தூக்கத்தில் நடக்கும் பழக்கத்தை போக்கும் வழிமுறைகள்...!


தூக்கத்தில் நடக்கும் பழக்கத்தை போக்கும் வழிமுறைகள்...!
x
தினத்தந்தி 23 Feb 2019 7:23 AM GMT (Updated: 23 Feb 2019 7:23 AM GMT)

உடல்நலம் சீராக அமைவதற்கு தூக்கம் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் வரையிலான தூக்கம் ஆரோக்கியமான உடலுக்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டல்நலம் சீராக அமைவதற்கு தூக்கம் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் வரையிலான தூக்கம் ஆரோக்கியமான உடலுக்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நல்ல தூக்கம் உடல் உறுப்புகள் ஓய்வெடுக்க உதவுகிறது, மூளையை சுறு சுறுப்புடன் செயல் பட வைக்கிறது, நினைவாற்றலை வளர்க்கிறது. இதயம் மற்றும் ரத்த நாளங்களை சிறப்புடன் செயல்பட வைக்கிறது. போதுமான தூக்கமின்மையே இதயநோய், சிறுநீரகக் கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற உடல் நலக்குறைவிற்கு காரணமாகிறது. தூக்கத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் வகை செய்கிறது

தூக்கத்தில் நடக்கும் நிகழ்வு துயில் நடை என்றழைக்கப்படுகிறது. மருத்துவத்துறையில் இது சோம்னாம்புலிசம் என்று வழங்கப்படுகிறது. இந்த குறைபாடு நான்கு முதல் எட்டு வயதுவரை உள்ள சிறுவர்களிடம் ஒப்பீட்டு அளவில் அதிகம் காணப்பட்டாலும் பெரியவர்களிடமும் இது காணப்படுகிறது. பெரும்பாலும் இந்த குறைபாடு குழந்தைகள் வளர வளர குறைந்து விடுகிறது. மிகச்சிலருக்கு மட்டும் தொடர்வது உண்டு.

நம்முடைய உறக்கம் ஐந்து நிலைகளாக நிகழ்கிறது. முதல் நிலை உடல்தசைகள் ஓய்வெடுக்கும் நிலை. இரண்டாவது தூங்க ஆரம்பிக்கும் நிலை, மூன்றாம் மற்றும் நான்காம் நிலைகள் ஆழ்தூக்க நிலைகளாகும். ஐந்தாம் நிலை கனவுகள் மனதில் தோன்றும் நிலை. தூக்கத்தில் நடப்பவர்களுக்கு மூன்றாம் மற்றும் நான்காம் நிலைகளில் தான் துயில் நடை நிகழ்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

துயில் நடை குறைவுடையோர் தூக்கத்தில் உள்ள மேற்கூறிய ஐந்து நிலைகளில், ஒவ்வொரு நிலையிலும் தூக்கம் நிலை குறைந்து காணப்படுவர். அவர்கள் தூக்கத்தில் நடக்கும்போது மூளையின் ஒரு பகுதி உறக்கத்திலும், மற்றொரு பகுதி விழிப்பு நிலையிலும் இருக்கும். இந்த நிகழ்வு பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரமே இருக்கும். ஆனால் சில தருணங்களில் மட்டும் பத்து நிமிடங்களுக்கும் மேலாக நீடிக்கும்.

அதேசமயம் அந்த துயில் நிகழ்வின் போது அவர்கள் கண்ட, கேட்ட, உணர்ந்த எதுவும் அவர்கள் நினைவில் பதிவாகாது. இந்த குறையுள்ளவர்கள் தூக்கத்திலேயே படுக்கையில் உட்கார்ந்து கொள்வது, தொடர்பில்லாமல் பேசுவது, ஒலி எழுப்புவது, கண்களை திறந்து வைத்துக்கொண்டே தூங்குவது, பேய் அறைந்தாற் போல் முகபாவனை காட்டுவது போன்ற செயல்களைச் செய்வதுண்டு. சிறு குழந்தையாய் இருக்கும் போது நேரிலோ, கனவிலோ காணும் பயங்கரங்களும், வன்முறைகளும் ஏற்படுத்தும் மனபாதிப்பு, இயல்பாக அமைகிற மன அழுத்தம், பதற்றம் போன்றவைகள் சில சமயம் துயில் நடைநிகழ்வை ஏற்படுத்துகின்றன. பெற்றோர்களில் ஒருவருக்கு இந்தகுறை இருந்தாலும் குழந்தைக்கு வர வாய்ப்பு உண்டு. படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கும் பழக்கமுள்ள குழந்தைகளில் சிலர் துயில் நடைப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். தூக்கத்தின் நேரம் குறைவது, உடல் களைப்பு, உடல் நலக்குறைவு, உட்கொள்ளும் சில வீரிய மருந்துகள் குழந்தைகளிடத்தே துயில் நடைப் பழக்கத்தை அதிகப்படுத்தும்.

