ஆன்மிகம்

ஜெபத்தை கேட்கும் தேவன் + "||" + God is the Hearer of prayer

ஜெபத்தை கேட்கும் தேவன்

ஜெபத்தை கேட்கும் தேவன்
மனுக்குலத்தின் மீட்பிற்காகவும், இரட்சிப்பிற்காகவும் மனு அவதாரம் எடுத்த இயேசு பிரான் பூமியில் வாழ்ந்த நாட்களில் சிறுமைப்பட்ட, நொறுங்குண்ட, வியாதிபட்ட அநேகருக்கு விடுதலையும், சமாதானத்தையும், சுகத்தையும் அருளினார்.
அவருடைய சொற்பொழிவுகளின் மூலம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டவர்கள் ஏராளம் ஏராளம். அவருடைய வார்த்தைகள் அநேகருக்கு ஜீவனையும், சமாதானத்தையும் கொண்டு வந்தது.

துயரப்பட்டு கிடந்தவர்கள் அவருடைய வார்த்தையால் ஆறுதல் அடைந்தனர். நம்பிக்கையற்றோருக்கு அவருடைய வார்த்தைகள் நம்பிக்கையைக் கொண்டு வந்தது. இனி மரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று வாழ்க்கையின் கடைசி நிமிடத்திற்கு வந்தவர்கள் கூட, புது வாழ்வு பெற்று, புதுப்பெலன் அடைந்து வாழ்க்கையில் எழும்பி பிரகாசிக்கும்படி அவருடைய வார்த்தைகள் வல்லமையுள்ளதாய் இருந்தது.

காரணம், அவர் சர்வ வல்லவர் ஆயிற்றே. ஆகவேதான் வேதம் கூறுகிறது, ‘அவர் சொல்ல ஆகும்; அவர் கட்டளையிட நிற்கும்’ என்று.

ஆம், அவருடைய வார்த்தையில் அவ்வளவு ஜீவன் உள்ளது.

அவர் ஊழியம் செய்த நாட்களில் ஒரு முறை தன் சீடர்களுடன் எருசலேமிலிருந்து புறப்பட்டு எரிகோ என்னும் பட்டணத்திற்கு வந்தார். அந்தப் பட்டணத்தில் இறைப்பணியை செய்துவிட்டு எருசலேமுக்கு திரும்புகையில் திரளான ஜனங்கள் அவருக்கு பின்னால் சென்றனர்.

அப்பொழுது எரிகோவின் வீதியில் கண் தெரியாத ஒருவன் பிச்சையெடுத்து வாழ்ந்துகொண்டிருந்தான். அவன் பெயர் பர்திமேயு. பார்வை இழந்த நிலையில் ஊனமுற்று இருந்ததால், தினமும் அவன் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்த வேண்டியிருந்தது. அவ்வாறு அவன் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கையில் இயேசுவும் அவருடைய சீடர்களும் அவனை கடந்து சென்றனர்.

அப்பொழுது அவன் இயேசு கடந்து போகிறதை அறிந்ததும், ‘தாவீதின் குமரனே, எனக்கு இரங்கும்’ என்று சத்தமிட்டு கூப்பிட்டான். அருகிலிருந்த அநேகர் அவனை பேசாமலிருக்கும்படி அதட்டினர். ஆனால் அவனோ கூப்பிடுவதை நிறுத்தவில்லை. முன்னிலும் அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான்.

‘சத்தம் போடாதே’ என்று தன்னை அதட்டிய மனிதர்களின் சத்தத்திற்கு அவன் செவி சாய்க்காமல் தொடர்ந்து ஆண்டவரை நோக்கி சத்தமிட்டு கூக்குரலிட்டபோது, அவனுடைய சத்தம் இயேசு கிறிஸ்துவின் காதுகளில் விழுந்தது.

இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவன் தன் மேல் வஸ்திரத்தை உதறி எறிந்துவிட்டு அவர் அருகில் வந்தான். யார் அவனை அதட்டினார்களோ, அவர்களே அவனை கூட்டிக்கொண்டு வந்து இயேசுவின் முன் நிறுத்தினர்.

ஆண்டவர் அவனை பார்த்து, ‘நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று இருக்கிறாய்’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் பார்வையடைய வேண்டும் ஆண்டவரே’ என்றான். அதற்கு இயேசு, ‘நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது’ என்றார். உடனே அவன் பார்வையடைந்து இயேசுவிற்குப் பின் சென்றான். (மாற்கு 10:46-52)

எனக்கருமையானவர்களே, பார்வை இழந்தவனைப் பார்த்து ‘நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்’ என்று அருள் நாதர் இயேசு கேட்டத்தைப் போல, உங்களை பார்த்துக் கேட்டு உங்கள் குறைவுகளை நிறைவாக்க அவர் விரும்புகிறார். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அந்த பார்வை இழந்தவன் செய்தது போல் ஆண்டவரை நோக்கி கூப்பிடுங்கள்.

நிச்சயமாய் அவர் உங்களுக்கு உதவி செய்வார். அவரை நோக்கி கூப்பிட்டு அற்புதங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் ஏராளம் ஏராளம். இன்றைக்கே இப்பொழுதே உங்கள் தேவைகளை தெய்வத்திடம் தெரிவியுங்கள். தெய்வம் உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்.

உங்களை தடை செய்யும் மனிதர்களின் வார்த்தைகளைத் தள்ளிவிட்டு நம்பிக்கையோடு கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். நிச்சயமாய் அவர் உங்கள் வேண்டுதலைக் கேட்டு உங்களுக்கு நன்மை செய்வார். ‘என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ’ என்று ஆண்டவர் நம்மை பார்த்து கேட்கிறார்.

ஆம், அவரால் எல்லாம் செய்யக்கூடும்.

‘மனிதரால் கூடாதவைகள் தேவனால் கூடும்’ என்று வேதம் கூறுகிறது (மத்தேயு 19:26).

மேலும், ‘தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை’ என்று வேதம் கூறுகிறது. (லூக்கா 1:37).

‘ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ’. (ஆதியாகமம் 18:13)

ஆகவே, அவரை நம்பி, அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் உங்களுக்காக அற்புதங்களை செய்ய காத்திருக்கிறார். ‘கேளுங்கள் தரப்படும்’ என்று வாக்குரைத்த தேவன், இந்த செய்தியை வாசித்து, விசுவாசத்தோடு நீங்கள் கேட்கிறவைகளை கட்டாயம் அருளி செய்வார். நீங்களும் அந்த பார்வை இழந்தவனைப் போல் அற்புதங்களைப் பெற்று தலை நிமிர்ந்து நடப்பீர்கள். அல்லேலூயா.

- சகோ சி. சதீஷ், வால்பாறை.