தேசப்பற்றை வளர்க்கும் தியாகத்திருக்கூடம்...!


தேசப்பற்றை வளர்க்கும் தியாகத்திருக்கூடம்...!
x
தினத்தந்தி 5 March 2019 5:13 AM GMT (Updated: 5 March 2019 5:13 AM GMT)

டெல்லியில் இந்தியா கேட் வளாகத்தையொட்டி 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.176 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவகத்தை பார்த்துவிட்டு வந்த பிறகு நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவனாக இருந்தேன்.

 புனிதமான அந்த கணத்தை, பிரார்த்தனை செய்யவும், பெருமை கொள்ளவும், நம்பிக்கை அளிப்பதாகவும் உணர்ந்தேன். ஒரு புனிதமான காரணத்துக்காக உச்சபட்ச தியாகமாக உயிரை நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன்.

நமது நாட்டைச் சேர்ந்த இந்த தைரியமிக்கவர்கள் காட்டியுள்ள வீரதீர பாதை, இந்த நினைவுச் சின்னங்களை பார்க்க வரும் பலருக்கும் ஊக்கத்தை அளிப்பதோடு, நமது நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உணரவும் வழிவகுக்கிறது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதற்காக தங்களின் இன்னுயிரை நீத்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தேசிய போர் நினைவகம் நமக்கு கிடைத்துள்ளது. 1962-ம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நடந்த போர், பாகிஸ்தானுக்கு எதிராக நம் மீது 1947, 1965, 1971-ம் ஆண்டுகளில் திணிக்கப்பட்ட போர்கள், 1999-ம் ஆண்டில் நடந்த கார்கில் போர் ஆகியவற்றில் மரணமடைந்த வீரர்களின் நினைவாக இந்த நினைவகத்தை கட்ட பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சிகளுக்கு நன்றி.

ஐக்கிய நாடுகளில் சமாதானம் நிலைநாட்டும் பணிகள், பேரிடர் நிவாரணப் பணியில் மனிதாபிமான உதவிகள், கிளர்ச்சிகளை அடக்கும் பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டபோது வீரர்கள் செய்த உயிர்த் தியாகத்தையும் இந்த நினைவகம் நினைவுகூரும். இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் நடந்த போர்களில் இந்திய வீரர்கள் அசாதாரணமான அர்ப்பணிப்பையும், தைரியத்தையும் வெளிப்படுத்தினர்.

17-வது நூற்றாண்டில் உலக அளவில் இந்தியாவின் பொருளாதார ரீதியிலான உற்பத்தி அளவு 27 சதவீதமாக இருந்தது. பொருளாதார காரணங்களுக்காக எந்த நாட்டையும் இந்தியா தாக்கவில்லை. ஏனென்றால், இந்தியா எப்போதுமே சமாதானத்தை விரும்பும் நாடாக உள்ளது.

ஆங்கிலேயரின் காலனி ஆட்சியில்கூட, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்று குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினார்கள். உலக அளவில் பிரான்ஸ், பெல்ஜியம், அரேபியா, கிழக்கு ஆப்பிரிக்கா, எகிப்து, பாலஸ்தீனம், பெர்சியா ஆகிய நாட்டு போர்க்களங்களில் இந்திய வீரர்கள் களமிறங்கி இருந்தனர்.

அந்த வகையில் 8 லட்சம் இந்திய போர்ப் படைகள், 1.5 மில்லியன் வீரர்களுடன் போர்க் களங்களில் பணியாற்றியுள்ளன. கலிபோலி உள்பட வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க பகுதிகளில் நடக்கும் பெரும்பாலான போர்களில் அவர்கள் பங்கேற்றனர். அனைத்து போர்களிலும் 47 ஆயிரத்து 746 வீரர்கள் கொல்லப்பட்டதோடு சிலர் காணாமல் போனார்கள். 65 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.

பிரான்சில் வில்லர்ஸ்-குயிஸ்லெய்ன் நகரத்தில் இந்திய ஆயுதப்படைகள் நினைவகத்தை 2018-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி வைத்தது எனக்கு பெருமை அளித்த விஷயமாகும். இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பிறகு பிரான்சில் இந்தியா கட்டிய முதல் நினைவகம் அதுதான். நமது நாட்டிலும் ஒரு போர் நினைவகம் அமைக்கப்பட வேண்டும் என்பதை அப்போதே நான் நினைத்தேன்.

