செய்முறைத் தேர்வுகள் மதிப்பெண்களை அள்ளித் தர வேண்டுமா?


செய்முறைத் தேர்வுகள் மதிப்பெண்களை அள்ளித் தர வேண்டுமா?
x
தினத்தந்தி 12 Feb 2019 3:44 PM GMT (Updated: 12 Feb 2019 3:44 PM GMT)

பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக பிளஸ்-1 மாணவர்களுக்கும், அடுத்ததாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் எளிமையாக மதிப்பெண் பெற வரப்பிரசாதமாக அமையும். ஆனால் சிறு தவறு ஏற்பட்டாலும், பரிசோதனை முடிவுகள், அளவுகள் மாறிவிடும் என்பதால் மதிப்பெண் இழப்பு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

செய்முறைத் தேர்வுகளில் சிறப்பாக செயல்படவும், முழு மதிப்பெண்கள் பெறவும் சில டிப்ஸ் இதோ...

செய்முறைத் தேர்வுக்கும், பாடவகுப்புகளுக்கும் சம்பந்தமில்லை என்று எண்ணக்கூடாது. பாட வகுப்புகளில் படித்த பாடங்களையும், பயிற்சிகளையும் செய்முறைத் தேர்வில் சொந்த முயற்சியாக செய்து பார்க்கவும், ஆய்வுகளை செய்யவும் வேண்டியதிருக்கும். எனவே ஆரம்ப கால வகுப்புகளில் இருந்து பாடங்களை உற்றுக் கவனித்தவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் கைமேல் பலனாக மதிப்பெண்களை அள்ளித் தரும் என்பதில் சந்தேகமில்லை.

எழுத்துத் தேர்வுகளைப்போல செய்முறைத் தேர்வில் ‘காப்பி’ அடிக்க முடியாது. உங்களுக்கு வழங்கப்பட்ட கேள்விகள், ஆய்வுகளை நீங்களாக செய்து பார்த்து முடிவுகளை அறிவிக்க வேண்டியிருக்கும் என்பதால் காப்பி அடிப்பது பலன்தராது.

முக்கியமான விதிகளை மனதில் ஏற்றி, வாய்ப்பாடுகள், குறியீடுகளை மனதில் வைத்திருந்தால் தேர்வுவில் நல்ல பலன்கிடைக்கும். இதற்கு நீங்கள் பாடவகுப்புகளையும், பயிற்சிகளையும் நினைவூட்டல் குறிப்பு எடுத்திருந்தால் உதவியாக இருக்கும்.

செய்முறைத் தேர்வுகளுக்கு பயிற்சியே பலன் தரும். பாட வகுப்புகளுக்கு இடையே நடத்தப்பட்ட மாதிரி செய்முறை பயிற்சிகளை புறக்கணிக்காமல் சிரத்தையுடன் செயல்பட்டவர்களுக்கு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு சிரமமாகத் தெரியாது.

இயற்பியல் செய்முறைத் தேர்வுக்கு கொடுக்கப்பட்ட அளவுகள், தீர்வு காண வேண்டியதுடன் தொடர்புடைய வாய்ப்பாடுகள், குறியீடுகள், அலகுகள் ஆகியவற்றை கவனமாகவும், சரியாகவும் கையாண்டு விடைகாண முயல வேண்டும். காந்தம், மின்சாரம் மற்றும் இயற்பியல் உபகரணங்கள் பயன்படுத்தும் விதிமுறைகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். வாய்ப்பாடு, வழிமுறைகள், விடை, அலகு எல்லாவற்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் உண்டு. விடை சரியாக கண்டுபிடித்து அலகு மற்றும் குறியீடுகளை தவறாக குறிப்பிட்டாலோ, குறிப்பிட மறந்தாலோ மதிப்பெண்களை இழக்க நேரிடலாம்.

வேதியியல் செய்முறைத் தேர்வுகளில் ரசாயனப் பொருளை படிப்படியான சோதனை முயற்சியில் இனம் காண முயல வேண்டும். அதை செயல்விளக்கமாகவும் எழுத வேண்டும். முந்தைய மாதிரி பயிற்சிகள் இதற்கு நல்ல பலன் தரும். ராசயனப் பொருளின், நிறம், பெயர், குறியீடு, வினை நிகழ்வுகளை தெளிவாக வரையறுத்து எழுதுவது முழு மதிப்பெண் பெற துணை செய்யும்.

உயிரியல் செய்முறைத் தேர்வு வகுப்புகளிலும், தாவரங்கள், விலங்குகள், அவற்றின் பாகங்கள், உறுப்புகளைப் பற்றி தெளிவான விவரங்களை பதிவு செய்வது அவசியம். ஆய்வு விவரங்களையும் தெளிவாக வரையறுக்க வேண்டும்.

செய்முறை தேர்வுகளை எண்ணி அச்சம் கொள்ளாமல் இருந்தாலே நல்ல மதிப்பெண் பெற்றுவிடலாம். இதற்கு ஆய்வகத்தில் நுழைந்ததும், கொடுக்கப்பட்ட செய்முறைப் பயிற்சியைப் பற்றி சில நிமிடங்கள் மனதில் படமாக ஓட்டிப் பாருங்கள். நீங்கள் செய்ய இருக்கும் ஆய்வு-சோதனைகளை முடிவு செய்து, அதற்கான தீர்வு இப்படி இருக்கும் என்ற ஒரு முடிவினையும் உத்தேசித்துவிட்டு பயிற்சியை தொடங்குங்கள்.

உங்கள் முடிவு அல்லது யூகம் சரியாக இல்லாவிட்டால் உடனே சோர்ந்துவிடாமல், அடுத்த பரிசோதனையை துரிதமாக செய்து விடைகாண முயற்சி செய்யுங்கள்.

பக்கத்தில் இருப்பவருடன் உங்கள் ஆய்வுகளை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவர் வேகமாக முடிக்கப்போகிறார், நமக்கு இன்னும் விடை தொியவில்லையே என கலக்கம் அடையாதீர்கள். சில பயிற்சிகள், பரிசோதனைகள் கடினமானதாகவும், முடிவுகள் எளிமையாகவும் இருக்கும். விளக்கங்களை சுருக்கமாகவும், தெளிவாகவும் கொடுத்து மதிப்பெண்களை அள்ளலாம்.

செய்முறைத் தேர்வில் சிறப்பு பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Next Story