தடுப்பூசிக்கு மாற்றாக எந்திர மாத்திரைகள்


தடுப்பூசிக்கு மாற்றாக எந்திர மாத்திரைகள்
x
தினத்தந்தி 12 Feb 2019 3:47 PM GMT (Updated: 12 Feb 2019 3:47 PM GMT)

நோய்கள் வருமுன் காப்பதே சிறந்தது என்பது பால பாடம். அப்படி பல நோய்கள் நமக்கு வருமுன் காக்க பேருதவியாக இருப்பவை தடுப்பூசிகள் (Vaccines).

தடுப்பூசிகளில் போலியோ சொட்டு மருந்து போன்ற ஒரு சிலவற்றைத் தவிர்த்து மற்றவை அனைத்தும் கடந்த சில நூற்றாண்டுகளாக ஊசி மூலமாகவே உடலுக்குள் செலுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் கைக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் ஊசி என்றாலே பயந்து நடுங்குவர் அல்லது ஓடி விடுவார்கள். ‘ஊசி போட்டால்தானே வலி தாங்க முடியாமல் மக்கள் பயப்படுகிறார்கள்’ என்று உள்ளுக்குள் சாப்பிடும் மாத்திரை வடிவில் சில தடுப்பூசிகளை விஞ்ஞானிகள் தயாரித்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, மாத்திரை வடிவில் உடலுக்குள் செல்லும் தடுப்பு மருந்துகள் ஒன்று, வயிற்றில் உள்ள அமிலத்தினால் அழிக்கப்படுகின்றன. இல்லையென்றால் குழந்தைகளால் வெளியே துப்பிவிடப்படுகின்றன.

இந்த நடைமுறைப் பிரச்சினைக்கு ஒரு வழி கண்டுபிடித்தாக வேண்டுமே என்று யோசித்த கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், நுண்ணிய அளவிலான மூலக்கூறு மோட்டார்கள் கொண்ட மற்றும் அதன்மூலம் தன்னைத்தானே உந்தித்தள்ளிக்கொள்ளும் திறன்கொண்ட எந்திர மாத்திரைகளை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

இதன்மூலம், ஒரு குறிப்பிட்ட தடுப்பூசி மருந்து உடலின் எந்த பாகத்துக்குச் செல்ல வேண்டுமோ, அந்த பாகத்துக்கு தானாகவே சென்று மருந்துகளை அதனுடைய இலக்கில் இறக்கிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

‘அது சரி, இந்த மாத்திரைகளில் உள்ள மூலக்கூறு மோட்டார்கள் இரும்பால் ஆன நட்டு, போல்டுகளால் ஆனதாக இருக்குமோ?’ என்றுதானே யோசிக்கிறீர்கள்?

இல்லை, எந்திர மாத்திரைகளில் உள்ள மூலக்கூறு மோட்டார்கள், மெக்னீசியம் துகள்கள் மற்றும் டைட்டானியம் டைஆக்சைடு ஆகிய ரசாயனங்களால் ஆனவை.

இந்த இரு ரசாயனங்களால் ஆன மூலக்கூறு மோட்டார்கள், உடலின் தண்ணீருடன் சேரும்போது வேகமாக நகரும் குமிழிகள் உற்பத்தியாகும் என்றும், அந்த வேகமான குமிழிகளே தடுப்பூசி மாத்திரைகளை அதனுடைய இலக்கை நோக்கி உந்தித்தள்ளும் உந்துசக்தியாக செயல்படும் என்றும் கூறுகின்றனர் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

அதெல்லாம் சரி, வயிற்றில் இருக்கும் அமிலம் இந்த எந்திர மாத்திரைகளை கரைத்துவிடுமே அதை எப்படி தடுப்பது?

வயிற்றில் உள்ள அமிலம் எந்திர மாத்திரைகளை கரைத்துவிடாமல் தடுக்க, விஞ்ஞானிகள் இந்த மாத்திரைகளின் மீது ரத்த உயிரணுக்களின் சவ்வை வைத்து மூடிவிட்டனர். இதன்மூலம், குடலில் உள்ள அமிலங்களால் பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுப்பு மருந்துகளை அதனுடைய இலக்குக்கு இந்த எந்திர மாத்திரைகள் கொண்டுசேர்க்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது, டைபாய்டு, காலரா உள்ளிட்ட வெகுசில நோய்களுக்கு மட்டுமே வாய்வழியாக உட்கொள்ளும் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன என்கிறது அமெரிக்காவில் உள்ள நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்.

அதனால், வலி ஏற்படுத்தாத தடுப்பு மருந்தாக இந்த எந்திர தடுப்பு மாத்திரைகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த எந்திர மாத்திரைகள் இதுவரை எலிகளின் மீதான ஆய்வுகளில் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளன.

வருகிற ஆண்டுகளில், இந்த எந்திர மாத்திரைகள் மனித பரிசோதனைகளில் வெற்றியடையும் பட்சத்தில், தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு மாற்றாக எந்திர மாத்திரைகள் பயன்படுத்தப்படும் என்றும், உடலின் நோய் எதிர்ப்பு உயிரணுக்களை தூண்டி விட்டு நோய்க்கிருமிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை வலிமையாக்குவதில், தற்போதுள்ள தடுப்பூசிகளை விட இந்த எந்திர மாத்திரைகள் சிறந்த பயனளிக்கக்கூடியவை என்றும் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

அதுமட்டுமல்லாமல், இந்த எந்திர மாத்திரைகள் மிகவும் சக்திவாய்ந்த எதிர்கால தடுப்பு மருந்துகளுக்கான ஒரு துவக்கமாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Next Story