காதலிக்கத் தூண்டுவதற்காக பெண்களுக்கு விடுமுறை


காதலிக்கத் தூண்டுவதற்காக பெண்களுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 10 Feb 2019 6:30 AM GMT (Updated: 9 Feb 2019 12:22 PM GMT)

சீனப் புத்தாண்டு கொண்டாடப்படும் இவ் வேளையில், தமது பெண் ஊழியர்களுக்கு ‘டேட்டிங் லீவ்’ கொடுத்து குஷிப்படுத்தியிருக்கின்றன, சில சீன நிறுவனங்கள். இந்த லீவு அவர்கள் தங்கள் காதலர்களை கண்டறிவதற்காக வழங்கப்படுகிறது.

சீனப் புத்தாண்டு கொண்டாடப்படும் இவ் வேளையில், தமது பெண் ஊழியர்களுக்கு ‘டேட்டிங் லீவ்’ கொடுத்து குஷிப்படுத்தியிருக்கின்றன, சில சீன நிறுவனங்கள். இந்த லீவு அவர்கள் தங்கள் காதலர்களை கண்டறிவதற்காக வழங்கப்படுகிறது.

சீனாவில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியின்படி புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இம்மாதம் 5-ம் தேதி தொடங்கிய இப்புத்தாண்டுக் கொண்டாட்டம், வருகிற 19-ம் தேதி வரை நீடிக்கிறது. தொலைதூர இடங்களில் பணிபுரியும் சீனர்களும் தங்கள் சொந்த இடங்களுக்குப் பயணித்து, குடும்பத்துடன் புத்தாண்டை குதூகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதற்காக, ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை விடுப்பு விடப்பட்டுள்ளது. ஆனால், சில சீன பெண் ஊழியர்களுக்கு மட்டும் வழக்கமான 7 நாள் விடுமுறையுடன், கூடுதலாக 8 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்கள் திருமணம் ஆகாதவர்கள், தங்கள் 30 வயதுகளில் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் இந்த அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. அவர்கள் தங்கள் காதலரை கண்டறிய வழங்கப்படும் ‘டேட்டிங் லீவ்’ இது. சீனாவின் ஹாங்சவ்வில் உள்ள இரண்டு நிறுவனங்கள் இவ்வாறு டேட்டிங் விடுப்பு அளித்துள்ளதாக சவுத் சைனா இதழ் தெரிவித்துள்ளது.

எல்லா நாடுகளிலும் திருமணமாகாமல் 30-ஐ தாண்டிக் கொண்டிருப்பவர்களை சமூகம் கொஞ்சம் இளக்காரமாகத்தான் பார்க்கிறது. அது நியாயமில்லை என்றாலும், அதுதான் நடக்கிறது. அதிலும் முதிர்கன்னிகள் எதிர்கொள்ளும் ஏளனப் பார்வைகளுக்கும், அலட்சியப் பேச்சுகளுக் கும் குறைவே இல்லை. சீனாவும் இதற்கு விதிவிலக்கில்லை. அங்கு, 30 வயதை நெருங்குகிற திருமணமாகாத பெண்களை இழிவாக ‘ஷெங் நு’ அல்லது ‘எஞ்சிய பெண்கள்’ என்று அழைக்கிறார்கள்.

தற்போது சீனப் பெண்கள் பலரும் தங்களுடைய தொழில்முறை வாழ்க்கையில் அதிகம் கவனம் செலுத்துவதாலும், திரு மணத்தில் நாட்டம் இல்லாமல் இருப்பதாலும், இம்மாதிரியான பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற அழுத்தத்தை சீனப் பெண்கள் சந்தித்து வருகிறார்கள். சீனாவில் முதியோரின் எண்ணிக்கை அதி கரிப்பது, வேலைத் திறன் குறைவது பற்றி அரசு கவலை அடைந்துள்ளது. அத்துடன், வேலையிலேயே மூழ்கிப் போயிருக்கிற அல்லது திருமணம் செய்யாமலே வாழும் பெண்களின் எண்ணிக்கை குறித்தும் கவனத்தில் கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக லெடா ஹாங் பிஞ்சர் என்பவர் ஒரு விரிவான புத்தகமே எழுதிவிட்டார். அவர், பெண்கள் மீதான திருமண நெருக்கடி விஷயத்தில் சீன அரசைத்தான் குற்றஞ்சாட்டுகிறார். அவர், ‘‘25 முதல் 30 வயதில் திருமணம் ஆகாமல் இருக்கின்ற பெண்கள் மீது ‘எஞ்சிய பெண்கள்’ என்று முத்திரை குத்துவது சீன அரசின் திட்டமிட்ட பிரசாரம். இது, கல்வி கற்ற பெண்கள் அனைவரும் திருமணம் செய்து, குழந்தைகளை பெற்றெடுத்து வாழ்வதற்கு அரசு எடுக்கின்ற முயற்சிகளின் ஒரு பகுதி’’ என்கிறார்.