நாம் முன்னரே இதைச் செய்திருக்கலாம். தாய் நாட்டை காப்பதற்காக நெஞ்சை நிமிர்த்தி போரிட்ட வெளியே தெரியாத பல ஹீரோக்களுக்கு இப்போதாவது நினைவகம் அமைந்திருக்கிறதே. ஒரு அமைதியான வாழ்க்கைக்காக உலகம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. நாடுகளுக்கு இடையேயான வழக்கமான போர்கள் குறைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தவறாக வழி நடத்தப்படும் சில நாடுகளால் பயங்கரவாதம் கடந்த 30 ஆண்டுகளாக தலைதூக்கிய நிலையில் உள்ளது.

எல்லைகளில் பயங்கரவாதத்துக்கு உதவிசெய்வோரால், இந்தியா மிகப்பெரிய விலையை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மும்பை தாக்குதல், நாடாளுமன்றத்தில் தாக்குதல், ஜம்மு காஷ்மீரில் வழக்கமாக நடக்கும் பயங்கரவாத செயல்பாடுகள் ஆகியவை நமது நாட்டின் நம்பிக்கையையும், பெருமையையும் அசைத்துப் பார்த்தன.

அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை தடுப்பதற்காக நமது தைரியமிக்க ராணுவ வீரர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் தங்களின் இன்னுயிரை நீத்தனர். நமது எதிர்காலம் பிரகாசமாக இருப்பதற்காக உச்சபட்ச தியாகத்தைச் செய்த சீருடையாளர்களுக்கு தேசிய போர் நினைவகம் அமைப்பது, மிகச் சிறந்த பொருத்தமான புகழஞ்சலியாக அமைந்துள்ளது. இதை பார்வையிட வருவோரின் மனதில் தேசப்பற்றை ஊட்டுவதோடு, வீரர்களின் தியாகத்தை எதிரொலிக்கச் செய்யும்.

40 ஏக்கர் பரப்பளவு கொண்ட தேசிய போர் நினைவகம், இந்திய கட்டுமான வடிவமைப்பில் தனித்துவமாக அமைக்கப்பட்டுள்ளது. அமர் சக்ரா, வீர்த சக்ரா, தியாக் சக்ரா, ரக்‌ஷா சக்ரா ஆகிய 4 மையங்கள் அதில் உள்ளன. தேச பாதுகாப்புப் பணியில் இறந்தவர்கள், வேறு பணிக்கு அமர்த்தப்பட்டு மரணத்தை தழுவியவர்கள் ஆகியோரின் பெயர்கள் அந்த மையங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் மையத்தில் தியாகச் சுடர் எரிகிறது. பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றவர்களின் உருவச் சிலைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

புலவாமா தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி, உலக கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு, சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான ஒருங்கிணைந்த ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஒருமித்த கருத்தை கொண்டு வர வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையும் ஈர்க்கப்பட்டுள்ளது. உலக சவாலாக இருக்கும் பயங்கரவாதத்துக்கு எதிராக உலகளவில் பதிலளிக்க வேண்டிய நேரம் இதுதான்.

இந்த நடவடிக்கைக்கு இந்தியாவுக்கு உலக அளவிலான ஆதரவு கிடைத்திருப்பது உற்சாகம் அளிக்கக்கூடியதாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு உதவியவர்களின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி அபிநந்தன் நமது தேசத்தின் மனநிலையைத் தெளிவாகக் காட்டினார்.

நமக்காக பல ஆண்டுகளாக போரிட்டு, தங்களின் நாட்களை அதற்காக அர்ப்பணித்து இன்னுயிரை நீத்த ஹீரோக்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துவதோடு, அவர்களின் குடும்பத்தினரையும் நாம் காப்பதற்கு கடமைப்பட்டு இருக்கிறோம் என்பதை நமது உறுதியான செயல்பாட்டின் மூலம் காட்டவேண்டும்.

- வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி

Next Story