பொறுப்பான வாக்களிப்பும், வாக்காளரின் கடமையும்...!


பொறுப்பான வாக்களிப்பும், வாக்காளரின் கடமையும்...!
x
தினத்தந்தி 15 March 2019 8:47 AM GMT (Updated: 15 March 2019 8:47 AM GMT)

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சிதான் மக்களாட்சி என்று ஆபிரகாம் லிங்கன் கூறினார். மக்களாட்சியின் மையமாக இருப்பதுதான் தேர்தலும், வாக்களிக்கும் உரிமையும்.

இது சுதந்திர இந்திய சமூகப் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றென அரசியல் சாசனத்தின் முகப்பிலேயே கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட தேர்தல் உண்மையான மக்களாட்சியை ஏற்படுத்தவேண்டுமானால் ஒவ்வொரு குடிமகனும் தன் பொறுப்புணர்ந்த வாக்காளனாக இருத்தல் அவசியமாகிறது.

பொறுப்புணர்ந்த வாக்களிப்பு என்பது வாக்காளனுக்குரிய சில முக்கியமான கடமைகளை உள்ளடக்கியதாகும். முதலில் வாக்களிக்கும் உரிமை என்பது தமக்கானத் தனியுரிமை மட்டுமல்ல அது ஒரு சமூகக் கடமையும் கூட என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். வரும் காலங்களில் தேசம் எங்கு போகவேண்டும், சமூகம் பின்வரும் சந்ததியினர் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஏற்றதாக இருக்க வேண்டுமென்பதற்காக நாம் நிறைவேற்றும் கடமையென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப்புரிதல் இல்லாததுதான் இந்தியத் தேர்தல்களில் வாக்களிப்பு சதவீதம் மிகக் குறைந்ததாக உள்ளது. உலகின் மிக அதிகமான வாக்காளர்களை கொண்ட குடியரசு இந்தியா 1952 நாடாளுமன்றத் தேர்தலில் 45 சதவீதத்தில் இருந்தது 2014 தேர்தலில் 66 சதவீதம் ஆகியுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால் இது மிகச்சிறிய மாற்றமேயாகும். ஏறத்தாழ 40 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க வருவதேயில்லை என்பது வருந்தத்தக்கதாகும். வாக்களிப்பதற்காகத் தரப்படும் விடுமுறை மற்றொரு விடுமுறையாகப் பார்க்கப்படுவது வேதனை.

வாக்களிக்க வருவோரும் வாக்குக்குப் பணம் வாங்குவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றது. பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோரும் தான் வாக்குக்குப் பணம் தரும் கட்சிகளின் இலக்கு. மக்களின் வறுமையைத் தம்முடைய பலமாகக் கருதுவதுதான் இதன் காரணம். தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால் இலவசங்களைத் தருவோம் என்ற வாக்குறுதியும் லஞ்சம்தான்.

மத்திய தர வர்க்கமும் மேல்தட்டு வர்க்கமும் பணம் வாங்குவதில்லை கட்சிகளும் அவர்களுக்குத் தருவதில்லை எனினும் அவர்கள் வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்துகிறார்களா? இல்லையென்றே சொல்ல வேண்டும். இவர்களுள் பலர் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் நான் வாக்களிக்க விரும்பவில்லையென நோட்டாவுக்கு வாக்களிக்கின்றனர். நோட்டாவும் வாக்குரிமைதான். யாருக்குமே என் வாக்கு இல்லையென்று முடிவெடுக்குமுன் எல்லா வேட்பாளர்களைப் பற்றியும் அறிந்துகொண்டு தேர்தல் வாக்குறுதிகளைப் புரிந்துகொண்டு முடிவெடுத்தீர்களா என்ற கேள்வி எழாமலில்லை. ஆனால் இதற்கு விடையில்லையெனில் நோட்டாவைப் பயன்படுத்துவது பொறுப்பான செயல் அல்ல.

அடுத்ததாக வாக்காளர் பட்டியல். நகர்ப்புறங்களில் வாக்காளர் பட்டியலில் 40 முதல் 50 சதவீதம் வரைத் தவறாக இருப்பதாக ஒரு சில சமூக அமைப்புகள் நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளதாக அரசியலமைப்பின் செயல்பாடுகளுக்கான சீராய்வு செய்த வெங்கடாச்சலய்யா கமிஷன் கூறுகிறது. கிராமப்புறங்களில் இது 15 முதல் 20 சதவீதமாக இருப்பதாகவும் கூறுகிறது. எனவே ஒவ்வொரு வாக்காளனும் தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று உறுதிப்படுத்தி கொள்ளுதல் அவசியம். அரசியல் கட்சிகள் தமக்கு வாக்களிக்கமாட்டாரென்ற வாக்காளரின் பெயரைப் பட்டியலிலிருந்து நீக்கும் செயலில் ஈடுபடுவது நாமறிந்ததே. இதற்கென 1950 என்ற எண்ணுக்கு வாக்காளர் அடையாள எண்ணைக் குறுந்தகவல் அனுப்பினால் போதுமானது. மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் 18 வயதான குழந்தையின் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வது பெற்றோரின் அவசியம். இது கள்ள ஓட்டு போடுவதைத் தடுக்க ஒவ்வொரு பொறுப்பான வாக்காளனும் செய்யவேண்டிய கடமை.