குழந்தைக்கு ஒரே வாரத்தில் ஒரு முறைக்கு மேல் துயில் நிகழ்வு ஏற்பட்டால் கட்டாயம் மன நல மருத்துவரை அணுக வேண்டும். அவர் அந்த குழந்தையின் அக மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் அந்த நிகழ்விற்கு காரணமான எண்ணங்களை கண்டறிந்து அதற்கு தகந்தாற்போல் சிகிச்சை அளிப்பார்கள்.

துயில் நடை நிகழ்வின் போது வரும் ஆபத்துக்களை அவர்கள் உணர மாட்டார்கள். அந்த நேரத்தில் அவர்கள் மனக் குழப்பத்திற்கு உள்ளாக நேரிடும். மேலும் சில சமயங்களில் அதிக கோபப்படவும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் தூக்கத்தில் நடக்கும் போது அவர்களை தொடாமல் மெல்லியக் குரலில் அவர்களுக்கு வழிகாட்டி மீண்டும் அவர்களை படுக்க வைக்க வேண்டும்.

இந்த குறை உள்ளவர்கள் துயில் நடை நிகழ்வின்போது எந்த ஒரு விபத்தோ, அசம்பாவிதமோ நிகழாமல் தவிர்க்க குடும்ப உறுப்பினர்கள். சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியமாகும். படுக்கையறையில் கூடுதலாக ஒருவரை உடன் தங்கவைப்பது, அறையை உள்தாளிடுவது, வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் தவிர்க்கும் பொருட்டு பூட்டி வைப்பது, வாகனங்களின் சாவியை அவர்கள் கண்ணில் படாமல் மறைத்து வைப்பது, காயம் ஏற்படுத்தும் பொருட்களை ஒளித்து வைப்பது, படுக்கையிலிருந்து விழா வண்ணம் பக்கவாட்டில் தடுப்புகளை ஏற்படுத்துவது, துயில் நடையை மற்றவர் அறியும் வண்ணம் ஒலி எழுப்பும் ஏற்பாடுகளை செய்து வைப்பது போன்ற ஏற்பாடுகள் அவர்கள் பாதுகாப்பிற்கு உதவும்.

இக்குறை உள்ளவர்களின் படுக்கையறையை வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ வைப்பது, ஒலிகள் இல்லாமல் அமைதியை ஏற்படுத்துவது, அறையை சற்று குளிர்ச்சியாக வைப்பது, அவர்களை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைப்பது, படுக்கப் போகுமுன் நல்ல புத்தகங்களை வாசிக்க வைப்பது, நல்ல இசையைக் கேட்டு லயிக்க வைப்பது, படுப்பதற்கு முன் நவீன மின்னணுவியல் சாதனங்களான சிறப்பு திறன் கைபேசி,சிறு திரையுடன் கூடிய கணினி வகைகள், தொலைக்காட்சி முதலியவற்றை அவர்கள் உபயோகிப்பதை தவிர்ப்பது, அவர்களுக்கு தளர்வுப் பயிற்சிகள், தியானம், ஆழ் நிலைதியானப் பயிற்சிகள் போன்றவற்றை அளிப்பது ஆகிய செயல்கள் நல்ல நிலையான உறக்கத்தை ஏற்படுத்தும் வழிமுறைகளாகும்.

துயில் நடை நிகழ்வுகளை வீட்டில் உள்ளோர் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்த நிகழ்வுகளை பற்றிய எல்லாத் தகவல்களையும் ஒரு நோட்டில் அந்தந்த நேரங்களிலேயே குறித்து வைக்கவேண்டும். இத்தகைய நிகழ்வுகளில் ஒரே முறை பின்பற்றப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இத்தகைய தகவல்கள் துயில் நடை ஏற்பட காரணத்தைக் கண்டறிய உதவும். உதாரணமாக, ஒருவர் அதிக பிரச்சினைக்கு உள்ளாகும் நாட்களில் துயில் நடை அமையுமானால் அவருக்கு உள்ள மன அழுத்தமும் பதற்றமும் இந்த நிகழ்வுகள் ஏற்பட தூண்டுதலாக அமைகிறது என்று பொருள்.

பெற்றோர்கள் மனம் தளராமல் செயல்பட்டால் துயில் நடைக்குறையை போக்கி சரி செய்ய வாய்ப்பு உள்ளது.

கலையரசி, சிறப்பு பயிற்சியாளர்

Next Story