தேசியக்கொடி தந்த தியாகத் தமிழச்சி...!


தேசியக்கொடி தந்த தியாகத் தமிழச்சி...!
x
தினத்தந்தி 22 Feb 2019 7:44 AM GMT (Updated: 22 Feb 2019 7:44 AM GMT)

இன்று பிப்ரவரி 22-ந் தேதி தில்லையாடி வள்ளியம்மை பிறந்தநாள்.

ன்று பிப்ரவரி 22-ந் தேதி தில்லையாடி வள்ளியம்மை பிறந்தநாள்.

தில்லையாடி வள்ளியம்மை. இந்தியாவில் பிறக்காவிட்டாலும் இந்தியராக வாழ்ந்தவர். தென்ஆப்பிரிக்காவில் தோன்றி தென்ஆப்பிரிக்காவிலேயே மறைந்த இனப்போர் தியாகி.

வாழ்வு தேடிப் புலம்பெயர்ந்து தென்ஆப்பிரிக்காவில் குடியேறிய தமிழர்களின் வம்சாவளியில் வந்தவர்கள்தான் முனுசாமி முதலியார் மற்றும் அவரது மனைவி மங்களம் ஜானகியம்மாள் இருவரும். இவர்களது பூர்வீகம் நாகை மாவட்டத்தில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடிக்கு இடையிலுள்ள தில்லையாடி என்ற சிற்றூர் ஆகும். இவர்களுக்கு 22.2.1898 அன்று பிறந்த அன்புமகள் தான் வள்ளியம்மாள்.

விடுதலை வேட்கையும், சுதேசி சிந்தனையும் மிளிரும் துடிப்பானதொரு வீராங்கனையாக வள்ளியம்மாள் உருவெடுத்தார். தென்ஆப்பிரிக்காவை ஆண்ட ஆங்கிலேய நிறவெறி அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு மூன்று பவுண்ட் தலைவரி கட்டவேண்டும் என்ற தலைவரி சட்டத்தையும், கிறிஸ்தவ முறைப்படி தேவாலயங்களில் நடைபெறும் திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும், மற்ற எந்தத் திருமணமும் தென்ஆப்பிரிக்காவில் செல்லுபடியாகாது என்று புதிய திருமணப் பதிவுச்சட்டத்தோடு இன்னும் பல அடக்குமுறைச் சட்டங்களையும் வெள்ளையர் ஏகாதிபத்தியம் இந்தியர்கள் மீது பிரயோகித்தது. அச்சமயம் வழக்கறிஞர் தொழிலுக்காக தென்ஆப்பிரிக்கா வந்திருந்த காந்தியடிகள், “திருமணச்சட்டம் இந்தியர்களை இழிவுபடுத்தும் கொடுமையானச் சட்டம் எனவும், இந்திய மதங்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்” எனவும் தன் எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்தினார். தென்ஆப்பிரிக்காவாழ் இந்தியர்களை சாதி, பேதங்களைக் கடந்து ஓரணியில் திரட்டி அறப்போராட்டத்தைத் தொடங்கினார்.

இந்த அறப்போரில் வள்ளியம்மாள் துடிப்புடன் முன்னணியில் நின்றார். அறப்போராட்ட நடைப்பயணத்தில் வெள்ளைச் சிப்பாய் ஒருவன் காந்தியை நோக்கித் துப்பாக்கியால் குறிபார்த்தான். அதைக் கவனித்துவிட்ட வள்ளியம்மாள் விரைந்து குறுக்கே பாய்ந்து காந்தியடிகளுக்கு முன்னே நின்று கொண்டு ‘நெஞ்சை நிமிர்த்தி’ இப்போது சுடு! இப்போது சுடடா! என்று வாளேந்தி நின்ற ஒரு வேலுநாச்சியாராய் ஆவேசமாய் சீறினார். காவலன் திகைத்துப்போனான். வள்ளியம்மாளின் வீரத்தையும், வேகத்தையும் கண்டு காந்தியடிகளும் அறப்போராளிகளும் வியந்துபோனார்கள்.

வெள்ளையர் அல்லாதோர் நுழைய தடை செய்யப்பட்ட பகுதியான நேட்டால் என்ற பகுதிக்குள் அறப்போராட்ட வீரர்கள் நுழைய முற்பட்டபோது கைது செய்யப்பட்டனர்.

சிறைக்குள் அனுமதிக்கப்படும் முன்பு பதிவேடுகளில் அறப்போராட்ட வீரர்கள் தங்கள் பெயருடன் தங்களை இந்தியர் எனப் பதிவுசெய்தனர். அப்போது, ஒரு ஆங்கிலேயச் சிறையதிகாரி, “உங்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லையே. ஆப்பிரிக்கர் என்று குறிப்பிட வேண்டியதுதானே. இந்தியாவும் நாங்கள் ஆளும் நாடுதானே. இந்தியா உங்களுக்கு நாடும் இல்லை அதற்குத் தனி கொடியுமில்லையே. பிறகு எப்படி நீங்கள் இந்தியர்கள்?” என்று ஏளனம் செய்தான். உடனே தன் புடவைத் தலைப்பை கிழித்து உயர்த்திப்பிடித்தார் வள்ளியம்மாள். “இதுதான் எங்கள் தேசியக்கொடி. இனிமேல் எனக்கு ஒரு நாடும் உண்டு. அதற்கு தேசியக்கொடியும் உண்டு. நாங்கள் என்றும் இந்தியர்களே!” என்று கர்ஜித்தார்.

