சிறப்புக் கட்டுரைகள்

இடஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் போர்க்கோலம் + "||" + Gujjar wars to ask reservation

இடஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் போர்க்கோலம்

இடஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் போர்க்கோலம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது நாடு முழுவதும் விவாத பொருளானது. அந்த பரபரப்பு அடங்கிய ஓரிரு நாட்களில் மற்றொரு இட ஒதுக்கீடு விவகாரம் பூதாகரமாக வெடித்து இருக்கிறது.
வட மாநிலங்களில் கணிசமாக வசித்து வரும் குஜ்ஜார் இனத்தினரின் போர்க்கோலம்தான் அது.

மேய்ச்சல் மற்றும் விவசாய தொழிலில் ஈடுபடும் குஜ்ஜார் இன மக்கள் இந்தியாவின் ராஜஸ்தான், அரியானா, மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கணிசமாக வசித்து வருகின்றனர். இதில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் சுமார் 21 லட்சம் குஜ்ஜார்கள் வசிப்பதாக கணக்கிடப்பட்டு இருந்தது. மாநில மக்கள் தொகையில் இது 8 சதவீதம் ஆகும்.

பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானின் வடகிழக்கிலும் கூட குஜ்ஜார்களில் ஒரு பிரிவினர் வாழ்கின்றனர். இந்து, இஸ்லாம், சீக்கிய மதங்களை பின்பற்றி வரும் குஜ்ஜார்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் பேசப்படும் மொழியை பேசும் திறன் பெற்றிருக்கிறார்கள். எனினும் இவர்களுக்கு என பொதுவாக குஜ்ஜாரி மொழி வழக்கில் உள்ளது.

இந்தியாவில் பெரும்பாலும் இவர்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கணக்கிடப்பட்டு இருந்தாலும், காஷ்மீர் மற்றும் இமாசலபிரதேசத்தின் சில பகுதிகளில் வாழும் குஜ்ஜார் இனத்தினர், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதைப்போல ஒட்டுமொத்த குஜ்ஜார் இன மக்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

இது தற்போது போராட்டமாக வெடித்து இருக்கிறது. குஜ்ஜார் இனத்தினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து குஜ்ஜார், ராய்கா ரேபாரி, காடியா லோஹர் ஆகிய சமூகத்தினர் கடந்த 8-ந் தேதி ராஜஸ்தான் முழுவதும் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

ரெயில் மறியல், சாலை மறியல், தர்ணா உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை அந்த சமூகத்தினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 2 நாட்கள் அமைதியாக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் கடந்த 10-ந் தேதி தோல்பூர் மாவட்டத்தில் ஆக்ரா- மோரேனா நெடுஞ்சாலையில் நடந்த மறியலில் வன்முறை வெடித்தது.

போராட்டக்காரர்கள் சிலர் வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டனர். சில போராட்டக்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை கல் வீசி தாக்கியதில் 4 வீரர்கள் காயம் அடைந்தனர். மேலும் போலீசாருக்கு சொந்தமான 3 வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மிகவும் வீரியமாக நடந்து வரும் குஜ்ஜார்களின் போராட்டம் நேற்று 6-வது நாளை எட்டியது. சாலை மற்றும் ரெயில் தண்டவாளங்களை ஆக்கிரமித்து இருக்கும் போராட்டக்காரர்களால், வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் மற்றும் வாகன போக்குவரத்து முடங்கி இருக்கிறது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக மலர்னா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. குஜ்ஜார்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் பகுதிகளில் பதற்றமாக சூழ்நிலை காணப்படுவதால் ஏராளமான போலீசார், ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, மாநில நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் குழுவினர், அராக்‌ஷன் சங்ரிஷ் சமிதி அமைப்பின் தலைவர் (குஜ்ஜார் சமூக மக்கள் தலைவர்) கிரோரி சிங் பன்சிலா மற்றும் அவரது குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

“எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு அவகாசம் கொடுத்திருந்தோம். ஆனால் அரசு எதையும் செய்யவில்லை. தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் அரசுக்கு அக்கறை இல்லை என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

ஆனால் காங்கிரஸ் முதல்- மந்திரி அலோக் கெலாட், “தற்போது குஜ்ஜார் சமூகத்துக்கு கல்வி, வேலை வாய்ப்பில் ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. போராட்டக்காரர்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜ்ஜார்களின் போராட்டத்தால் வன்முறை மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு எட்டப்பட வேண்டும். எந்த ஒரு போராட்டத்துக்கும் வன்முறை தீர்வாகாது. பேச்சுவார்த்தையின் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை போராட்டக்காரர்கள் உணர வேண்டும்.

மேலும் இது போன்ற போராட்டங்களை மற்ற மாநிலங்களில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருபவர்களும் உற்று கவனித்து வருகிறார்கள். இந்த வன்முறை சம்பவங்கள் மற்ற மாநில போராட்டக்காரர்களையும் தூண்டுவது போல அமைந்துவிடும். இது ஒரு விரும்பத்தகாத முன் உதாரணமாகவும் இருந்து விடும் வாய்ப்பும் உள்ளது.

எனவே போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தங்களது போராட்டத்தை நடத்த வேண்டும். அரசுடன் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன் வரவேண்டும். மாநில மக்க ளின் நலன் கருதி இருதரப்பும் விட்டுக்கொடுத்து போராட்டத்தை விரைந்து முடிக்க ஆவன செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

73 உயிரை பலி வாங்கிய போராட்டம்

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக 2003-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜனதா வாக்குறுதி கொடுத்தது. ஆனால் அது நிறைவேற்றப்படாததால், 2006-ம் ஆண்டு குஜ்ஜார்கள் இட ஒதுக்கீடு போராட்டத்தில் குதித்தனர். இது 2007-லும் தொடர்ந்தது.

எனினும் 2008-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. போலீசார் உள்பட 73 பேர் இந்த போராட்டத்தின் போது உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து 2010 மற்றும் 2015-ம் ஆண்டிலும் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்தது. எனினும் மாநில அரசின் பேச்சுவார்த்தையால் அந்த நேரத்தில் மட்டுப்பட்டு இருந்தது.

சேலம் ஆ.பவானி.