சிறப்புக் கட்டுரைகள்

பண்டைய தமிழர்களும்... பசுமை வீடுகளும்... + "||" + Ancient Tamil peoples ... Green Houses ...

பண்டைய தமிழர்களும்... பசுமை வீடுகளும்...

பண்டைய தமிழர்களும்... பசுமை வீடுகளும்...
இயற்கையின் வளத்தை சுரண்டாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் கட்டிடம் கட்டுவதன் அவசியத்தை பெரும்பாலானோர் இப்போது உணர தொடங்கியுள்ளனர். இந்த நோக்கத்தை முன் வைத்து, இயற்கை எந்த வகையிலும் பாதிக்கப்படாதவாறு அதனுடைய வளத்தை பயன்படுத்தி கொள்ளும் வீடுகளை தான் பசுமை வீடுகள் என்கிறோம்.
ஆனால் இந்த பசுமை வீடுகளை பற்றிய அறிமுகம் இல்லாமலேயே பண்டைய தமிழர்கள் கட்டிய வீடுகள் பசுமை கட்டிட கலையைப் பறைசாற்றும் வகையில் இருந்திருக்கின்றன. திண்ணை, முற்றம், உயரமான ஜன்னல், வராண்டா என இயற்கை காற்றோட்டத்துக்கும், வெளிச்சத்துக்கும் பஞ்சமில்லாத வகையில் அந்த வீடுகள் அமைந்திருந்தன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, அவைதான் பசுமை வீடுகளுக்கான சிறந்த முன்னுதாரணங்களாக இன்றளவும் இருக்கின்றன. ஒரு கட்டிடத்தை கட்டி முடித்தபின் அதை பசுமை வீடாக மாற்றுவதைவிட அதை கட்டும்போதே அதற்கான திட்டமிடலை செய்வதுதான் சிறந்தது.

பெரும்பாலான பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும்போதே கழிவுநீர் மற்றும் உப்பு நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை அமைக்க தொடங்க வேண்டும். ஆனால், தனி வீடுகளாக கட்டும்போது இடவசதி, பொருட்செலவு போன்றவற்றை காரணம் காட்டி இந்த அமைப்புகளை தவிர்த்து விடுகிறார்கள். இந்த அமைப்புகளின் அவசியத்தை வீடு கட்டுபவர்களுக்கு எடுத்துச்சொல்வது கடமை. சிமெண்டுக்கு மாற்றாக நிலக்கரி சாம்பல், சிலிகா பியூம், வார்ப்புகளில் இருந்து கிடைக்கும் மணல், இரும்பு குழம்பு கலந்த ஸ்வாக் போன்ற பொருட்களை கான்கிரீட் தயாரிக்கும்போது ஒரு பகுதியாக சிமெண்டுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு கட்டிடத்தில் வசிப்பதற்கு பல விதமான ஆற்றல்கள் தேவைப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் பசுமை வீட்டின் அடிப்படைகள் தீர்மானிக்கப்படுகின்றன. வீட்டில் அதிகமாக பயன்படுத்துவது மின்சக்திதான். ஒரு வீட்டின் மின்சார தேவையை குறைக்க வீடு கட்டும்போதே வெளிச்சமும், காற்றோட்டமும், போதுமான தட்ப வெப்பநிலையும் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். வீட்டுக்குள் வெளிச்சமும், காற்றோட்டமும் இருந்தால் பகலில் மின்சாரத்தின் தேவை குறையும். அத்துடன் மின்சாரத்துக்கு மாற்றாக சூரிய ஆற்றலையும் வீட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பசுமைக் கட்டிடத்தின் முக்கியமான அம்சம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுதான். மறுசுழற்சி செய்யப்படும் நீரை பல்வேறு விதமாக உபயோகப்படுத்தும் முறைகளை பசுமை வீடுகளில் பின்பற்ற வேண்டும். மறுசுழற்சி செய்த தண்ணீரை தோட்டங்களுக்கும், கழிவறைகளுக்கும் உபயோகிக்கலாம்.

கான்கிரீட் தளங்கள் அமைப்பதுதான் இப்போது சுலபமானதாக இருக்கிறது. ஆனால், கான்கிரீட் தளங்கள் வெப்பத்தை வீட்டுக்குள் பரப்பும் தன்மையுடன் இருக்கின்றன. இதற்கு மாற்றாக, ஜேக் ஆர்ச் கூரைகளை அமைக்கலாம். இவை செங்கற்களை கொண்டு வளைவான அமைப்பாக உருவாக்கப்படுபவை. இந்த ஜேக் ஆர்ச் மேற்கூரைகளை அமைப்பதற்கு நேரம் அதிகம் செலவானாலும் பட்ஜெட் குறைவுதான். கான்கிரீட் தளங்கள் அமைப்பதற்கு என்ன பட்ஜெட் ஆகிறதோ, அதேதான் ஜேக் ஆர்ச் மேற்கூரைகளுக்கும் ஆகும்.