காந்தியடிகளுக்கும், தென்ஆப்பிரிக்க அரசுக்கும் நடந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்தது. அதைத் தெரிவிக்க சிறைச்சாலைக்கு வந்த காந்தியடிகளிடம் வள்ளியம்மாவின் செயலையும், அவரிடம் வாங்கி வைத்திருந்த புடவைத்தலைப்பையும் காண்பித்தார். அதிலிருந்த ‘பச்சை, காவி, வெண்மை’ நிறங்கள் காந்தியடிகள் நெஞ்சில் ஆழமாய்ப் பதிந்தன.

சிறையில் வள்ளியம்மாள் நச்சுக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தண்டத்தொகை கட்டி விடுதலைபெறவும் மறுத்துவிட்டார். இறுதியில் அரசுக்கும், காந்தியடிகளுக்கும் உடன்படிக்கை எட்டப்பட அறப்போராளிகள் விடுதலை ஆயினர்.

அந்தப் பதினைந்து வயதில் இனப்போராளி என்ற மிடுக்குடன் சிறைச் சென்ற வள்ளியம்மாள் வாடிப்போன ஒரு கொடிபோலப் போர்வையால் பொதியப்பட்டு ஒரு நோயாளியாக வீட்டில் கொண்டுபோய் படுக்கையில் கிடத்தப்பட்டார். காந்தி சுமித் உடன்படிக்கை கையெழுத்தானது. கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இவை அத்தனைக்கும் காந்தியாரோடு முன்னின்று போராடிய வள்ளியம்மாள் உடல்நிலை மிகவும் மோசமானது. காந்தியடிகள் வள்ளியம்மாள் வீட்டிற்கே வந்து நலம் விசாரித்தார். காந்தியடிகளைக் கண்டதும் உற்சாகமான வள்ளியம்மாளால் எழுந்து உட்காரக்கூட முடியவில்லை. அனைவரையும் களத்தில் தட்டியெழுப்பிய போர்க்குரல் ஈனமாய் ஒலித்தது. மகாத்மா மனம் கலங்கிப்போனார். காந்தியடிகள் வந்து சென்ற சில நாட்களிலேயே 22.2.1914 அன்று தனது 16-வது பிறந்தநாளில் அந்த வீரமங்கை இன்னுயிர் துறந்தார். 1898 பிப்ரவரி 22-ந் தேதி பிறந்து அதே மாதம் அதே தேதியில் 22-2-1914-ந் தேதி மறைந்தார். இந்தியாவிற்குச் செல்லவேண்டும் சொந்த ஊரைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்ட வள்ளியம்மாள் இந்தியாவையும், சொந்த ஊரையும், தமிழ் மண்ணையும் தரிசிக்காமலேயே உலக வாழ்விலிருந்து விடைபெற்றார். வள்ளியம்மாள் உடல் இந்திய முறைப்படி ஜோகனஸ்பர்க் நகரிலுள்ள பிரம்போன்டெய்ன் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

“பலன் ஏதும் கருதாமல் தென்ஆப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றிகண்ட தில்லையாடி வள்ளியம்மை தான் எனக்கு முதன்முதலில் சுதந்திர உணர்வை ஊட்டியப் பெருமைக்குரியவர்; அவர் ஓர் அபூர்வ பிறவி; தன்னலம் கருதாத தியாகி; இவர்தான் இந்தியாவின் மேன்மையான பெண் குழந்தை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டிய சுயநம்பிக்கை, சுயமரியாதை, நல்லொழுக்கம் ஆகிய உயர்ந்த அடையாளங்களைக் கொண்டவர் வள்ளியம்மை. உலகம் உள்ளவரையில் தென் ஆப்பிரிக்க சத்தியாக்கிரகச் சரித்திரத்தில் வள்ளியம்மையின் பெயரும் நீங்கா இடம்பெற்றிருக்கும்” என்று மகாத்மா காந்தியடிகளால் புகழாரம் சூட்டிடப்பெற்ற புனிதவதி அவர். இந்தியா சுதந்திரம் பெற்றதும் தேசியக்கொடியிலும் மூன்று வண்ணங்கள் இருக்கவேண்டும் என்று வள்ளியம்மை நினைவாக காந்தியடிகள் அறிவுறுத்த வள்ளியம்மாள் முழங்கியபடியே நம் தேசியக்கொடி அமைந்தது.

கவிஞர் செந்தூர் நாகராஜன், மும்பை

Next Story