வாழ்வில் முன்னேற வழிகாட்டும் புத்தகம்


வாழ்வில் முன்னேற வழிகாட்டும் புத்தகம்
x
தினத்தந்தி 23 Feb 2019 7:25 AM GMT (Updated: 23 Feb 2019 7:25 AM GMT)

ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை, துயிலறை, பூஜையறை, கழிப்பறை, வரவேற்பு அறை, பொருள்வைப்பறை போன்ற அறைகள் உள்ளன.

வ்வொரு வீட்டிலும் சமையலறை, துயிலறை, பூஜையறை, கழிப்பறை, வரவேற்பு அறை, பொருள்வைப்பறை போன்ற அறைகள் உள்ளன. ஆனால் நூலக அறையென்று ஏதும் இல்லை.எல்லோருடைய வீட்டிலும் பாடப்புத்தகங்கள் இருக்கும். அதைத்தாண்டி இலக்கியம், வரலாறு, அரசியல், சமயம், சமுதாயம், உளவியல், அறிவியல் சார்ந்து ஏதேனும் புத்தகங்களை வாங்கி நம்வீடுகளில் வைத்திருக்கிறோமா? அப்படிக் கேட்டால் அதற்குத்தான் ஊருக்கு ஊர் நூலகங்கள் இருக்கின்றனவே. நாம் ஏன் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று எதிர்க்கேள்வி கேட்பவர்களே அதிகம். ஒவ்வொரு ஊரிலும் கோவில் இருக்கிறது. அங்குக் கடவுள்கள் உண்டு. இருப்பினும் நம்வீட்டில் கடவுள் சிலைகளை வைத்தும் படங்களை வைத்தும் பூஜையறை வைக்கவில்லையா? அப்படித்தான் நூலறையோ நூலக அலமாரியோ ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் நம்வீடுகளில் திருக்குறள் புத்தகமாவது உண்டா என்றால் பெரும்பாலும் இல்லை. புத்தகம் படிப்பது என்பது ஒருசிலரின் பொழுதுபோக்கு என்று பலரும் படிக்காமல் ஒதுங்கி விடுகிறார்கள். நம்வீட்டுப் பெண்கள் கதைப்புத்தகம் படித்தால்... அது சோறு போடாது என்று தடுக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகமும் உங்கள் வாழ்வில் ஒருநாள் உங்களுக்குத் துணைவரும். அது உங்களுக்கே தெரியாது. கதைகூட உங்கள் வாழ்க்கையின் சிக்கலுக்குத் தீர்வு சொல்லும். நாம் படிக்கின்ற விஷயங்கள் நம்மூளையில் பதிவாகித் தேவைப்படுகிற காலத்தில் நம்மை அறியாமல் சிக்கலைத் தீர்க்க, நல்ல முடிவுகள் எடுக்க, வாழ்வில் முன்னேற வழிகாட்டும். புத்தகம் படிக்கின்ற சமுதாயமே அறிவார்ந்த சமுதாயம்.

பொருட்களைத் தாள்களில் மடித்துத் தந்தார்கள் அன்றைய வணிகர்கள். அந்தத் தாள்களில் உள்ளவற்றைப் படிப்பது என்பதே சுகமாக இருந்தது. அதைப்படித்து வாழ்வில் முன்னேறியவர்கள் உண்டு. அந்த வாசிப்பையும் அழித்தன பாலிதீன் பைகள். நம்வீடுகளில் புத்தகங்களை அடுக்கி வைத்துப் பாருங்கள். அறிவு வெளிச்சம் வீடு முழுவதும் மட்டுமல்ல... நம்வாழ்வு முழுவதும் ஒளிவீசும். நம்வீட்டில் நூலக அறை இருந்தால் அது நமது மதிப்பைப் பிறரிடத்தில் உயர்த்தும். நூலறை இல்லாவிட்டாலும் வரவேற்பறையிலாவது நூல்களை அழகான முறையில் அடுக்கி வைக்கலாம்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையின்போது புத்தகத்தில் பூஜையிடப் பாடப் புத்தகங்களின்றி வேறு புத்தகம் இல்லை. விஜயதசமியை முன்னிட்டு பல வீடுகளில் பொம்மைகளை அடுக்கிக் கொலு வைப்பார்கள். அதுபோலவே படித்தட்டுகளில் புத்தகங்களையும் அடுக்கிப் புத்தகக் கொலு கொண்டாடினால் வெள்ளைத் தாமரையில் அமர்ந்துள்ள கலைவாணி கொள்ளை மகிழ்ச்சி அடைவாள். பாரதி பிறந்த நாளிலாவது நம்வீடுகளில் புத்தகக் கொலு கொண்டாடினால் தமிழ்த்தாயும் மகிழ்வாள்.

