தள்ளாடும் போதையில் தடுமாறும் தமிழகம்...!


தள்ளாடும் போதையில் தடுமாறும் தமிழகம்...!
x
தினத்தந்தி 12 Feb 2019 9:48 AM GMT (Updated: 12 Feb 2019 9:48 AM GMT)

தமிழ்நாட்டில் உள்ள ஆண்களின் வேலை செய்யும் திறன் கடந்த 5 ஆண்டுகளில் 40 சதவீதத்திற்கும் மேல் குறைந்திருப்பதாக அதிர்ச்சியான புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது.

அதாவது உடல் உழைப்பு, மூளையின் செயல்படும் திறன் ஆகிய இரண்டிலுமே இப்படியோர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மதுவால் ஏற்பட்டிருக்கும் இந்த பாதிப்புக்கு எந்தத்துறையும் விதிவிலக்கல்ல. அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் பணிபுரிபவர்கள், மென்பொருள் துறையினர், உடல் உழைப்பு தொழிலாளர்கள் உட்பட அனைத்துப் பிரிவினருமே குடியால் திறன் இழப்பு எனும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இப்படி தமிழகத்தில் மது அடிமைகள் என்ற நிலைக்குச் சென்றிருப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு கோடியைத் தாண்டுகிறது. இவர்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், சிறுவர்கள் என எல்லா தரப்பினரும் உள்ளனர். இவர்களைத் தாண்டி வாரத்திற்கு ஒரு முறை குடிப்பவர்கள், விருந்து, விழாக்களில் குடிப்பவர்கள் தனி ரகம்.

முன்பு எப்போதாவது குடித்தவர்கள் கூட இப்போது அடிக்கடியோ, நாள்தோறுமோ குடிக்கத் தொடங்கி இருப்பதன் இன்னொரு நேரடி விளைவு ஆண்மைக்குறைபாடு. இதே வேகத்தில் குடிப்பழக்கம் அதிகரித்துக் கொண்டே போனால் தமிழகம் ஆண்மையற்றவர்கள் நிறைந்த மாநிலமாக மாறிவிடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதோடு 30 வயதிற்குள் விதவையாகும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதிலும் மதுவே பெரும் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் 80 சதவீதம் விபத்துகளுக்கு ஏதோ ஒரு வகையில் மதுவே காரணம் என்கிறது இன்னொரு ஆய்வு. விபத்து மட்டுமல்ல, பாதிக்கும் மேற்பட்ட தற்கொலைகளுக்குப் பின்னணியிலும் மது இருக்கிறது. கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரிப்பதிலும் மதுவின் பங்கு பெரிதாக இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்ல, பெண் குடிகாரர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. அவர்கள் குடிப்பது அரிதாக இருந்த நிலை மாறி எல்லா மட்டத்தில் இருக்கும் பெண்களும் மதுவின் பக்கம் வேகமாக ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். மகளிர் விரும்பும் மது வகைகளின் விற்பனை 23 சதவீதம் அதிகரித்திருப்பதே இதற்குச் சான்று.

கல்வியிலும் மது சத்தமில்லாமல் பெரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்துபவர்கள், பள்ளிக்குப் பிறகு கல்லூரிக்குச் செல்ல முடியாத மாணவ-மாணவியரில் பெரும்பாலானவர்கள், மது அருந்தும் தந்தையால்தான் இந்த பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். குடித்தே உயிரை விட்ட தந்தைக்கு மகனாக, மகளாக பிறந்த அவர்களால் கல்வியைத் தொடர முடியாமல் போய்விடுகிறது. சில இடங்களில் குடித்துவிட்டு மனைவியைக் கொல்லும் தந்தைகளால் பிள்ளைகள் நிர்க்கதியாகி நிற்கின்றன. இவை எல்லாம் தனிப்பட்ட நபர்களின் பிரச்சினை என்பதைத் தாண்டி மது நம் மாநிலத்தின் மிகப்பெரிய சமூக அவலமாக மாறிவருவதன் குறியீடுகள்.

