கையூட்டு முறையை ஒழித்து கரை சேர முடியுமா?


கையூட்டு முறையை ஒழித்து கரை சேர முடியுமா?
x
தினத்தந்தி 12 March 2019 7:41 AM GMT (Updated: 12 March 2019 7:41 AM GMT)

மனித பிறவி மகத்துவம் நிறைந்தது. முன்பெல்லாம் மக்கள் பொது நலச்சேவையில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர். கால மாற்றத்தின் காரணமாக, தன்னுடைய தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் குறுகிய மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

அரசு அதிகாரிகள், ஊழியர்களை பொறுத்தவரையில் தினமும் ஒருவருக்காவது உதவி செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது. அரசு பணியே அறப்பணி. கோடியில் புரளும் பணக்காரர்களும், அன்றாட பிழைப்புக்கே வழியில்லாத ஏழைகளும் அரசு அலுவலகங்களை தேடி செல்கின்றனர். பணம் பாதாளம் வரை பாயும் என்பதை நிரூபிக்கும் வகையில், சாத்தியமில்லாததையும் பணக்காரர்கள் அரசு அலுவலகங்களில் சாதித்து விடுகின்றனர். ஆனால் நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமையும், சேவையும் சில சமயத்தில் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விடுகிறது. இதற்கு, அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யமே முழுமுதற் காரணம் ஆகும். லஞ்சம் கொடுத்தால் மின்னல் வேகத்தில் வேலை நடப்பதும், இல்லாவிட்டால் கிடப்பில் போடுவதும் சில அரசு அலுவலகங்களில் வாடிக்கையாகி விட்டது. பணம் கொடுக்காமல், ஒரு கையெழுத்துக்காக மாதக்கணக்கில் அரசு அலுவலகத்துக்கு அலைந்து திரிந்தவர்களும் இருக்கிறார்கள். பணம் கொடுத்தவுடன், அடுத்த சில நிமிடங்களில் தங்களது காரியத்தை சாதித்தவர்களும் உண்டு.

தன்னை தேடி வரும் ஒருவர், லஞ்சம் தரமாட்டார் என்று தெரிந்தால் வேண்டுமென்றே காலதாமதம் செய்து இழுத்தடிக்கும் சில அரசு ஊழியர்களும் இருக்க தான் செய்கிறார்கள். நியாயமான வேலையாக இருந்தாலும் அவர்கள் முட்டுக்கட்டை போட்டு முடக்கி விடுகின்றனர். லஞ்சம் வாங்காமல் எந்தவொரு வேலையையும் செய்ய மாட்டோம் என்பதை போல சில அதிகாரிகள், ஊழியர்களின் செயல்பாடுகள் உள்ளன. அதேநேரத்தில், ஏழைகளுக்கு வாழ்வளித்த அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பிறருக்கு உதவி செய்வதற்கு இறைவன் தனக்கு அளித்த கொடையாக கருதி, அரசு பணியை செய்து கொண்டிருக்கும் நேர்மையான அதிகாரிகளும் உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களையும் குறை சொல்ல இயலாது. அரசு ஊழியர்களை பொறுத்தவரையில் போதுமான சம்பளம் வழங்கப்படுகிறது. இருப்பினும் லஞ்சம் வாங்குவதையே சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். பண ஆசை ஊழியர்களை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால், லஞ்சத்தில் தழைத்தோங்கும் சில அரசு ஊழியர்களின் மாதச்சம்பளத்தை காட்டிலும் லஞ்சப்பணம் அதிகம் கிடைப்பதாக கூறுகின்றனர்.

தமிழகத்தில் சராசரியாக வாரத்துக்கு 2 அல்லது 3 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவது வாடிக்கையாகி விட்டது. இது, வேதனை அளிப்பதாகவும் உள்ளது. சமீபத்தில் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு நகர் ஊரமைப்புத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் உள்ளூர் திட்ட குழும உறுப்பினர்-செயலர் அலுவலகங்களில் சோதனை நடந்தது. அப்போது, கணக்கில் வராத ரூ.1½ லட்சம் சிக்கியது.

அதேநாளில், மதுரை காந்தி மியூசியம் அருகே மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட 43, 44-வது வார்டு அலுவலகத்தில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதுபோன்று சில அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. ‘லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்’ என்ற வாசகங்கள் அடங்கிய பெயர் பலகைகளை அரசு அலுவலகங்களில் பார்க்கலாம். அவையெல்லாம் சில அரசு அலுவலகங்களில் மூலையில் முடங்கிக்கிடக்கின்றன.

அரசு பணி என்பது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அந்த பணி, மக்களுக்கு சேவை செய்ய இறைவன் கொடுத்த வரம் என்று அரசு ஊழியர்கள் கருத வேண்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று நினைக்க வேண்டும். ‘பிறருக்கு சேவை செய்ய யாரிடமும், எந்த சூழலிலும் கையூட்டு வாங்க மாட்டேன்’ என்ற எண்ணம் ஒவ்வொரு அரசு ஊழியர்களின் மூளையிலும் உதிக்க வேண்டும். அப்போது தான், அரசு அலுவலகங்களில் இருந்து லஞ்சத்தை விரட்ட முடியும். இல்லாவிட்டால் லஞ்சத்தை தவிர்ப்பது குதிரைக்கொம்பு தான்.

தனக்கு கீழ் அல்லது மேல் பணிபுரியும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை சிலர் கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். ஒரு அரசு அலுவலகத்தில், ஒருவர் லஞ்சம் வாங்குவது தெரியவந்தால் அவரை தனியாக அழைத்து அதிகாரிகள் கண்டிக்க வேண்டும். நமக்கு என்ன, நம்ம வேலையை நாம் பார்ப்போம் என்று நினைத்து நேர்மையான சில அரசு அதிகாரிகள், இந்த விஷயத்தில் மவுனம் காத்து விடுகின்றனர். இதுவும் ஒரு வகையான குற்றம் தான். லஞ்சம் வாங்குவோரை உற்சாகப்படுத்துவது போல் ஆகிவிடும். சக ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்குவது தெரிந்தும், அதை பார்த்து சகித்து கொண்டிருக்கக்கூடாது. அப்பாவி மக்கள் பலர் லஞ்சத்தால் அல்லல்பட்டு வருகின்றனர். பஸ்சுக்காக கொண்டு வந்த பணத்தையும் லஞ்சமாக பறி கொடுத்துவிட்டு, நடந்து வீட்டுக்கு போய் சேர்ந்த அபலை ஏழைகளும் சமுதாயத்தில் உள்ளனர். தன் கடமையை செய்ய லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை விட்டு வைக்கக்கூடாது. கைது, சிறையில் அடைப்பு, பணியிடை நீக்கம் ஆகிய நடவடிக்கை மட்டும் இவர்களுக்கு போதாது. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி விட வேண்டும். இதுமட்டுமின்றி அவர்களின் ஒட்டுமொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். அப்போது தான், அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை ஒழிக்க முடியும். இதேபோல் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் மீது பொதுமக்கள் தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும். அவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும். அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதி ஏற்க வேண்டும். லஞ்சம் இல்லாத லட்சிய பயணத்தை அரசு ஊழியர்கள் தொடர வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு!.

-தாமிரன்

Next Story