மக்கள் மனம் கவர்ந்த வானொலி...!


மக்கள் மனம் கவர்ந்த வானொலி...!
x
தினத்தந்தி 13 Feb 2019 8:20 AM GMT (Updated: 13 Feb 2019 8:20 AM GMT)

இன்று (பிப்ரவரி 13-ந் தேதி) உலக வானொலி தினம்.

தகவல் தொடர்புக்கு இன்று செய்தித்தாள், தொலைக் காட்சி, இணையம், அலைபேசி என்று புதிதாக பல மின்னணு கருவிகள் நம்மிடையே உள்ளன. ஆனால் தொடக்க காலத்தில் வானொலி மட்டுமே இருந்தது. மார்க்கோனி தம் கண்டுபிடிப்பான வானொலியை இங்கிலாந்தில் பதிவு செய்த நாள் முதலாய், உலகெங்கும் அது விரைந்து பரவத் தொடங்கியது. நம் இந்திய திருநாட்டுக்கும் அது வந்தது. அதில் மகிழ்ச்சிக்குரிய செய்தி, அது சென்னையில் 1924-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதி ஒலிக்கத் தொடங்கியது என்பதுதான். அதன் காரணகர்த்தா இங்கிலாந்துக்கு படிக்கச் சென்ற சி.வி.கிருஷ்ணசாமி செட்டி என்பவர். தாயகம் திரும்பிய அவர், ஒலிபரப்பு கருவியின் உதிரிபாகங்களைக் கொண்டுவந்து அவற்றை இணைத்து 5 மைல் வரை (8 கிலோ மீட்டர்) கேட்கும் வண்ணம் ஒலிபரப்புச் செய்தார்.

மேட்டுக் குடிமக்கள் ரசித்த கர்நாடக இசையைக் கொடுத்தது போலவே, திரைப்படங்கள் உருவாகி அவற்றில் பாடல்கள் இடம்பிடித்தபோது ‘திரைகானம்’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தேன்கிண்ணம்’ என்ற பெயர்களில் வானொலி திரைப்படப் பாடல்களை அள்ளி வழங்கியது.

விளையாட்டுகளை ரசிக்கும் பழக்கம் மக்களிடம் இருப்பதை அறிந்துகொண்ட வானொலி, கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளை நேயர்கள் மனம் மகிழுமாறு வர்ணனைகள் மூலம் கொண்டுபோய்ச் சேர்த்தது. உலகில் முக்கிய விளையாட்டுகள் எங்கு நடந்தாலும், அங்கெல்லாம் சென்று நிகழ்ச்சிகளை நேரடியாகவும், ஒலிப்பதிவு செய்தும் வானொலி ஒலிபரப்பியது.

தலையார்கான், பியர்சன் சுரேட்டா போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்நாளைய அட்வகேட் ஜெனரல் கோவிந்த் சுவாமிநாதன் என்ற ஹாக்கி விளையாட்டு வர்ணனையாளர் போன்றவர்களை அந்தக் காலத்துத் தலைமுறையைச் சேர்ந்த வானொலி நேயர்கள் உச்சிமேல் வைத்துப் புகழ்ந்ததை என்றும் மறக்கமுடியாது.

சென்னை வானொலி 1938-ல் தொடங்கிய போதும், திருச்சி வானொலி 1939-ல் தொடங்கியபோதும் மக்களிடையே போதுமான ரேடியோ பெட்டிகள் இருக்கவில்லை. அதனால் அந்த நிலையங்களை தொடங்கி வைத்த அந்நாளைய ‘பிரதமர்’ (முதல்-அமைச்சர்) ராஜாஜி, தம் தொடக்க உரையில், ‘கிராமங்களில் ஊர்முழுதும் கேட்கும்படியாகக் கோவிலிலோ, ஊர்ச்சாவடியிலோ அல்லது வேறு நல்ல இடத்தில் ஊருக்குப் பெரிய மனிதரான ஒருவர், தர்மமாக ஒரு பெட்டி வாங்கி அமைத்திட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

வானொலிப் பெட்டி வைத்திருந்தவர்கள் தபால் நிலையம் சென்று ஆண்டுக்குப் பத்து ரூபாய் செலுத்தி லைசன்ஸ் வாங்கி வரவேண்டும். வசதியானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெட்டி வைத்திருந்தால் அதற்குச் சலுகைக்கட்டணமாக ரூபாய் மூன்றரை கட்டினால் போதும். ஆனால் காலப்போக்கில் ரேடியோ லைசன்ஸ் முறை கைவிடப்பட்டது. வானொலி பொதுச்சேவை புரியத்தொடங்கிய கட்டத்தில், தனக்கு மூன்று இலக்குகளை வகுத்துக்கொண்டது. தகவல் தருதல், கற்பித்தல், மகிழ்ச்சியூட்டல் என்பவை அவை.

