புற்றுநோய்க்குத் தீர்வு தரும் மரபணு மாற்றிய கோழி முட்டை?


புற்றுநோய்க்குத் தீர்வு தரும் மரபணு மாற்றிய கோழி முட்டை?
x
தினத்தந்தி 16 Feb 2019 10:29 AM GMT (Updated: 16 Feb 2019 10:29 AM GMT)

மூட்டு வலி, சிலவகை புற்றுநோய்களுக்கு மருந்து தரும் முட்டைகளை இடும் கோழிகளை மரபணு மாற்றத்தின் மூலம் உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதைக் காட்டிலும் இந்த மருந்துகள் முட்டையாக இடப் படும்போது பல மடங்கு விலை மலிவானதாக உள்ளதாம்.

வழக்கமாக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளைப் போன்று இந்தக் கோழிகள் துன்புறுத்தப்படமாட்டாது, நன்றாக கவனித்துக் கொள்ளப்படும் என்கிறார்கள்.

அதிக பயிற்சிபெற்ற தொழில்நுட்பவியலாளர்களால் இவற்றுக்கு உணவும், நீரும் வழங்கப்பட்டு, தினமும் நன்றாக கவனித்துக்கொள்ளப்படும். எனவே இக்கோழிகள் வசதியான வாழ்க்கையை வாழும்.

மேலும் இந்தக் கோழிகள், எப்போதும் போலவே முட்டைகளை இடுகின்றன. எனவே அவற்றின் ஆரோக்கியத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.

மரபணு மாற்றப்பட்ட ஆடுகள், முயல்கள் மற்றும் கோழிகள், முட்டை மற்றும் பால் மூலம் மனிதர்களுக்குத் தேவையான புரதத்தை வழங்க முடியும் என விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர்.

இந்தப் புதிய முயற்சி பழைய வழிமுறைகளைக் காட்டிலும் அதிக திறன் கொண்டது என்றும், குறைவான செலவில் நல்ல பலனைத் தரும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இம்மாதிரியான முட்டைகளுக்கான செலவு, மருந்து தயாரிக்கும் செலவைக் காட்டிலும் பல மடங்கு குறைவாக இருக்கும். எனவே ஒட்டுமொத்தமாக தயாரிப்புச் செலவுகள் குறையும் என எதிர்ப்பார்ப்பதாக எடின்பரோவில் உள்ள ரோஸ்லின் டெக்னாலஜி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹெரோன் கூறினார்.

தொழிற்சாலைகளில் மருந்துகளைத் தயாரிக்க சுத்தமான அறைகளை உருவாக்கும் செலவைக் காட்டிலும் கோழிப் பண்ணைகளை உருவாக்குவதற்கான செலவு குறைவுதான்.

பொதுவாக பல நோய்களுக்குக் காரணம், நமது உடல் தானாகவே சில வேதிப்பொருட் களையும், புரதங்களையும் உற்பத்தி செய்யாததுதான். அம்மாதிரியான நோய்கள், புரதங்களைக் கொண்ட மருந்துகளைக் கொண்டு சரிசெய்யப்படும். அந்த மருந்துகள், மருந்து நிறுவனங் களால் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றன.

ஹெரோன் மற்றும் அவரது குழுவினர், மனித உடலில் புரதத்தை உற்பத்தி செய்யும் மர பணுவை, கோழி முட்டையில் வெள்ளைக் கருவை உற்பத்தி செய்யும் டி.என்.ஏ.வில் செலுத்தினர்.

பின்னர் கோழி முட்டையில் வெள்ளைக் கருவைப் பிரித்து பார்த்தபோது, கோழியில் அதிகப்படியான புரதம் இருப்பதை ஹெரோன் கண்டு பிடித்தார்.

அதில் மனித நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான இரண்டு வகையான புரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று, வைரஸ் கிருமிகள் மற்றும் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகிறது. மற்றொன்று, சேதமடைந்த திசுக்கள் தானாக சரி செய்துகொள்ள உதவுகிறது.

ஒரு கோழி ஓராண்டுக்கு 300 முட்டைகளை இடும். எனவே இதை வணிகரீதியாக செயல்படுத்துவது எளிது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மனித உடலுக்குத் தேவையான மருந்துகளை உருவாக்குவது மற்றும் அதற்கான நெறிமுறைகளைச் செயல் படுத்துவதற்கு 10 முதல் 20 ஆண்டுகள் ஆகும். இந்தக் கோழிகளை, மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகளுக்கான மருந்துகளை தயார்ப் படுத்தவும் பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டிபயாட்டிகளுக்குப் பதிலாக இந்த மருந்துகள் விலங்குகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

விலங்குகளின் பாதிக்கப்பட்ட நுரையீரல் மற்றும் சிறுநீரக பாகங்களைச் சரிசெய்ய இந்த மருந்து பயன்படும். தற்போது அந்த மருந்து களின் விலை அதிகம். எனவே இந்த மருந்துகளை உருவாக்குவது மிகவும் பயனளிக்கும்.

‘‘தற்போது நாங்கள் மனிதர்களுக்குத் தேவையான மருந்துகளைத் தயாரிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்த மருந்து கண்டுபிடிப்புக்குத் தேவையான புரதங்களை கோழிகள் எளிதில் வழங்க முடியும் என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது’’ என்கிறார், பேராசிரியர் ஹெலன்.

ஆக, இனிமேல் கோழி முட்டையும் குணமாக்கும்.

Next Story