உலக கோப்பை கிரிக்கெட்: தயாராகும் அணிகள்


விராட் கோலி; டோனி
x
விராட் கோலி; டோனி
தினத்தந்தி 17 Feb 2019 11:11 AM GMT (Updated: 17 Feb 2019 11:11 AM GMT)

ஆண்டு முழுவதும் கிரிக்கெட் நடந்தாலும் உலக கோப்பை போட்டிக்கு உள்ள மவுசே தனி தான்.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இங்கிலாந்தில் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. குட்டி அணிகள் கழற்றி விடப்பட்டு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் மட்டுமே இந்த முறை கோதாவில் குதிக்கின்றன. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஜிம்பாப்வே, அயர்லாந்து தகுதி பெறவில்லை. உறுப்பு நாடுகளுக்கும் இடமில்லை.

சிறிய அணிகள் இன்றி நடக்கும் முதல் உலக கோப்பை இது தான். அதுவும் 1992-ம் ஆண்டு பாணியில் எல்லா அணிகளும் லீக்கில் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். அதனால் பரமவைரிகள் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றிலேயே நேருக்கு நேர் சந்திக்க இருப்பது (ஜூன் 16-ந்தேதி, மான்செஸ்டர்) உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை உசுப்பேற்றும்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தன்னை பட்டை தீட்டி தயார்படுத்தி வருகின்றது. உலக கோப்பைக்கு முன்பாக இன்னும் குறைவான ஒரு நாள் போட்டிகளே உள்ளன. உதாரணமாக, இந்திய அணிக்கு 5 ஆட்டங்களும், இங்கிலாந்துக்கு 11 ஆட்டங்களும், ஆஸ்திரேலியாவுக்கு 10 ஆட்டங்களும், தென்ஆப்பிரிக்காவுக்கு 5 ஆட்டங்களும் எஞ்சியுள்ளன. இந்த போட்டிகளில் உலக கோப்பையை மனதில் வைத்தே வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள்.

இது ஒரு புறம் என்றால், இன்னொரு பக்கம் உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு யாருக்கு? என்பது குறித்து நிபுணர்களும், முன்னாள் வீரர்களும் நாள்தோறும் விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கணிப்பில் இப்போதைக்கு இந்தியாவுக்கு ‘நம்பர் ஒன்’ கொடுத்திருக்கிறார்கள். காரணம், அண்மை காலமாக இந்திய அணியின் வீறுநடை தான்.

கடந்த உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த அணி இந்தியாதான் (54 வெற்றி). அத்துடன் கடைசியாக விளையாடிய 13 இரு நாட்டு தொடர்களில் 12-ல் இந்தியா மகுடம் சூடியிருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்க மண்ணில் கைப்பற்றிய தொடர்களும் அடங்கும்.

கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷமான பேட்டிங்கும், விக்கெட் கீப்பர் டோனியின் அனுபவமும், மணிக்கட்டை பயன்படுத்தி சுழல் ஜாலம் காட்டும் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவின் வித்தையும், பும்ரா, முகமது ஷமியின் துல்லியமான தாக்குதலும், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், கேதர் ஜாதவ் போன்ற ஆல்-ரவுண்டர்கள் அங்கம் வகிப்பதும் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக சரியான கலவையில் அணி அமைந்திருப்பது இன்னொரு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான அணிகள் உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் யார்-யாரை சேர்ப்பது என்பதில் இன்னும் குழம்பிக்கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணியில் மட்டும் அந்த 15 வீரர்கள் ஏறக்குறைய அடையாளம் காணப்பட்டு விட்டனர்.

கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே அதிக வாய்ப்பு என்று ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் கட்டியம் சொல்லி இருக்கிறார்.

வெற்றி வாய்ப்பில் அடுத்த இடத்தை இங்கிலாந்து பெறுகிறது. உள்ளூர் சீதோஷ்ண நிலை இந்த அணிக்கு அனுகூலமான விஷயம். அது மட்டுமின்றி முதலில் ‘பேட்’ செய்ய அடியெடுத்து வைத்தால் 300 ரன்களை குறி வைத்து ருத்ரதாண்டவம் ஆடுவது அவர்களின் இன்னொரு ஸ்பெஷல். கடந்த உலக கோப்பைக்கு பிறகு 300 ரன்களுக்கு மேல் அதிக தடவை (32 முறை) குவித்த அணி இங்கிலாந்து தான். இதில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக சாதனை ஸ்கோராக 481 ரன்கள் குவித்து மலைக்க வைத்ததும் அடங்கும். கேப்டன் இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ் என்று அதிரடி சூரர்கள் அந்த அணியில் அணிவகுத்து நிற்கிறார்கள்.

நியூசிலாந்தையும் குறைத்து மதிப்பிட முடியாது சமச்சீரான கலவையில் வீரர்களை பெற்றுள்ள அணிகளில் நியூசிலாந்தும் ஒன்று. 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து எப்போது வெகுண்டு எழும் என்பதை கணிப்பது கடினம்.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு இது போதாத காலம். தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு போய் உள்ள அந்த அணிக்கு பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தடையை அனுபவித்து வரும் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் நல்ல நிலையுடன் அணிக்கு திரும்பினால் தான் தலை நிமிர முடியும். அதனால் இப்போதைக்கு ஆஸ்திரேலியாவை யாரும் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை.

முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் மீதான கவனமும் தற்சமயம் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது என்பதில் மறுப்பதற்கில்லை.

உலக கோப்பை திருவிழாவிற்கு முன்பாக ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதில் பாகிஸ்தானை தவிர்த்து மற்ற நாட்டு அணியினர் இந்திய வீரர்களுடன் இணைந்து பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டியின் போது முக்கியமான வீரர்கள் யாராவது காயம் அடைந்தால், அது அந்த அணியின் உலக கோப்பை வெற்றி வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இந்த சீசனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஐ.பி.எல்.-ல் குறைந்த காலமே தங்களது வீரர்களை விளையாட அனுமதிப்பது என்ற முடிவில் இருக்கின்றன. இந்திய கிரிக்கெட் வாரியமும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உடல்தகுதி சிக்கல் வந்து விடக்கூடாது என்பதற்காக சுழற்சி முறையில் வாய்ப்பு அளிப்பது குறித்து யோசிக்கிறது.

நட்சத்திர வீரர்கள் காயத்தில் சிக்கி உலக கோப்பையில் விளையாட முடியாமல் போனால் மேற்கண்ட கணிப்புகளும் மாறும், காட்சிகளும் மாறும் என்பதில் சந்தேகமில்லை!

Next Story