கல்விக்கூடங்களில் தமிழின் எதிர்காலம்?


கல்விக்கூடங்களில் தமிழின் எதிர்காலம்?
x
தினத்தந்தி 4 March 2019 6:10 AM GMT (Updated: 4 March 2019 6:10 AM GMT)

“யா மறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதியார். அப்படிப்பட்ட இனிமை மட்டுமல்லாது, தொன்மையும் மிக்க தமிழ் மொழியின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் வளம் பெற முடியும்.

ஆனால் இன்று நம் பிள்ளைகளின் வகுப்பறைகளில் தமிழின் எதிர்காலம் தேய்பிறை போல் தேய்ந்து காணாமல் போய் விடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிற அதே வேளையில், பாரதியாரின் ‘தமிழ் இனி மெல்லச் சாகும்’ என்ற வரிகள் நினைவுக்கு வந்து மனதில் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களின் பரம்பரையினர் தமிழை மறந்துவிடாமல் இருக்க தங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்களாகிய நாம் தமிழுக்காக என்ன செய்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஐந்தாம் வகுப்பில் பாரதிதாசனின் ‘தலை வாரி பூச்சூட்டி உன்னை’ பாடலை ஒரு தமிழாசிரியர் கட, கடவென உரைநடை போல படித்துக்காட்டி அங்கங்கு தவறாகப் பொருளும் கூறி, இறுதியாக ஆசிரியர் குறிப்பையும் அவ்வாறே படித்துக் காட்டுகிறார். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் பத்தே நிமிடங்கள். இப்படி பாடம் நடத்தினால், மாணவர்களுக்கு எவ்வாறு தமிழில் ஆர்வம் வரும்?

ஆங்கில வழி பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் தமிழை வாசிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். மற்ற மொழி பேசும் மாணவர்கள் மட்டுமல்லாது தமிழையே தாய் மொழியாக கொண்ட மாணவர்களில் கூட தமிழில் தேர்ச்சி பெறாதவர்கள் உண்டு. தமிழ் படிக்கத் தெரியவில்லை, தமிழில் ஒரு முறை கூட தேர்ச்சி பெற்றதில்லை என்று ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவியைப் பற்றி ஆசிரியர் குறை கூறினார். மாணவியின் பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தந்தை வந்தார். அவரிடம் ஏன் உங்கள் மகளுக்கு தமிழே தெரியவில்லை, நீங்கள் வீட்டில் உருது பேசுவீர்களோ? என்று கேட்டேன். வெற்றிலைக் கறை படிந்த பற்கள் தெரிய ஒரு வெடிச் சிரிப்பு சிரித்தார். ஏதும் தவறாகக் கேட்டு விட்டோமோ என்று பயந்து போய் விட்டேன். சிரிப்பை நிறுத்தாமல், என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்?

எங்களுக்கு ராமநாதபுரம். வீட்டில் தமிழ் தான் பேசுவோம் என்றார். மகளுக்கு, தாய்மொழி தெரியவில்லை என்பதில் மனிதருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்பதை, பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் பெற்றோர்களின் பட்டியலில் இன்னும் ஒருவர்! நான் கோபத்தை அடக்கியபடி தமிழில் மட்டும் தேர்ச்சி பெறவில்லையென்றாலும் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாது, வீட்டில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி அனுப்பினேன். பத்தாம் வகுப்பு வரை தமிழே தெரியாத மாணவர்களின் எண்ணிக்கை தனியார் பள்ளிகளில் அதிகம். மாணவர்களின் தாய்மொழி எதுவாக இருந்தாலும் ஒன்றாம் வகுப்பிலிருந்து தமிழ், மொழிப்பாடமாகக் கற்றுக் கொடுக்கப்படும்பொழுது எப்படி தெரியாமல் போகும்? ஆர்வமே இல்லாத பிள்ளைகளாக இருந்தாலும், பெற்றோர் ஒத்துழைப்பு இல்லையென்றாலும் தேர்ச்சி பெறும் அளவிற்கு கூட மாணவர்களின் நிலை இல்லை என்றால் நிச்சயமாக அந்த ஆசிரியரே அதற்கு பொறுப்பு, அவரே அதற்கு பதில் சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறார்.