அடுத்ததாகச் சமூக ஊடகச் செயல்பாடுகள். இன்று சமூக ஊடகங்கள் மிகப்பெறும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை உண்மையென நம்பும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது. அதில் பரப்பப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொள்ளாமல் பலருக்கும் பகிர்ந்து கொள்வது நாமறியாததல்ல. இந்த மனப்பான்மையை அரசியல் கட்சிகளும் தேர்தலை வணிகமாகப்பார்க்கும் நிறுவனங்களும் அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பப் பயன்படுத்துகிறார்கள். அத்தகைய செய்திகளைப் பற்றி எண்ணிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும் பல முக்கிய பிரச்சினைகளையும் அடிப்படைத் தேவைகளையும் மறந்துவிட்டு வாக்களித்துவிடுகிறோம், பின்னர் வருந்துகிறோம்.

அரசியல் கொள்கையும் மக்கள் நலனுக்கான தொலைநோக்குப்பார்வையும் இல்லாத கட்சிகளும், அமைப்புகளும் மக்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு கடன் மூலமாகத் தேர்தல் வெற்றியைப் பெறுவது ஒன்றும் புதிதல்ல. அது போன்ற செயல்களுக்குச் சமூக ஊடகங்கள் மிக எளிய ஆனால் சக்திவாய்ந்த கருவியாகும். எனவே பொறுப்பான வாக்காளர் அத்தகைய செய்திகளை சரியாக எண்ணிப்பார்த்தே எதிர்வினையாற்றல் வேண்டும்.

சமூக ஊடகங்கள் தேவையில்லையென்பதல்ல வாதம், ஆனால் விவாதப் பொருள் சரியானதாக இருக்கவேண்டும் என்பதேயாகும். நமக்கும் சமுதாயத்துக்கும் எது முக்கியமோ அதுவே விவாதப்பொருளாகவேண்டும். மக்கள் உரிமை அடிப்படைத்தேவைகள், அரசின் செயல்பாடுகளில் சரியானவை தவறானவை போன்றவற்றைப் பேசுதல் ஆரோக்கியமான விவாதமாகும். அது நேர்மறையான தேர்தல் அணுகுமுறையை நிலைப்படுத்துவதோடு உண்மையான மக்களாட்சிக்கு வழிகோலும்.

அடுத்ததாக தேர்தல் வாக்குறுதிகள். பல்வேறு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர். பொறுப்புள்ள வாக்காளர் அவற்றைக்கேட்டு மயங்கிவிடுதல் கூடாது. தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால் அந்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவார்கள், அதற்கான வழிமுறைகள் என்ன? நிறைவேற்றுவதற்கான பொருளும், மனிதவளமும் அரசிடம் இருக்கின்றதா? என்பனவற்றையும் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். இது போன்றவற்றை சமூக ஊடகங்களில் விவாதப்பொருளாக்கினால் நன்று. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ளுதல் தாமாகவே முன்வந்து ஏமாறும் பொறுப்பற்ற செயலில்லையா?

ஒவ்வொரு கட்சித்தொண்டரும் ஒரு வாக்காளர்தானே. எனவே அவர்களும் தமது கட்சிக்கொள்கைகளையும், வாக்குறுதிகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதும் எதிர்க்கட்சி கொள்கைகளையும், வாக்குறுதிகளையும் எதிர்ப்பதும் கூடாது. மேற்கூறிய அனைத்தும் ஒவ்வொரு கட்சித் தொண்டருக்கும் பொருந்தும்.

தேர்தலில் பங்கெடுப்பது, ஒரு வாக்காளராகப் பங்கெடுப்பதென்பது மாபெரும் சக்தியாகும். அதனைப் பொறுப்புணர்ந்து பயன்படுத்தினால் இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் சமூகம் மகிழ்ச்சியாக வாழும். எனவே பொறுப்பான வாக்காளராக இருப்போம்’ சமூகம் காப்போம்.

- சோ.கணேச சுப்பிரமணியன், கல்வியாளர்

Next Story