நாடகப் பேராசிரியர் பம்மல்.சம்பந்தனார்


நாடகப் பேராசிரியர் பம்மல்.சம்பந்தனார்
x
தினத்தந்தி 21 Feb 2019 8:12 AM GMT (Updated: 21 Feb 2019 8:12 AM GMT)

நாடக உலகின் மகான் என்று போற்றப்படுகிறவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவர் காலத்தில் அவருடன் சமகாலத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பல நாடக ஆசிரியர்களின் வரிசையில் அவர்களுக்கு அடுத்து போற்றப்பட வேண்டிய ஓர் மகத்தான நாடகப்பேராசிரியர் ராவ்பகதூர்.

பம்மல் சம்பந்த முதலியார் 21.2.1873 அன்று பம்மல் விஜயரங்க முதலியாருக்கும், அவருடைய இரண்டாவது மனைவி மாணிக்கவேலு அம்மையாருக்கும், நான்காவது பிள்ளையாக பிறந்தார். 1891-ல் ‘சுகுண விலாச சபை‘ என்னும் பெயரில் ஓர் நாடகக் குழுவைப் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த கல்வியாளர்களை இணைத்துக்கொண்டு, உருவாக்கினார். மேலும், அந்நாளில் நாடக நடிகர் என்றால் இழிவாகக் கருதுவார்கள். அதனைப் போக்கி, அந்த நாளிலேயே நாடக நடிகருக்கு ஓர் உயர்ந்த தகுதியை உருவாக்கியவர். அதனால்தான் அவர் நாடகப்பேராசிரியர் என்று போற்றப்படுகிறார். 1896-ல் சட்டப்படிப்பு முடித்து வக்கீலாகத் தேர்ச்சி பெற்றார். நீதிபதியாகவும் பணியாற்றினார். அவர் எழுதிய நாடகங்கள் மொத்தம் 95 ஆகும். இவர் எழுதிய நாடகங்களுள், மனோகரன் (வரலாற்று கற்பனை), யயாதி (புராணம்), ரத்னாவளி (வடமொழி தழுவல்), சபாபதி (வரிசை), அரிச்சந்திரன் (புராணம் இதிகாசம்), ஊர்வசியின் சாபம் (புராணம்), சந்திரஹரி (நகைச்சுவை), தாசிப்பெண் (அவலம் யதார்த்த நிலை), சாகுந்தலை (தழுவல் வடமொழி மூலம்), வேதாள உலகம் (வரலாறு கற்பனை) ஆகிய நாடகங்கள் நன்கு புகழ் வாய்ந்தவையாகும். அவருடைய ‘மனோகரா‘ நாடகம் மிகுந்த புகழ்வாய்ந்தது. இந்நாடகத்தில் என் தந்தையாரும், தமிழ்நாடகமேதையுமான அவ்வை டி.கே.சண்முகம் தம் ஆறாவது வயதிலும் (பாலமனோகரனாக) நடித்திருக்கிறார். பின்னர் வாலிபவயதை தாண்டியும் நடித்திருக்கிறார். ‘இந்நாடகத்தில் வரும் மனோகரன் சங்கிலி அறுத்து ஆவேசத்துடன் வசனம் பேசும் காட்சி மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். சுமார் 85 நாடகக் குழுக்கள் இந்நாடகத்தில் நடித்திருக்கின்றனர். 860 முறை இந்நாடகம் நடிக்கப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இந்நாடகம், ‘மனோகரா‘ என்ற பெயரிலேயே திரைப்படமாகவும் வந்து, அதில் இடம் பெற்ற கலைஞர் கருணாநிதியின் வீரவசனங்களை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தம் சிம்மக் குரலால் எழுச்சியுடன் பேசி, ஓர் வரலாறு படைத்தார் என்பதைத் தமிழுலகம் நன்கறியும். . 1951-ல் மத்திய அரசு இவருக்கு ‘பத்மபூஷண்‘ விருது வழங்கியது. பம்மல் சம்பந்தனார் 1965-ம் ஆண்டு தமது 92-வது வயதில் காலமானார். 

- டி.கே.எஸ். கலைவாணன்

Next Story