நடு நிலை மற்றும் உயர் நிலை வகுப்புகளில் தமிழை வாசிக்க தெரியாதலால், மனனம் செய்யத் திணறுகிறார்கள். தமிழை சரளமாக வாசிக்கத் தெரிந்த மாணவர்கள் கூட சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் வாசிக்கிறார்கள். முனைப்பு, கிடங்கு, கிளர்ச்சி போன்ற வார்த்தைகளுக்கு கூட பொருள் தெரியாமல் படிக்கிறார்கள், அல்லது பொருள் விளங்காத தமிழ் வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தையைக் கூறி, அப்படித்தானே என்று உறுதி படுத்திக்கொண்டு படிக்கிறார்கள். பிள்ளைகளை குறை சொல்ல முடியாது. இந்நிலைக்கு காரணம், நம்முடைய பேச்சு வழக்கில், தமிழில் ஒரே பொருளைத் தரும் எல்லா பெயர்ச்சொற்களையோ அல்லது வார்த்தைகளையோ நாம் பயன்படுத்துவதில்லை. நம் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துவதும் இல்லை. தமிழ் புத்தகங்களை வாசித்தாலாவது புதிய சொற்களுடன் பரிச்சயம் ஏற்படும். அவர்களின் சொல்லகராதியும் வளம் பெறும். மொழியை நன்றாக கற்றுக்கொள்வதற்கான போதுமான வெளிப்பாடும் நம் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. தனியார் பள்ளிகளில், மொழிப்பாடம் தமிழைத்தவிர அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் போதிக்கப்படுவதும், ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்ற சட்டமும் இருப்பதால் வகுப்பறைகளில் தமிழ் படாத பாடுபடுகிறது. மழலையர் வகுப்புகளில் உயிரெழுத்துகள் எவை, எவை என்பதை மட்டும் கற்றுக்கொடுத்தால் போதும். முதல் வகுப்பில் மெய், உயிர் மெய் எழுத்துகளை நன்றாக கற்றுக்கொடுத்த பின் ஓரெழுத்து, ஈரெழுத்து சொற்கள் என்று படிப்படியாக கற்றுக்கொடுத்தல் விரிய வேண்டும். படக் கதைகளைக் கொடுத்து சிறு வயதில் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவரோ வாசிப்பு பழக்கம் உடையவராக இருந்தால் அவர்களின் குழந்தைகளும் வாசிப்பில் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். அப்படியே இல்லையென்றாலும் ஒரு சிறந்த தமிழாசிரியரால் தன்னுடைய மாணவர்களுக்கு, வகுப்பறைகளில் தமிழை நன்றாக கற்றுக்கொடுப்பதுடன், வாசிப்பு பழக்கத்தையும் நிச்சயமாக உருவாக்க முடியும். குரல் வளம் ஆசிரியர்களுக்கு அவசியம். அதுவும் ஒரு தமிழாசிரியருக்கு இனிமையாக பாடத் தெரியாவிட்டாலும், குறைந்தபட்சம் குழந்தைகளின் காதுகளைத் துன்புறுத்தா வண்ணம் செய்யுள் பகுதியில் உள்ள பாடல்களை பாடத் தெரிந்திருக்க வேண்டும். தமிழை எளிதான முறையிலும், ஆர்வமூட்டும் வகையிலும் கற்பிக்கத் தவறும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழே தெரியவில்லை என்று அவர்களைக் குறை கூறுகிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களால் வகுப்பறைகளில் தமிழ் சிதைக்கப்படுகிறது. இப்படியே போனால் தமிழின் எதிர்காலம் என்னவாகும் என்னும் கேள்வி நம்மை கவலைக்குள்ளாக்குகிறது. தாய்மொழி தமிழ் என்பதுடன் இயற்கையிலேயே தமிழின் மீதான என்னுடைய ஆர்வம் எனக்கு வாய்த்த தமிழாசிரியர்களால் அதிகமானது. இன்னும் கிராமத்தில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்ததன் காரணமாக, வாசித்த ஒவ்வொன்றையும் புரிந்து படித்தது என தமிழோடு எனக்கு இருந்த நெருக்கம் என்னுடைய வாரிசுகளுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்று கனவு கண்ட பாரதியையும், தமிழையும் நேசிக்கும் ஒவ்வொருவரும், இனி வரும் காலங்களில் அவரவர் தலைமுறையினருக்கு தமிழின் தொடர்பும், பிணைப்பும் அறுந்து விடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டிய காலகட்டம் இது.

- ம.அஹமது நவ்ரோஸ் பேகம் (தனியார் பள்ளி முதல்வர்) சென்னை.

Next Story