சிறப்புக் கட்டுரைகள்

தரணி போற்றும் தலை சிறந்த சிந்தனையாளர்...! + "||" + World admiring Best thinker ... Karl Marx

தரணி போற்றும் தலை சிறந்த சிந்தனையாளர்...!

தரணி போற்றும் தலை சிறந்த சிந்தனையாளர்...!
இன்று (மார்ச் 14-ந் தேதி) காரல் மார்க்ஸ் நினைவு தினம்.
பொதுவாக மனித இயல்புகளை, சமூக அமைப்பை ஆராய்பவர்களில் சிலர் தான் அதிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு சரிப்படுத்தலாம் என்று சிந்திக்கின்றனர். அந்த முற்போக்குச் சிந்தனையை முன்னெடுத்தவர் தான் மார்க்ஸ் எனும் மாமனிதர். ஒரு மனிதன் தன் உரிமையைக் கேட்கும்போது அது பற்றிய பிரச்சினைக்கு விடை சொல்ல வேண்டும் அல்லது மறுக்க வேண்டும் என உலகிற்கு உரக்கச் சொன்னவர்.

காரல் மார்க்ஸ் 1818-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி ஜெர்மனியில் ஒரு வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்தவர். அவர் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதே பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்று தீர்மானித்தார்.அரசியல், தத்துவங்களை கற்று தேர்ந்து தலை சிறந்த சிந்தனையாளராக விளங்கிய அவர் கடவுளையும், மதத்தையும் மறுத்ததுடன் செல்வச் சீமான்களையும், பெரிய முதலாளிகளையும் சந்திக்கிழுத்து தொழிலாளர்களின் முகத்தில் மட்டுமல்ல வாழ்விலும் மறுமலர்ச்சியை உருவாக்கினார். கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஜார் மன்னரின் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினார். இதற்காக நான்கைந்து முறை நாடு கடத்தியது மட்டுமின்றி அவரது பத்திரிகைகளை வாங்கவிடாமல் செய்ததைத் தவிர வேறெதுவும் அவரை வாட்டியதில்லை.

வறுமையின் காரணமாக தட்டு முட்டு சாமான்களை அடகு வைத்திருக்கிறார். குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகளைக் கூட விற்றிருக்கிறார். இறந்துவிட்ட குழந்தைக்கு ஒரு சவப்பெட்டி வாங்குவதற்கு கூட பணமில்லாமல் இவர் மனைவி தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியிருக்கிறார். பால் வாங்க காசில்லாமல் தானே மார்பு வலியையும், முதுகு வலியையும் தாங்கிக்கொண்டு குழந்தைகளுக்கு பாலூட்டியிருக்கிறார். எந்தத் தொழிலாளர்களின் வறுமையைப் போக்க வந்தாரோ அந்த வறுமைகள் எல்லாம் இவரைப் பற்றிக்கொண்டன. தன் மெல்லிய கரங்களால் பலர் கண்ணீரைத் துடைத்தார். ஆனால் இவர் கண்ணீரைத் துடைக்க யாரும் முன்வரவில்லை.

மார்க்ஸ் ஒரு சீர்திருத்தவாதியாக, சிந்தனையாளராக, எதார்த்தவாதியாக, லட்சியவாதியாக அறியப்படுவதற்கு காரணம் இருவர். ஒருவர் அன்புநிறைந்த காதல் மனைவி ஜென்னி. மற்றொருவர் உயிர் நண்பன் ஏங்கெல்ஸ்.

பெர்லின் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலச் சென்ற மார்க்ஸ் பக்கத்து வீட்டிலிருந்த ஜென்னி என்பவரைக் காதலித்தார். ஜென்னி அழகு ததும்பியவர். இவரோ அழகில்லாதவர். ஆனால் அறிவாளி. இங்கே அழகும் அழகும் காதலிக்கவில்லை. அழகும் அறிவும் காதலித்தது. ஜென்னி மிகுந்த செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். இருப்பினும் வாழ்க்கையை வறுமை தொடர்ந்து விரட்டியது. நான்கு குழந்தைகளைப் பெற்றெடுக்கிற வரை வறுமை. வரலாற்றில் இவ்வளவு வறுமையை அனுபவித்தவர்கள் யாரையும் பார்க்க இயலாது. வாட்டிய வறுமையிலும் தன் கணவனின் கொள்கைகள் வெற்றி பெறுவதற்கு உந்து சக்தியாக ஊன்றுகோலாகத் திகழ்ந்தார் ஜென்னி.

சீமான் மகனாயிருந்தும் மான்செஸ்டரில் ஒரு நூற்பாலையின் சொந்தக்காரனாயிருந்தும் மார்க்சின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டான் ஏங்கெல்ஸ். இருவரும் சந்தித்தனர். இருவருக்கும் பல்வேறு தளங்களில் கருத்தொற்றுமை இருந்தது. பின் இவர்கள் ஆயுள்கால நண்பர்களானார்கள். மார்க்சின் குடும்பச் சூழலை அறிந்த ஏங்கெல்ஸ் அவரை வறுமையில் தவிக்க விட்டு விட்டு நாம் மட்டும் வாழ வேண்டுமா என்று எண்ணி தனக்கு கிடைத்த பணத்தை எல்லாம் அவருக்கு அளித்து வந்தார். எண்ணற்ற பாட்டாளிகளின் கண்ணீரைத் துடைத்த மார்க்சின் கண்ணீரைத் துடைத்த நட்பின் அடையாளம் இவர் ஒருவரே.