மக்கள்தொகையில் உலகில் முதலிடத்தில் உள்ள சீனாவில் அதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஒரு தம்பதி- ஒரு குழந்தை திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு, ‘ஒரு குழந்தை கொள்கை’யை சீனா முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டாலும், அந்நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அங்கு கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் திருமணம் செய்வோரின் விகிதமும் குறைந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு ஒன்றரைக் கோடி குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டைவிட 20 லட்சம் குறைவாகும்.

ஆண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள குடும்பங்களுக்கு ஊக்கமூட்டிய கொள்கையால், மிக மோசமான பாலின ஏற்றத்தாழ்வைச் சீனா சந்திப்பதாக லெடா ஹாங் கூறுகிறார்.

‘‘சீனாவில் பெண்கள் குறைவாக உள்ளனர். அரசு புள்ளிவிவரங்களின்படியே, தற்போது குறைந்தது 3 கோடி ஆண்கள், பெண்களை விட அதிகமாக உள்ளனர்’’ என்று அவர் கூறுகிறார். இன்றைய சுமார் 140 கோடி மக்கள்தொகையில் இருந்து, அடுத்த 50 ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகை 120 கோடியாக குறையும் என்று சீன சமூக அறிவியல் கழகம் கணித் துள்ளது.

ஒரு குழந்தை கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னரும், சீனாவில் குழந்தைகள் பிறப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. சீன மக்கள்தொகையில் அதிகமானோர் முதுமை அடைவதோடு, குழந்தைப் பிறப்பு குறைவது பொது நிதி மற்றும் சமூக நலவாழ்வு அமைப்பில் பெரிய அழுத்தங்களை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில்தான் ‘டேட்டிங் லீவ்’ போன்றவற்றை அளித்து, பெண்கள் திருமணப் பந்தத்தில் இணைய ஊக்குவிக்கிறார்கள்.

ஆனால், டேட்டிங் செய்வதற்கு விடுமுறை வழங்குவது என்பது பெண்கள் ஒரு காதலரை சந்திக்க உதவுவதிலும், பின்னர் அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதிலும் எந்த விதத்தில் உதவும் என்பது குறித்த எந்தத் தெளிவும் இல்லை.

‘டேட்டிங் லீவ்’ பற்றி ஹாங்சவ் சொங்செங் பெர்பாமன்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ஹூவாங் லெய், ‘‘சில பெண் ஊழியர்கள் வெளியுலகோடு குறைவான தொடர்பையே கொண்டுள்ளனர். எனவே, தங் களின் எதிர்பாலினத்தவரோடு தொடர்பு கொண்டு நேரம் செலவிடுவதற்கு ஏற்றவாறு, அதிக நேரத்தையும், வாய்ப்பு களையும் வழங்குவதற்கு பெண் ஊழியர் களுக்கு அதிக விடுமுறை அளிக்க விரும்புகிறோம். இந்த டேட்டிங் லீவ், ஊழியர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது’’ என்று கூறுகிறார்.

இருப்பினும், இந்த முயற்சி பெரிய அளவில் பலன் கொடுக்காது என்று ஹாங் பிஞ்சர் சொல்கிறார். வித்தியாசமான பரிசோதனைகள், கொள்கைகளில் இதுவும் ஒன்று என்று அவர் குறிப்பிடுகிறார்.

‘‘ஆனால், திருணம் செய்வதற்கும், குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் அவசரப்படாத பெண்கள் சீனாவில் பெருமளவில் அதிகரித்து வருகின்றனர்’’ என்று ஹாங் பிஞ்சர் அடித்துச் சொல்கிறார்.

ஒருபக்கம் பெண்கள் எண்ணிக்கை குறைவு, மறுபக்கம் திருமணத்தில் நாட்டமில்லாத பெண்கள்.

சீன ஆண்கள் பாடு திண்டாட்டம்தான்!

Next Story