வித்தியாசமான விஞ்ஞானிகள் : பட்டாணி ஆய்வின் மூலம் மரபியலை மெய்ப்பித்த மேதை!


வித்தியாசமான விஞ்ஞானிகள் : பட்டாணி ஆய்வின் மூலம் மரபியலை மெய்ப்பித்த மேதை!
x
தினத்தந்தி 15 March 2019 11:18 AM GMT (Updated: 15 March 2019 11:18 AM GMT)

அம்மா, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள பட்டாணியில் ருசியான குருமா வைத்துக் கொடுத்தால், ரசித்துச் சாப்பிடுவோம். ஆனால், உலக மக்களின் உணவுத் தேவையை இன்றும், எதிர்காலத்திலும் ஈடுசெய்யப்போகும் மரபணு மாற்று மந்திரம் பட்டாணிச் செடியில்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?.

தாவரங்களிலும் மற்ற உயிரினங்களிலும் மரபணுக்களே அவற்றின் உயரம், நிறம் உள்ளிட்ட எல்லாவற்றுடனும் தொடர்பு கொண்டுள்ளது என்பதன் அடிப்படைகளை அன்றே பட்டாணி ஆராய்ச்சியில் கண்டுபிடித்து உலகிற்குச் சொன்னவர் விஞ்ஞானி கிரிகோர் ஜோகன் மெண்டல் ஆவார். மரபியலின் தந்தை என போற்றப்படும் அவரது வரலாற்றையும், கண்டுபிடிப்பையும் அறிந்து கொள்வோமா...

மெண்டல், ஆஸ்திரியா நாட்டில் ஒரு சிற்றூரில் 1822-ல் பிறந்தார். இவரது தந்தை உழவுத் தொழிலாளி. குடும்பத்தில் போதுமான வருமானம் கிடைக்காத காரணத்தினால் பலவிதமான தொல்லைகள் இவருக்கு ஏற்பட்டன. ஆனால் அவைகளை எல்லாம் மறந்துவிட்டு இயற்கையோடு ஒட்டி உறவாடினார்.

பூக்களின் இதழ்களில் பாடங்கள் படித்தார். மரத்தளிர்களின் அழகில் கல்வி கற்றார். பழங்களின் செழிப்பிலும், வளமையிலும் நுண்ணறிவு ஞானத்தை வளர்த்துக்கொண்டார். படிப்பின் மீது உற்சாகத்துடன் காணப்பட்டாலும் அதில் தொடர்ந்து முன்னேற வாய்ப்புகளும், வசதிகளும் அமையவில்லை.

மகனது இந்த நிலையை அவர் தந்தை நன்றாக உணர்ந்தார். எனவே அவர் தன் மகனை புருன் நகரத்து மடத்தில் இளந்துறவியாக சேர்த்துவிட்டார். அந்த மடமோ மிகவும் செல்வ செழிப்பானது. அங்கு ஏராளமான புத்தகங்கள் கொண்ட நூலகம் இருந்தது.

அறிவுத்தாகம் கொண்ட மெண்டல் அந்த நூலகத்தை தன் அறிவுப்பசி தீர்க்கப் பயன்படுத்திக்கொண்டார். இளம் துறவியான பின்னரே ஜோகன் மெண்டல் என இருந்த அவர் பெயரோடு கிரிகோர் என்ற பெயரும் சேர்ந்து கொண்டது.

தனது ஓய்வு நேரங்களில் எல்லாம் மடத்தில் இருக்கும் தோட்டத்தில் செடிகளில் இனக்கலப்பு பற்றிய ஆராய்ச்சியை செய்யத் தொடங்கினார். இதனைப்பற்றி 8 ஆண்டுகள் கடுமையாக ஆராய்ந்தார். யாருக்கும் இல்லாத பொறுமையானது அவருக்கு இருந்தது.

தனது கடமைகளை செய்து கொண்டே, ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பட்டாணிச் செடிகளின் பல வகைகளை ஆராய்ந்தார். அதனால் பல உண்மைகளை கண்டறிந்தார்.

மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். தற்போது இவரது கண்டுபிடிப்புகள், ‘மெண்டலின் விதிகள்’ எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. 1866-ல் இவர் தனது ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை.

ஒருமுறை தனது கருத்துகளை எல்லாம் தொகுத்து இயற்கை அறிவியல் கழகத்தில் சொற்பொழிவு செய்தார். அதனை அனைவரும் திறந்த வாய் மூடாமல் கவனமாக கேட்டனர். வியப்பின் விளம்பிற்கே சென்றனர். ஆனால் கூட்டம் முடிந்ததும் அனைவரும், எல்லாவற்றையும் மறந்தபடி கலைந்து சென்றனர். அப்போது அதன் பயன்களை யாரும் உணரவில்லை.

மெடண்டலின் கண்டுபிடிப்புகளுக்கு, அவர் உயிருடன் இருந்தவரை யாருமே முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அது அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. தனது ஏமாற்றத்தையும் பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் நம்பிக்கையை மட்டும் அவர் இழக்கவில்லை.

இதற்கிடையில் மெண்டல் மடத்தின் பெருந்தலைவராகிவிட்டார். இவரது கண்டுபிடிப்பை உலகம் உணரும் முன்பாகவே 1884-ல் இயற்கை எய்தினார். மடத்தில் இவர் மீது அன்பு கொண்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டனர்.

இவரது இறப்புக்கு பல ஆண்டுகளுக்குப் பின், மெண்டலின் பழைய ஆராய்ச்சி கட்டுரைகளை சில அறிஞர்கள் படித்து ஆச்சரியம் அடைந்தனர். அதன் உண்மைகளை உலகிற்கு உணர்த்த முன்வந்தனர். ஒரு அறிஞர், கோதுமையை குளிர்தாங்கி, அதிக விளைச்சல் தரும் வகையில் மரபணு மாற்றி அமைத்து சாதனை படைத்தார். மெல்ல மெல்ல, மெண்டல் கண்டுபிடித்த உண்மைகள், பட்டாணி மற்றும் தாவரங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பொருந்தும் என்பது தெரியவந்தது.

உயிருள்ள ஒவ்வொன்றும் தனித்த மரபுப் பண்புகளைப் பெற்றிருக்கின்றது. அவை ஜீன் எனும் மரபணுக்கள் மூலம் கடத்தப்படுகிறது என்பது பின்னாளில் அறியப்பட்டது. இந்த புரிதலுக்கு மெண்டலின் கண்டுபிடிப்புகள் வழி வகுத்ததால், மரபு வழி பண்பியல் என்ற புதுமை அறிவியல் துறை உருவானது. மரபியலின் தந்தை என அவர் போற்றப்பட ஆரம்பித்தார்.

ஒரு காலகட்டத்தில் பலராலும் மதிக்கப்படாததாக இருந்த மெண்டலின் விதிகள் இன்று பல கோடி மாணவர்களாலும் படிக்கக்கூடிய அறிவியல் பிரிவின் பாடங்களாக அமைந்துள்ளன. சாதனை செய்ய விரும்புபவர்கள் இவரது சரித்திரத்தை தவறாமல் அறிந்து கொள்வது அவசியமாகும்.

 - கே.நல்லசிவம்

Next Story