விரல் ரேகை கடவுளின் முத்திரை...!


விரல் ரேகை கடவுளின் முத்திரை...!
x
தினத்தந்தி 18 Feb 2019 7:09 AM GMT (Updated: 18 Feb 2019 7:09 AM GMT)

வெளியே வந்தால் உள்ளே செல்ல முடியாதது தாயின் கருவறை. உள்ளே சென்றால் வெளியே வர முடியாதது கல்லறை. இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள மனித வாழ்க்கையில் விரல் ரேகையைப்பற்றி தெரிந்து கொள்ளாதவன் மனித வாழ்க்கையை வீணடித்து விட்டான் என்று கருதுகிறேன்.

நம் மனித உடலிலே கை, கால் பாதங்களிலும், விரல்களிலும் சொரசொரப்பான வெள்ளை தோல்களின் மேல் பகுதியில் உற்று நோக்கினால் உழுத நிலம் போல மேடு பள்ளங்கள் அமைந்திருக்கும். இந்த மேல் தோல் நிறமற்றதாக இருக்கும். இந்த மேல் தோள்களின் மேல் உரோமங்கள் முளைத்திருக்காது. மாறாக வியர்வைத் துவாரங்கள் நெருக்கமாக இருக்கும். இதில் எளிதில் புலப்படாத மெல்லிய “மேடான கோடுகள்” மெல்லிய “பள்ளமான கோடுகள்” மற்றும் கண்ணுக்கு எளிதில் புலப்படக்கூடிய தடிப்பான கோடுகள் (ஜோசியம் பார்க்கும் கோடுகள்) அமைந்துள்ளது. இந்த ஜோசியம் பார்க்கும் தெளிவான தடிப்பான கோடுகள் மட்டும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இந்த கைகால் பாதங்களிலும் விரல்களில் உள்ள ரேகைகள் ஒரு பொருளை நழுவாமல் கெட்டியாக பிடித்துக்கொள்ள உதவுகிறது. இவை மிருகங்களுக்கும் உண்டு. இந்த விரல் ரேகைகள் கை, கால், பாதம் மற்றும் விரல்களில் இல்லையென்றால் இறந்து பிறந்திருப்பதற்கு சமம். விரல் ரேகை என்பது கடவுளின் முத்திரை. இதைப்பற்றி விரிவாக வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது.

விரல் ரேகை அறிவியல் என்பது அழிக்க முடியாத, மாறாத கடவுள் படைப்பின் அதிசயம். ஆனால் உண்மை மற்றும் விஞ்ஞானம். மனித குலம் இந்த விஞ்ஞானத்தை அறியாததால் விதவிதமான குற்றங்கள் வேர் விடுகின்றன. சத்தியம், தர்மம், சமாதானம், அமைதி, மகிழ்ச்சி தேய்ந்துகொண்டே வருகிறது. சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சந்தியா கொலை வழக்கில் அவரது தலை மற்றும் மீதம் உள்ள உடல் பாகங்கள் கிடைக்காமல் கொலை செய்யப்பட்டது சந்தியாதான் என்பதை போலீசாரால் நிரூபிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. சந்தியா கொலை வழக்கில் அவரது தலை, உடல் கிடைத்தால் தான் சந்தியா கொலை செய்யப்பட்டதை கோர்ட்டில் நிரூபிக்க முடியும் என்பது இல்லை. அவருடைய கை கிடைத்து உள்ளதால் அதில் உள்ள ரேகையை வைத்தே உறுதிப்படுத்திவிடலாம். சந்தியாவின் மீட்கப்பட்ட கையில் உள்ள கை ரேகையை எடுத்து ஆதார் அட்டை, பாஸ்போர்ட், சொத்து பத்திரங்களில் உள்ள அவரது கைரேகையுடன் ஒப்பிட்டு அது சந்தியாதான் என்பதை நிரூபிக்கலாம். இது போன்று பல வழக்குகளில் கைரேகை மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

விரல் ரேகைக்கு முக்கியத்துவம் கொடுக்காத நாடு முன்னேறாத நாடு. இக்கண்டுபிடிப்பிற்காக உயிரை பணயம் வைத்தவர்கள் பலநூறு விஞ்ஞானிகள். பூமியில் இறைவன் படைப்புகள் அனைத்தும் மாறும் தன்மை கொண்டது. ஆனால் விரல் ரேகை விஞ்ஞானம் மட்டும்தான் மாறாத்தன்மை கொண்டது. அப்படி என்ன உண்மை தன்மையான விஞ்ஞானம் புதைந்து கிடக்கிறது என்பதை காண்போம்.

பிறப்பு முதல் இறப்பு வரை விரல்ரேகை மாறாது. ஒரு மனிதனின் ஒரு விரலில் உள்ள ரேகை, அம்மனிதனின் மற்ற விரல்களுடனோ அல்லது உலகத்தில் உள்ள வேறு எவருடனோ ஒத்துப்போகாது. மேல்தோல் உரிந்தாலோ அல்லது காயமடைந்தாலோ மீண்டும் பழைய நிலையை பெற்று விடும். மாறாது. இந்த விரல் ரேகை மூன்று அடிப்படை தத்துவங்களை வைத்துக்கொண்டு, இறந்தவர் யார் என்பதை கண்டறியலாம். குறிப்பாக காவல் துறைக்கு குற்றங்களை கண்டுபிடித்து ஊர்ஜிதம் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பேருதவியாக இருக்கும்.

