பிப்ரவரி 28-ந் தேதி நிலவரப்படி சர்க்கரை உற்பத்தி 6.9% உயர்ந்து 2.48 கோடி டன்னாக அதிகரிப்பு - ஆலைகள் சங்கம் தகவல்


பிப்ரவரி 28-ந் தேதி நிலவரப்படி சர்க்கரை உற்பத்தி 6.9% உயர்ந்து 2.48 கோடி டன்னாக அதிகரிப்பு - ஆலைகள் சங்கம் தகவல்
x
தினத்தந்தி 8 March 2019 10:48 AM GMT (Updated: 8 March 2019 10:48 AM GMT)

நடப்பு சந்தை பருவத்தில் பிப்ரவரி 28 நிலவரப்படி நாட்டில் மொத்தம் 2.48 கோடி டன் சர்க்கரை உற்பத்தி ஆகி உள்ளது என சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே நாளில் அது 2.31 கோடி டன்னாக இருந்தது...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

பிப்ரவரி 28-ந் தேதி நிலவரப்படி சர்க்கரை உற்பத்தி 6.9 சதவீதம் உயர்ந்து 2.48 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

70 சதவீத பங்கு

சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. நம் நாட்டில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் இந்த மூன்று மாநிலங்களின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. சர்க்கரை உற்பத்தியில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது.

2013-14 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) சர்க்கரை உற்பத்தி 2.83 கோடி டன்னாக இருந்தது. 2015-16 பருவத்தில் அது 2.51 கோடி டன்னாக குறைந்தது. 2016-17 பருவத்தில் 2.03 கோடி டன்னாக சரிந்தது. ஆனால் கடந்த 2017-18 பருவத்தில், அதுவரை இல்லாத அளவிற்கு 3.25 கோடி டன்னாக அதிகரித்தது.

தற்போதைய மதிப்பீடுகள்

நடப்பு 2018-19 சந்தை பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 3.07 கோடி டன்னாக இருக்கும் என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் கூறி இருக்கிறது. அடுத்த பருவத்தில் (2019 அக்டோபர்-2020 செப்டம்பர்) சர்க்கரை உற்பத்தி 2.80 கோடி டன் முதல் 2.90 கோடி டன் வரை இருக்கும் என தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடப்பு சந்தை பருவத்தில் பிப்ரவரி 28 நிலவரப்படி நாட்டில் மொத்தம் 2.48 கோடி டன் சர்க்கரை உற்பத்தி ஆகி உள்ளது என சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே நாளில் அது 2.31 கோடி டன்னாக இருந்தது. ஆக, உற்பத்தி 6.9 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

பிப்ரவரி 28-ந் தேதி மகாராஷ்டிராவில் சர்க்கரை உற்பத்தி அதிகபட்சமாக 92 லட்சம் டன்னாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே நாளில் அது 84.54 லட்சம் டன்னாக இருந்தது. அடுத்து உத்தரபிரதேசத்தில் உற்பத்தி 73.20 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி ஆகி உள்ளது. கடந்த ஆண்டின் இதே நாளில் அங்கு 73.61 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. கர்நாடகாவில் உற்பத்தி (33.92 லட்சம் டன்னில் இருந்து) 41.69 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. குஜராத்தில் 8.8 லட்சம் டன்னும், தமிழ்நாட்டில் 4.7 லட்சம் டன்னும் சர்க்கரை உற்பத்தி ஆகி இருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா இணைந்து 5.7 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளன.

ஏற்றுமதி வரி ரத்து

கடந்த பருவத்தின் அதிக உற்பத்தி காரணமாக ஏற்றுமதியை அதிகரிக்கவும், உள்நாட்டில் கையிருப்பை குறைக்கவும் சர்க்கரை ஏற்றுமதி மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஏற்றுமதி சர்க்கரைக்கு முன்பு 20 சதவீத வரி விதிக்கப்பட்டது. இறக்குமதியாகும் சர்க்கரைக்கு வரி 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன் இறக்குமதி வரி 50 சதவீதமாக இருந்தது.

நடப்பு 2018-19 பருவத்தில் இந்திய ஆலைகள் 50 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆலைகள் 30-35 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரும்பு விவசாயிகள்

நடப்பு பருவத்தில் இதுவரை கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வைத்துள்ள பாக்கி ரூ.20 ஆயிரம் கோடியைத் தாண்டி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்துடன் ரூ.10,540 கோடி வரை மென்கடன் வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. இதனால் ரூ.8-9 ஆயிரம் கோடி அளவிற்கு விவசாயிகளுக்கான பாக்கியை குறைக்க முடியும் என இஸ்மா கூறி உள்ளது.

Next Story