மோட்டார் வாகனங்கள் விற்பனை 8.06 சதவீதம் சரிவடைந்தது


மோட்டார் வாகனங்கள் விற்பனை 8.06 சதவீதம் சரிவடைந்தது
x
தினத்தந்தி 14 March 2019 2:49 PM GMT (Updated: 14 March 2019 2:49 PM GMT)

பிப்ரவரி மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த மோட்டார் வாகனங்கள் விற்பனை 8.06 சதவீதம் சரிவடைந்துள்ளதாக வாகன டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (எப்.ஏ.டீ.ஏ) தெரிவித்துள்ளது.

புள்ளிவிவரங்கள்

மோட்டார் வாகன டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்த அளவில் 14,52,078 மோட்டார் வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 15,79,349-ஆக இருந்தது. ஆக, விற்பனை 8.06 சதவீதம் குறைந்து இருக்கிறது. இரு சக்கர வாகனங்கள் விற்பனை 7.9 சதவீதம் சரிவடைந்து (12,22,883-வாகனங்களில் இருந்து) 11,25,405-ஆக குறைந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 2,15,276 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகி இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,34,632-ஆக இருந்தது. ஆக, விற்பனை 8.25 சதவீதம் குறைந்து இருக்கிறது.

இவ்வாறு வாகன டீலர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, பிப்ரவரி மாதத்தில் 2,72,284 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,75,346-ஆக இருந்தது. ஆக, விற்பனை 1.11 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதில் கார்கள் விற்பனை 4.33 சதவீதம் சரிவடைந்து 1,71,372 என்ற அளவில் உள்ளது.

முன்னணி நிறுவனங்கள்

பிப்ரவரி மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள், பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ். மோட்டார், ராயல் என்பீல்டு ஆகிய 5 முன்னணி நிறுவனங்களின் விற்பனை ஒட்டுமொத்த அளவில் 6 சதவீதம் குறைந்துள்ளது என சியாம் தெரிவித்துள்ளது.


Next Story