கல்வெட்டில் கங்கை கொண்ட சோழப் பேராறு...!


கல்வெட்டில் கங்கை கொண்ட சோழப் பேராறு...!
x
தினத்தந்தி 20 Feb 2019 6:06 AM GMT (Updated: 20 Feb 2019 6:06 AM GMT)

நதி நீர் பாசன முறையில் சோழப் பேரரசர்கள் மிகுந்த கவனம் செலுத்தி சோழ நாட்டை வளமுடையதாகச் செய்தனர் என்பதனை சோழர் கால கல்வெட்டுக்கள் பல எடுத்துக் கூறுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நீர் மேலாண்மையில் அவர்கள் செய்த சாதனைகளால் சோழ மண்டலம் இன்றளவும் பயன்பெற்று வருகிறது.

அவர்கள் புதிதாக உருவாக்கிய பேராறுகள், சிற்றாறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவைகளுக்கும், அவர்கள் உருவாக்கிய மதகுகளுக்கும் தங்கள் பெயரினைச் சூட்டி அவைகள் மக்களால் மதிக்கப் பெற்றவைகளாகத் திகழுமாறு செய்தனர். மன்னன் பெயரில் உள்ள ஒரு மதகினையோ அல்லது நீர் நிலைகளையோ யாரும் அழிக்க முன்வரமாட்டார்கள். நீர்நிலைகளைப் பேணிக் காக்க ஆங்காங்கே வாரியங்கள் அமைத்தனர். சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜ சோழன் உருவாக்கிய உய்யக்கொண்டான் ஆற்றுப் பாசனத்திற்கு உய்யக்கொண்டான் ஆற்று வாரியம் ஒன்றினை அமைத்ததை திருச்சி மாவட்ட கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளன.

முசிறியில் உள்ள சோழர்கால மதகில் காணப்பெறும் மூன்றாம் ராஜராஜ சோழன் கல்வெட்டில் காவிரியாற்றை கரிகாற் சோழப் பேராறு எனக் குறிப்பிடுகிறது. ஆலங்குடி கல்வெட்டில் காவிரியின் இரண்டு கிளையாறுகளை ஜனநாதப் பேராறு என்றும் பராந்தகப் பேராறு என்றும் குறிக்கிறது. ஜனநாதன் என்பது முதலாம் ராஜராஜனின் பட்டப் பெயராகும். மயிலாடுதுறை வட்டம் திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்வெட்டு விக்கிரமசோழப் பேராறு பற்றி குறிப்பிடுகிறது. மற்றொரு ஆறு முடிகொண்ட சோழப் பேராறு என அழைக்கப்பெற்றது.

கங்கையும், கடாரமும் கொண்டவனான முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை நீரைக் கொண்டு வந்து தான் தோற்றுவித்த பேரேரியில் விட்டு “சோழகங்கம்” எனப் பெயரிட்டான். இப்பேரரசனின் விருதுப் பெயரில் “கங்கை கொண்ட சோழப் பேராறு” என ஒரு பேராற்றுக்கு சோழமன்னர்கள் பெயரிட்டுள்ளனர். கொல்லிமலைப் பகுதியிலிருந்தும் பெரம்பலூர், துறையூர் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியிலிருந்தும் உற்பத்தியாகும் சிறு ஓடைகள் ஒன்றிணைந்து பெரிய ஆறாக உருவெடுத்து அந்த ஆறு திருச்சி மாவட்டம், சமயபுரத்திற்கு கிழக்காக ஓடி கொள்ளிடத்தில் கலக்கிறது. இந்த ஆற்றின் பெயர் “கங்கை கொண்ட சோழப் பேராறு” என்பதனை சமயபுரம் அருகிலுள்ள மருதூர் கயிலாசநாதர் ஆலயத்து சோழர் காலக் கல்வெட்டு கூறுகிறது. தற்போது உப்பாறு என்றும், கடைப்பகுதியில் கூழையாறு என்றும் இந்த ஆறு அழைக்கப்பெறுகிறது. இந்த ஆறு பிரமாண்டமான ஒரு பேராறு என்பதை மருதூர் செல்பவர்கள் கண்கூடக் காணலாம். திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியிலிருந்து சில கி.மீட்டர் வடக்கு நோக்கி செல்லும் போது சாலையில் உப்பாறு என்ற பெயர்ப் பலகையும், ஆற்றுப்பாலமும் இருப்பதைக் காணலாம். அந்த ஆறுதான் கொல்லிமலை அடிவாரத்திலிருந்து உற்பத்தியாகி ஓடிவரும் கங்கைகொண்ட சோழப் பேராறாகும்.