மார்க்ஸ் லண்டனுக்குச் சென்று குடியேறி 12 ஆண்டுகளில் 1500-க்கும் மேற்பட்ட நூல்களைப் படித்துக் குறிப்பெடுத்து அதிலிருந்து தன் உயிர்ப் படைப்பான “மூலதனம்” என்ற நூலை வெளியிட்டார். உழைப்பில்லாமல் மூலதனம் இயங்கமுடியாது. ஆனால் மூலதனம் இல்லாமல் உழைப்பு இயங்கமுடியும். தொழிலாளர்களுக்கு உழைப்பு தான் மூலதனமே தவிர வேறு மூலதனம் தேவையில்லை என்பதை பாட்டாளி வர்க்கத்திற்கு கற்றுத்தந்த தொழிலாளர்களின் ஆசான். எழுத்தும், சிந்தனையும் தான் மார்க்ஸின் மூலதனம். இந்நூல் தலைவிதியே என்றவர்களை புரட்சிகரமாகச் சாடியது. மூலதனத்தை எழுதியதன் மூலம் தொழிலாளிகளின் மூலதனமாகவே விளங்கினார். சமதர்மம் பற்றி யாருமே கவலைப்படாத அந்த நாளில் சமதர்மம் பற்றிச் சிந்தித்தார். அதற்கு மார்க்சியம் என்று பெயர் சூட்டினார். “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்; உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை; பெறுவதற்கு ஒரு புதிய பொன்னுலகம் காத்துக் கொண்டிருக்கிறது” என்று முழங்கினார்.

தொழிலாளி இல்லையேல் இந்த உலகமே இல்லை என்று உணர்ந்தவர். உணர்த்தியவர். தொழிலாளி வர்க்கம் உழைப்பின் பலனைப் பெற்றுச் சிறக்க வேண்டும். நாளும் பொழுதும் உழைத்துவிட்டு ஏழ்மையின் காரணமாக ஏங்கித் தவிக்கக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். வர்க்கக் கோட்பாட்டை முன்னுக்குப் பின் முரணில்லாமல் எல்லா நிலைகளிலும் பாதுகாப்பதற்கான அரசியல் ஆயுதத்தை உருவாக்கியதுடன் தத்துவக் கருவியையும் உருவாக்கிய சிறப்பு இவருக்கு உண்டு. சுய நலமும் சுரண்டலும் நிறைந்த இவ்வுலகில் தன்னலமின்றி தகைசால் பெரியாராகத் திகழ்ந்தார்.

மார்க்ஸ் ஒரு சிறந்த பத்திரிகையாளர். அரசாங்கத்திற்காகத்தான் மக்கள் என்ற நிலை மாறவேண்டும் என்றும், மக்களுக்காகத்தான் அரசாங்கம் இருக்க வேண்டும் என்றும் துணிச்சலுடன் எழுதியவர்.

மார்க்ஸ்க்கு நிறைய தன்னம்பிக்கை உண்டு. இந்தத் தளராத தன்னம்பிக்கை தான் இவரை எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றியது என்பது மறுக்க முடியாத உண்மை. இவர் தன்னம்பிக்கையற்றவராக இருந்திருந்தால் எப்போதோ மனமொடிந்து போயிருப்பார். வறுமையைப் பற்றிக் கணவனும், மனைவியும் கவலைப்பட்டதேயில்லை. இருவருமே துச்சமென கருதினார்கள்.

உயர்ந்த லட்சியம் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை கொண்ட மார்க்ஸ் என்றுமே உழைப்பதற்கு தயங்கியதே இல்லை. மனசாட்சிக்கு மட்டுமே இறுதிவரை அஞ்சி வாழ்ந்த மார்க்ஸ் ஒரு மாவீரர் தான். எதிர்ப்புகள், போராட்டங்களிடையே வளர்ந்தும் வாழ்ந்தும் வந்த மார்க்ஸ் அவற்றைக் கண்டு துளியும் அஞ்சியதில்லை.மார்க்சிய சிந்தனையை உலகிற்கு அளித்த காரல்மார்க்ஸ் 1883-ம் ஆண்டு மார்ச்14-ந்தேதி காலமானார். மார்க்சின் மறைவு உலகத் தொழிலாளர்களுக்கு பெரும் துன்பத்தைத் தந்தது. அவர்கள் மார்க்ஸ் மறைவை இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் மூலதனம் வடிவில் அவர் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதுகின்றனர். ஆம்.. உண்மைதான்... பேராற்றல் கொண்ட லட்சிய வீரர் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார்.

செல்வந்தரின் மகளை மனைவியாக்கி கொண்டு முதலாளித்துவத்தையும், முதலாளிகளையும் எதிர்த்துப் போராடிய புரட்சிவாதி இன்று நம்மிடையே இல்லை. ஆனால் உயிரோடு வாழும் அவரின் சித்தாந்தங்கள் மூலம் மறைந்தும் உயிர் வாழ்கிறார். ஆகவே தான் சிந்தனையாளர் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்தினாலும் அவர் சிந்தனைகள் இச்சமூகத்தை நாளும் உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கின்றன. உலகத் தொழிலாளர்களை வாழவைக்கத் தன் வாழ்வைத் சிதைத்துக்கொண்ட மாபெரும் சிந்தனையாளரின் காலத்தால் அழிக்கமுடியாத சிந்தனைகளை நாளும் நினைவுகூருவோம். போற்றுவோம். 

- முனைவர் இரா.வெங்கடேஷ், உதவிப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்.