பல்வேறு புத்தகங்கள் பலருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையிலுள்ள குவிகம் இலக்கிய வாசல் அமைப்பினர், புத்தகப் பரிமாற்றம் எனும் நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்துகின்றனர். அந்நிகழ்ச்சியில் நிறைய புத்தகங்களைக் காட்சிப் படுத்துகிறார்கள். படித்ததைப் போட்டுப் பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். இதில் காட்சிப் படுத்தப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை குறைவதில்லை. ஒன்று கொடுத்தால் ஒன்று கிடைக்கும் என்ற திட்டத்தை இந்தப் புத்தகப் பரிமாற்றத்தில் கையாளுகிறார்கள். இதுபோன்ற நூல்பரிமாற்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஊரிலும் குடியிருப்புப் பகுதியிலும் தொடர்ந்து நடத்திவந்தால் வீடுகள் தோறும் வெவ்வேறு புத்தகங்கள் அறிவுலா செல்லும்.தூத்துக்குடியில் பொன்.மாரியப்பன் என்பவர், தன் முடித்திருத்தகத்தில் இருநூறு நூல்கள் கொண்ட நூலகத்தை வைத்திருக்கிறார். வாடிக்கையாளர்கள் வீணாக காத்திருக்காமல் நல்ல புத்தகங்களைப் படித்து நாலும் தெரிந்துகொள்ளச் செய்கிறார். அதனால் அந்தச் சலூனில் சிகையும் அழகாகிறது. சிந்தனையும் சீராகிறது. பிறந்தநாள் திருமண நாள் போன்ற நிகழ்வுகளில் புதுப்புத்தகங்களைப் பரிசளிக்கலாம். அப்படிப் பரிசளிக்கையில் ஒரே தலைப்புள்ள புத்தகங்கள் பல வந்து சேரலாம். அவற்றைப் பிறருக்குக் கொடுத்து உதவலாம்.நம் பிள்ளைகளைப் பாடப்புத்தகங்களைப் படிக்கச் செய்வதும் கல்வியில் கவனம் செலுத்தச் செய்வதும் முக்கியமானதுதான். வேலை பெறுவதற்காகத்தான் படிப்பு என்று நினைத்துப் பிள்ளைகளை இயந்திரங்களாக ஆக்கிவிட வேண்டாம். பிறப் புத்தகங்களையும் ஓய்வான நேரங்களில் பிள்ளைகள் படிக்க உதவுங்கள். பெற்றோர் புத்தகங்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் வீட்டில் நூலகம் வைத்துப் புத்தகங்களை வாங்கி வைத்தால் அந்த வீட்டில் வளரும் குழந்தைகள் வாசிப்பாளர்களாக மாறிப் பிற்காலத்தில் விருதுகள் பெறும் படைப்பாளிகளாகவும் மாறுவார்கள். படைப்பாளியாக மாறாமல் போனாலும் புத்தகங்களால் பெறும் அறிவினால் வாழ்வில் சிறந்தவர்களாக வளர்வார்கள்.நூலகம் ஒன்று திறப்பது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுவதற்குச் சமம் என்பார்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை நூலகம் செல்லப் பழக வேண்டும். எல்லாப் பள்ளிகளிலும் நூலகத்தைப் பூட்டி வைத்திருப்பார்கள். அதை இயங்கச் செய்ய வேண்டும்.. வாரம் ஒருமுறையாவது நூலக நேரம் ஒன்றை ஒதுக்கி மாணவர்களை வாசிக்கத் தூண்ட வேண்டும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நகரங்களிலும் கிராமங்களிலும் அரசியல் கட்சியினர் படிப்பகங்களை நடத்தி வந்தனர். சிவாஜி ரசிகர் மன்றம் என்று வைத்திருப்பார்கள் அதனோடு சேர்ந்து காமராஜர் படிப்பகம் வைத்திருப்பார்கள். இத்தகைய படிப்பகங்கள் சிறு கீற்றுக் கொட்டகைகளில் இயங்கும். அங்கு நான்கு சவுக்குக்கால்கள் நட்டு, பலகை பொருத்தி இருப்பார்கள். குறுக்கும் நெடுக்குமாக கொடிக்கயிறு கட்டி, நாளிதழ்கள் வார மாத இதழ்களைத் தொங்க விட்டிருப்பார்கள். ஒவ்வோர் இதழையும் ஒவ்வொருவர் நன்கொடையாகப் படிப்பகத்துக்கு வழங்கிவந்தார்கள். அத்தகைய படிப்பகங்கள் இன்றில்லை. ஆனால் தேநீர்க்கடைகளில் ‘தினத்தந்தி’ படிக்கும் வழக்கம் அன்று தொட்டு இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. என்றென்றும் அது தொடரும். வெகுசாதாரண மக்களையும் நாளிதழ்களைப் படிக்கச் செய்தவர் சி.பா.ஆதித்தனார். புத்தகங்களை வாங்கினால்தான் தமிழில் தரமான சிறப்பான நிறைய நூல்கள் வெளிவரும். வாங்கிப் படியுங்கள். வழங்கிப் படிக்கச் செய்யுங்கள். வாசிப்பது என்பது சுவாசிப்பது போன்ற அனிச்சை செயலாக மாற வேண்டும்.

வழக்கறிஞர் கோ. மன்றவாணன்

Next Story