சோழ நாட்டின் தென் எல்லையாக புதுக்கோட்டை நகருக்கு அருகே ஓடும் தென்வெள்ளாறும், வடபுற எல்லையாக சிதம்பரத்திற்கு வடக்கே ஓடி கடலில் கலக்கும் வடவெள்ளாறும் திகழ்கின்றன. கொள்ளிடத்திலிருந்து கீழணை பகுதியில் பிரியும் வீரசோழ வடவாறு பராந்தக சோழனால் வெட்டப் பெற்ற வீரநாராயணப் பேரேரி (வீராணம் ஏரி) என்ற பெரிய ஏரிக்கு நீர்ப்பாசனம் அளிக்கிறது. அந்த ஏரியிலிருந்து வெளியேறும் மிகுநீர் தனிக் கால்வாய் மூலம் வடவெள்ளாற்றுக்குச் சென்று கடலில் கலந்து விடுகிறது.

மாமன்னன் ராஜேந்திர சோழனால் தன் புதிய தலைநகரத்தின் நீராதாரத்திற்காக வெட்டப்பெற்ற 16 மைல் நீளமும் 6 மைல் அகலமும் உடைய பேரேரியில் அம் மன்னவன் வங்க தேசத்து திருபேணித்துறையிலிருந்து பொற்குடங்களில் எடுத்து வந்த கங்கை நீரை விட்டு அந்த ஏரிக்கு “சோழகங்கம்” எனப் பெயரிட்டதோடு அப்புனித நீரால் கடவுள் மங்கலம் செய்யப்பெற்ற கோவிலுக்கும், ஊருக்கும் முறையே கங்கைகொண்ட சோழீச்சரம் என்றும், கங்கை கொண்ட சோழபுரம் என்றும் பெயர்களைச் சூட்டியதோடு “கங்கைகொண்ட சோழன்” என்ற பட்டத்தையும் தான் பெற்றான். சோழ நாட்டில் காவிரியிலிருந்து சோழப் பெருமன்னர்களால் தோற்றுவிக்கப் பெற்ற ஆறுகளுக்கு முடிகொண்ட சோழப் பேராறு, விக்கிரம சோழப் பேராறு, வீரசோழப் பேராறு, கீர்த்திமான் ஆறு, சோழ சூடாமணியாறு போன்ற பெயர்களைச் சூட்டினர் என்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. இன்றளவும் அப்பெயர்கள் மக்கள் வழக்கில் இருப்பது போற்றுதற்குரியதாகும்.

காவிரியில் கல்லணையிலிருந்து பிரியும் வெண்ணாற்றில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க கால சோழப் பேரரசர்களால் உருவாக்கப்பெற்ற தடுப்பணை ஒன்று கச்சமங்கலம் எனும் ஊரில் இன்றும் உள்ளதோடு முழு பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. காவிரியின் இரு கரைகளுக்கும் கரிகாலச் சோழக்கரை என்ற பெயர் வழக்கில் இருந்ததை சோழர்கால கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. அல்லூர் (திருச்சி மாவட்டம்) சிவாலயத்துக் கல்வெட்டு காவிரியை தென்திசை கங்கை (தட்சிணகங்கா) என்று குறிப்பிடுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி, திருச்சி மாவட்டத்திற்கும், அரியலூர் மாவட்டத்திற்கும் பாசனம் தந்து கொள்ளிடப் பேராற்றின் உப நதியாகத் திகழும் கங்கைகொண்ட சோழப்பேராறு எனும் உப்பாற்றினை மீண்டும் பழைய பெயராலேயே அரசு தன் ஆவணங்களில் பதிவு செய்து அழைக்குமானால் நம் பழைய வரலாற்றினை மீண்டும் மக்கள் அறிந்திட உதவியாய் இருக்கும்.

அதுபோல கங்கைகொண்ட சோழனான முதலாம் ராஜேந்திர சோழன் தோற்றுவித்த சோழகங்கம் (பொன்னேரி) ஏரிக்கு நீர் வரத்து கொடுக்க தென்புறம் கொள்ளிடத்திலிருந்து ஒரு கால்வாயும், வடபுறம் வடவெள்ளாற்றிலிருந்து ஒரு கால்வாயும் இருந்ததாகவும், அது 18-ம் நூற்றாண்டிலேயே அழிவுபட்ட நிலையில் தடங்கலோடு காணப்பெற்றதாகவும் ஓர் ஆங்கிலேய அதிகாரி பதிவு செய்துள்ளார். அதனை மீண்டும் கண்டறிந்து புதுப்பித்தால் சோழகங்கம் பேரேரியாகத் திகழ்வதோடு மேலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி தர ஏதுவாகவும் அமையும். அரசின் பொதுப்பணித்துறை இதனை செய்ய வேண்டுவோம்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Next Story