உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 9 March 2019 11:30 PM GMT (Updated: 9 March 2019 10:22 AM GMT)

‘அழகான பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றுதானே ஆசைப்பட்டாய். நாங்க இப்போது உனக்கு பார்த்திருக்கும் பெண் அப்படி ஒரு பேரழகு’ என்று சொன்ன அம்மா, அந்த பெண்ணின் போட்டோவை அவனிடம் காட்டினாள்.

அவளது விதவிதமான போட்டோக்களை பார்த்த அந்த நிமிடத்தில் இருந்து அவன் கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்கிவிட்டான். அம்மா சொன்னதுபோல் அவள் அழகுதான். நிறைய படித்துவிட்டு, அதிக சம்பளம் பெறும் வேலையிலும் இருந்தாள். அவள் குடும்பமும் வசதிபடைத்தது.

ஓட்டல் ஒன்றில் பெண் பார்க்கும் சந்திப்பு நிகழ்ந்தது. முதல் பார்வையிலே அவள், அவனை வெகுவாக கவர்ந்து விட்டாள். அவளிடம் பேசிக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது அவனுக்கு. இருவரும் திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

அவள் தனது சொந்த ஊரில் இருந்து 600 கி.மீ. தொலைவில் இருக்கும் நகரம் ஒன்றில் உள்ள தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்தாள். அவன், அவளது சொந்த ஊருக்கு அருகில் உள்ள நகரத்தில் கார்களை வாடகைக்கு அனுப்பும் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தான்.

அவர்கள் திருமணம் விமரிசையாக நடந்தது. திருமணம் முடிந்ததும் அவள் எதிர்கால திட்டங்கள் பற்றி கணவரிடம் பேசினாள். ‘திருமணமாகி ஒருவருடம் கழித்துதான் என் பங்கு சொத்துக்களை பெற்றோர் பிரித்து தருவதாக கூறியிருக்கிறார்கள். என் பங்குக்கு நிறைய சொத்துக்களும், பங்களாவும் கிடைக்கும். அது கிடைத்ததும், நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன். அதன் பின்பு நாம் ஒன்றாக எனது பங்களாவிலே குடும்பம் நடத்தலாம். குழந்தை பெற்றுக்கொள்வது பற்றியும் அதன் பின்பு திட்டமிடலாம். அதுவரை நான் அங்கேயே தங்கியிருந்து வேலைபார்க்கிறேன். வேலை என்றால் எனக்கு உயிர்’ என்றாள்.

அவளது பெற்றோரும், அவனிடம் ‘நீங்கள் மணவாழ்க்கையில் ஒரு வருடத்தை நிறைவு செய்த பின்பே அவளுக்குரிய சொத்துக்களை பிரித்துதருவோம்’ என்று கூறினார்கள். ஆனால் அதற்கு என்ன காரணம் என்று அவன் கேட்கவில்லை. அவளது அழகில் அவன் மயங்கி இருந்ததால், அவள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டுக்கொண்டிருந்தான்.

அவள் வேலைபார்த்த நகரத்திலே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்திருந்தாள். அதில் நான்கு தோழிகள் அவளோடு தங்கியிருந்தார்கள். அவன் மாதத்தில் ஒரு சில நாட்கள் அங்கே சென்று மனைவியோடு தங்கிவிட்டு திரும்பும் வழக்கத்தை வைத்திருந்தான். காலப்போக்கில் அவர்கள் சந்திப்பது அரிதானது. அவள் வேலையில் பரபரப்பாகவும், அதிக நாட்கள் சுற்றுப்பயணத்திலும் இருந்து கொண்டிருந்தாள். ஆனாலும் தினமும் அவனோடு அன்பொழுக பேசுவதை வழக்கமாக வைத்திருந்தாள்.

‘ஒரு வருடம்தானே பொறுத்துக்கொள்வோம். அதன் பின்பு சேர்ந்து வாழலாம்’ என்று அவன் அமைதியாகி, இல்லற வாழ்க்கைக்கு ஏங்கிக்கொண்டிருந்த சூழலில் ஒருவருடம் நிறைவடைந்தது. பெற்றோர் அவளை அழைத்து வந்து, அவளுக்குரிய சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொடுத்தனர். அப்போதுதான், அந்த ஒரு வருட இடைவெளி ரகசியத்தின் பின்னணி அவனுக்கு தெரிந்தது.

அவள் தனது பள்ளிப்படிப்பின் இறுதிக்கட்டத்தில் இருந்தே சக மாணவன் ஒருவனை விரும்பிவந்திருக்கிறாள். கல்லூரி காலத்திலும் அவர்கள் காதல் தொடர்ந் திருக்கிறது. தனக்கு வேலை கிடைத்ததும், அவனையே திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் அனுமதிகேட்டிருக்கிறாள். அதற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர், ‘அவனை திருமணம் செய்துகொண்டால் சொத்து எதுவும் தரமாட்டோம். சொத்து வேண்டும் என்றால் நாங்கள் பேசி முடிப்பவரையே திருமணம் செய்துகொள்ளவேண்டும். அப்படி நீ, நாங்கள் சுட்டிக்காட்டுபவரை திருமணம் செய்துகொண்டாலும், நீ தாய்மை அடைந்த பின்போ அல்லது திருமணம் முடிந்து ஒரு வருடம் கடந்த பின்போதான் சொத்துக்களை உன் பெயருக்கு எழுதித்தருவோம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த ரகசியம் தன் காதுகளை எட்டியபோதும் அதை அவளது கணவன் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் தனது பெயருக்கு எழுதப்பட்ட சொத்து பத்திரங்களை எல்லாம் பெற்றுக் கொண்டு, தனது பங்குக்கு வந்த பங்களாவையும், இடங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அவள், ‘அலுவலகத்திற்கு சென்று வேலையை ராஜினாமா செய்துவிட்டு வருகிறேன்’ என்று சென்றாள். திரும்பிவரவில்லை.

அவள் எழுதிய கடிதம் ஒன்று, கணவனை வந்தடைந்தது. அதில், ‘நான், என்னை காதலித்த இளைஞனுடன், நான் வேலை செய்யும் நகரத்திலே தங்கி மூன்று வருடங்களாக குடும்பம் நடத்தி வருகிறேன். சொத்துக்களை பெறுவதற்காகத்தான் நான் உங்களை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தேன். எனக்கு சொத்துக்கள் கிடைக்க நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. உங்களை ஏமாற்றியதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது. அவள் அங்கிருந்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அந்த நபரோடு தலைமறைவாகிவிட்டாள்.

அவள் வேலைபார்த்த நகரத்திலே காதலரோடு ரகசியமாக குடும்பம் நடத்த அவளது தோழிகள் சிலரும் உதவியாக இருந்திருக்கிறார்கள். கணவரை பலவிதங்களில் ஏமாற்ற அவர்களும் துணைபுரிந்திருக்கிறார்கள்!

- உஷாரு வரும்.

Next Story