விஞ்ஞானி பெர்டிலான் முறைப்படி ஆதி காலத்தில் மனிதனின் தனித்தன்மை அடையாளத்திற்காக விலை உயர்ந்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. டெசிமல் அளவு எடுக்க அதிகம் படித்தவர் தேவை. அளவு முறைகள் வேறுபடும். நேரம் அதிகமாகும். இது போன்ற வேதனைகளை எதிர்கொள்ள, மிகவும் சிக்கனமாக வெள்ளைத்தாள், கருப்புமை, ஒரு மேஜை, ரப்பர் உருளை இவற்றை வைத்துக்கொண்டு விரல் நுனியை மையில் உருட்டி மீண்டும் வெள்ளைத்தாளில் பத்து கை விரல்களையும் ஒன்றன் பின் ஒன்றை உருட்டி எடுத்தால் அதுவே அந்த நபரின் விரல்ரேகை தாள். இந்த விரல்ரேகையில் நான்கு பிரதான வடிவங்கள் உள்ளன. அவை முறையே 1. வில் வடிவம், 2) லாட வடிவம், 3) சுழல் வடிவம், 4) கலப்பட வடிவம். இந்த வடிவங்களை வைத்து ஹென்றி என்ற விஞ்ஞானி கூறிய முறையில் வகைபாடு செய்து காவல்துறை விரல்ரேகை கூடத்தில் குற்றவாளிகளின் விரல் ரேகை தாள்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகள் விரல்ரேகை பதிவு மட்டும் இருக்கும். ஒரு நிமிடத்தில் காவல் துறைக்கு சந்தேகமான நபரின் விரல்ரேகை தாளுடன் ஒப்பிட்டுப்பார்த்து கண்டுபிடித்து விடலாம். மேலும் ஒருவரின் 10 விரல் ரேகைகளையும் தனித்தனியாக ஸ்காட்லாண்டு யார்டு விஞ்ஞானி ஹேர் பாட்லி யால் கண்டுபிடிக்கப்பட்ட வகைபாடுபடி, குற்றவாளிகளின் விரல் ரேகைதாள்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. கொலை, கொள்ளை திருட்டு நடந்த இடங்களில் வெள்ளை நிறத்தூள், கருப்பு நிறத்தூள் கொண்டு விரல் ரேகைகளை நிழற்படங்கள் எடுத்து அவற்றை மேற்கண்ட குற்றவாளிகளின் விரல் ரேகையுடன் ஒப்பிட்டுப்பார்த்து உண்மை குற்றவாளியை ஊர்ஜிதமாக கண்டுபிடித்து விடலாம். மேலே கூறியவை அனைத்தும் நிரந்தரமான முறைகள். ஆனால் தற்சமயம் கணினி மூலம் கண்டுபிடிக்கும் முறை, பலகோடி செலவுடன் வந்தாலும் கணினி கூறுவதை ஒப்பிட்டுப்பார்த்து ஊர்ஜிதம் செய்வதற்கு மனித முயற்சி தேவை. மனித குல நாகரிக ஆரம்பம் முதல் பல்வேறு வகையில் விரல்ரேகை பயன்பாட்டில் இருந்திருக்கிறது. பல விஞ்ஞானிகள் உயிரை பணயம் வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு வெற்றி அடைந்ததின் விளைவாக 22.8.1895 அன்று உலகிலேயே சென்னையில்தான் குற்றப்புலனாய்வுத் துறையில் வட்டாரக் காவல்துறை அதிகாரி பொறுப்பில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் இ.ஏ.சுப்ரமணிய ஐயரின் பெரும் முயற்சியால் விரல்ரேகை பதிவுகளைப் பதிவு செய்யும், வகைப்பாடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இவருக்கு சர்.ஈ.ஆர்.ஹென்றி ஆசிரியராக இருந்து பயிற்சி அளித்தார். ஆனால் இந்திய அரசாங்க இசைவு பெற்று 12.6.1897 அன்று கொல்கத்தாவில் உதயமாகியது. அதன் பிறகுதான் உலகில் ஸ்காட்லாண்டு யார்டில் 1901-லும், அமெரிக்காவில் 1903-லும் விரல்ரேகை கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. உலகம் முழுவதும் 1908-க்குள் விரல்ரேகை கூடங்கள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் தற்சமயம் விரல்ரேகை பணியில் இருப்பவர்கள் திகைக்கும் சம்பளம், வரம்புக்கு மீறிய பதவி உயர்வு, வாகன வசதி ஆகியவை நிரம்பி வழிகிறது. தங்கள் நாட்டுப்பலன் கருதி, மேலும் அதிக மணி நேரங்கள் நேர்மையாக உழைத்தார்களேயானால் இந்த நாடு நலம் பெரும். காவல்துறைக்கு குற்றங்களை கண்டுபிடிக்க பேருதவியாக இருக்கும். இந்த விரல்ரேகை விஞ்ஞானம் கடல் போன்றது. ஒருதுளியை மட்டும் சிதறியிருக்கிறேன். இந்த விஞ்ஞானம் உண்மையானது. சத்தியமானது.

- எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு, விரல் ரேகை நிபுணர்.

Next Story