தினம் ஒரு தகவல் : பெருகும் வீட்டுக்கடன்


தினம் ஒரு தகவல் : பெருகும் வீட்டுக்கடன்
x
தினத்தந்தி 14 March 2019 10:20 AM GMT (Updated: 14 March 2019 10:20 AM GMT)

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. வங்கிகள் வழங்கும் கடன்களில் ரியல் எஸ்டேட் துறைக்கு பெரும் பகுதி ஒதுக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

வீட்டுக் கடன் பிரிவுக்கு வங்கிகள் வழங்கும் கடனுதவியை கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருப்பதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை உணரலாம்.

இதற்கு முந்தைய தலைமுறையில் பெற்றோர், மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் என கூட்டுக் குடும்பமாக வாழ ஒரு பெரிய வீடு இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை குறைந்துவிட்டது. இரண்டு மகன்கள் உள்ள குடும்பத்திற்கு மூன்று வீடுகள் தேவைப்படுகின்றன. மகன்களுக்கென தனித்தனியாக ஒரு வீடும், பெற்றோருக்கு ஒரு வீடும் வேண்டும் என்ற எண்ணம் இன்று பரவலாகிவிட்டது. இதற்கும் வங்கிகள் அளிக்கும் எளிமையான கடனுதவித் திட்டங்களே காரணம் என்று கூறலாம்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டுக்கடன் வழங்க வங்கிகள் ஒதுக்கீடு செய்த தொகை சில கோடிகள்தான். ஆனால், இன்று ஆயிரமாயிரம் கோடியில் வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதனால், ஒருவர் தனது காலத்திலேயே இரண்டு வீடுகளைக்கூட வங்கிக் கடனுதவி மூலம் வாங்க முடிகிறது. ஓய்வுகாலத்திற்கு பிறகு பெரும் தொகையை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் பழக்கமும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. சொந்த வீடு இருந்தாலும், புதிதாக இரண்டு வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு, இருக்கும் காலம் வரை பணம் சம்பாதிக்க இந்த முதலீடு உதவுகிறது.

பணி நிமித்தம் காரணமாக சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு நகருபவர்கள்கூட சென்னையில் ஒரு சொந்த வீட்டை வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு சொந்த ஊரில் வீடு இருந்தாலும் இதை முதலீடாக கருதுகிறார்கள். இன்னும் சிலர் திருச்சி, கோவை போன்ற நகரங்களில் வங்கிக் கடனுதவி மூலம் ஓரளவு குறைந்த விலையில் வீடுகளை முதலீட்டுக்காக வாங்கவும் செய்கிறார்கள். இன்னொரு பிரிவினர், தான் வசித்த சொந்த ஊரில் ஓய்வு காலத்தை பரபரப்பின்றி அமைதியான முறையில் கழிக்க, இரண்டாம் தர நகரங்களில் உள்ள வீடுகளை வாங்குவதை பலரும் விரும்ப தொடங்கியிருக்கின்றனர். இதில் இன்னொரு சவுகரியமும் இருக்கிறது.

புதிதாக வாங்கிய வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலம், வங்கிக் கடனுக்கான மாதாந்திர தவணையை செலுத்துவதில் இருந்து ஓரளவு நெருக்கடியும் அவர்களுக்கு குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக பெரு நகரங்களில் சொந்த வீடு வைத்திருக்கும் பலரும், இரண்டாம் கட்ட நகரங்களில் வங்கிக் கடனுதவி மூலம் மேலும் ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.

அதே நேரத்தில், பெரு நகரங்களில் நிலத்தின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவதும், மக்களின் மனநிலையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வீடுகள் பெருக இப்படி பல காரணங்கள் இருந்தாலும், நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினர், வீட்டுக் கடனுதவி பெற்றுக் கூட வீடு வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது இல்லையா?


Next Story