முன்பு கல்லூரி காலத்தில் மதுவை முதன் முறையாக சுவைத்துப் பார்த்தவர்கள், இப்போது பள்ளிக்குப் போகும் போதே மது பாட்டில்களை கையிலெடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். மது கிடைக்கிற வாய்ப்புகள் பெருகி, தெருவுக்குத் தெரு என்கிற அளவுக்கு அரசின் மதுக்கடைகள் இருப்பதும் இதற்கான காரணி. கள்ளச்சாராயம் விற்பனையும் கிராமங்களிலும், புற நகர்ப்பகுதிகளிலும் கனஜோராக நடக்கிறது. அதாவது எந்த சிரமமும் இன்றி நடந்து போகிற தூரத்தில் ஏதோவொரு மது கிடைத்து விடுகிறது. மற்றொரு புறம் மது அருந்துதல் பற்றிய சமூகத்தின் பார்வை தலைகீழாக மாறிவிட்டதும் இதற்குத் தூண்டுகோலாக இருக்கிறது.

குடிப்பவரை மரியாதை குறைவாக பார்த்த காலம் மாறி, மது அருந்தாதவனை ஏற, இறங்க பார்க்கிற நிலை உருவாகி இருக்கிறது. முன்பெல்லாம், யாராவது தெரிந்தவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று பயந்து கொண்டே மதுக்கடைக்குப் போனவர்கள் இருந்தார்கள். கிராமங்களில் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு சாராயக்கடைக்குப் போனவர்களைப் பார்த்திருக்கிறோம். இப்போது நட்ட, நடு சாலையிலேயே எதைப்பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் வாகனங்களிலும், தரைகளிலும் அமர்ந்து குடிப்பவர்களைச் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. அவர்களுக்கும் வெட்கமில்லை. பார்ப்பவர்களுக்கும் பதற்றமில்லை. ஏனெனில் முன்பு தெருவுக்கு ஒன்றிரண்டு குடிகாரர்கள் என்ற நிலைமாறி, இப்போது வீட்டுக்கு ஒருவர் இருக்கிறார். யாருமே குடிக்காதவர்கள் உள்ள வீடு என்பதை விரல் விடாமலேயே எண்ணி விடலாம். இதில் யாரைப் பார்த்து யார் வெட்கப்படுவது.

தமிழ்நாட்டுக் குடும்பங்கள் இப்படி குடியால் குடை சாய்வதைத் தடுத்து நிறுத்தி, மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டிய அரசாங்கம் தாமே முன்னின்று மதுவை விற்கிறது. அதிலும் கொடுமையாக தீபாவளிக்கு, புத்தாண்டுக்கு, பொங்கலுக்கு என இலக்கு நிர்ணயித்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு மது விற்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் அந்த இலக்கை அதிகப்படுத்தி வருவாயில் புதுப்புது உயரங்களை எட்டிப்பிடிக்கிறார்கள்.

மது விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அவ்வப்போது நீதிமன்றங்கள் மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் கூட ‘மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் மதுவுக்கு அடிமையானவர்கள் அதிகமிருக்கின்றனர். மது விற்பனையில் கிடைக்கும் வருமானத்தை நம்பாமல் வேறு வருவாய் வழிகளை அரசு கண்டறிய வேண்டும். மதுக்கடைகளின் விற்பனை நேரத்தையும் குறைக்க வேண்டும்‘ என்று சென்னை உயர்நீதிமன்றம் கவலையோடு தெரிவித்துள்ளது. ஏற்கனவே அளித்த உத்தரவாதப்படி 2016-ம் ஆண்டிலிருந்து படிப்படியாக மூடப்பட்ட மதுக்கடைகளின் விவரங்களை அளிக்குமாறும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசின் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு மது விற்பனையால் கிடைப்பதால் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆனால் வருமானத்திற்கான மாற்று வழிகளை உடனடியாக கண்டறிய வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இத்தனை அபாய எச்சரிக்கைகளையும் கண்டுகொள்ளாவிட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் மதுவால் மிகப்பெரிய வீழ்ச்சியை மிக விரைவில் சந்திக்க வேண்டிருக்கும். ‘இல்லையில்லை; மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தவே மது விற்கிறோம்‘ என்று சொன்னால், கண்களை விற்று சித்திரங்களை வாங்குவதா புத்திசாலித்தனம் என்றே கேட்கத் தோன்றுகிறது.

- கோமல் அன்பரசன், ஊடகவியலாளர்.

Next Story