகளும் வாழட்டும். நாமும் வாழ்வோம் என்ற மனநிலையே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.

Next Story