செய்திகளைக் கேட்க மக்களிடம் இருந்த ஆர்வம் சொல்லிமாளாது. செய்தி உடனுக்குடன் சொல்லப்பட வேண்டும். அதே சமயம் தவறான செய்தியும் இடம்பெற்றுவிடக் கூடாது. பி.பி.சி. வானொலியிடம் கற்றுக்கொண்ட அந்த இலக்கணத்தை ‘ஆல் இன்டியா ரேடியோ’ செவ்வனே செயல்படுத்தி வந்துள்ளது. அதனால் அதன் செய்திக்கு முக்கிய தருணங்களில் அதிக முக்கியத்துவம் இன்றும் கிடைத்து வருகிறது. பரபரப்பு, யூகங்கள் ஆகியவற்றுக்கு அங்கு இடமில்லை. வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் நம் வானொலிச் செய்திகளையே மக்கள் நம்பி வந்துள்ளார்கள்.

உதாரணமாக 2015 டிசம்பரில் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்தபோதும், அதற்கு முன்னர் சுனாமி தமிழ்நாட்டுக் கடற்கரையோர இடங்களைத் தாக்கிய போதும் மக்கள் அகில இந்திய வானொலியின் செய்திகளை நம்பியே செயல்பட்டார்கள்.

காந்தியடிகள் 1948 ஜனவரி 30-ந் தேதி துப்பாக்கி குண்டுக்கு இரையானது, அமெரிக்காவில், ஜான் எப் கென்னடி 1963 நவம்பர் மாதம் சுடப்பட்டு இறந்தது, இந்தியப் பிரதமர் நேரு 1964 மே மாதத்தில் நெஞ்சுவலியால் மறைந்தது போன்ற நிகழ்ச்சிகளை வானொலி உடனுக்குடன் வழங்கியது. காந்தியடிகளின் அஸ்திக் கலசம் 1948-ம் ஆண்டு பிப்ரவரியில் திருச்சிக்கு எடுத்துவரப்பட்டு காவிரியில் கரைக்கப்பட்டபோது, திருச்சி வானொலி கொத்தமங்கலம் சுப்புவை வைத்து நேர்முக வர்ணனை செய்ததை அந்நாளைய வானொலி நேயர்கள் கேட்டு மனம் நெகிழ்ந்தார்கள். ‘சுப்பு’ பின்னாளில் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படக் கதையாசிரியராகி புகழ்பெற்றார் என்பது ஒரு கொசுறுச் செய்தி.

பேரறிஞர் அண்ணா இறுதி ஊர்வலக் காட்சியைச் சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் மொட்டை மாடியில் ஏறி நின்று, நான் வர்ணனை செய்ததை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்வது எனக்கு ஒருவித மனநிறைவைத் தருகிறது. அமெரிக்க வானொலியில் நான் சேர்ந்தபோது, இருபெரும் நிகழ்வுகள் அங்கு நடந்ததையும், அவற்றை வானொலி மூலம் உலகத் தமிழ் நேயர்கள் கேட்டு அனுபவித்ததையும் இங்கு குறிப்பது பொருத்தமானதே. நிலாவில் முதன்முதலாக நீல் ஆர்ம்ஸ்டராங் காலடி வைத்த நிகழ்வு, அதற்குச் சில மாதங்கள் முன் ஐசன்ஹோவர் என்ற முன்னாள் அதிபரின் மறைவு ஆகிய இரண்டுக்கும் நான் வர்ணனை செய்தது என் அமெரிக்க வானொலிப் பணியில் குறிப்பிடத்தக்கவை.

மக்களில் பெரும்பான்மையினரான வேளாண் பெருமக்களையும் வானொலி ஈர்த்துக்கொண்டது தனிக்கதை.

மலேசியாவில் காலமான தன் சுற்றத்தாரின் உடைமைகளை ஒருவர் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அதில் இருந்த பல பொருள்களில், புதுவிதமான நெல்லும் ஒரு பையில் காணப்பட்டது. அதைத் தனியாக விதைத்துப் பார்த்ததில், விளைச்சல் அதிகம் இருந்ததும், சுவையும் மணமும் சிறந்திருந்ததும் தெரியவந்தது. அதை அறிந்த திருச்சி வானொலி, அதைப்பற்றி தன் ஒலிபரப்பில் தொடர்ந்து ஒலிபரப்பி வந்தது. அந்த நெல்லே பின்னாளில் ‘ரேடியோ நெல்’ என்று பெயர் பெற்றது. அதில் ஈடுபாடு காட்டி தொடர்ந்து ஒலிபரப்பு செய்த டி.கணபதி என்ற பண்ணை இல்ல அலுவலருக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகம் ‘டாக்டர்’ பட்டம் வழங்கிச் சிறப்பு செய்தது. 

முனைவர் வெ.நல்லதம்பி (மூத்த ஊடக வல்லுனர்).

Next Story