சிறப்புக் கட்டுரைகள்

குதிக்கும் ‘பாப்கார்ன்’... ருசிக்கும் குழந்தைகள்...! + "||" + Jumping 'popcorn' ... tasting kids ...!

குதிக்கும் ‘பாப்கார்ன்’... ருசிக்கும் குழந்தைகள்...!

குதிக்கும் ‘பாப்கார்ன்’... ருசிக்கும் குழந்தைகள்...!
குட்டீஸ், உங்களுக்கு ‘பாப்கார்ன்’ எவ்வளவு பிடிக்கும்? அப்பா எங்கே அழைத்துச் சென்றாலும் ஒரு கப் நிறைய பாப்கார்னை தனியே வாங்கி கொறித்து ருசிக்கிறீர்கள்தானே?
உங்களைப்போலவே பெரியவர்களுக்கும் மக்காச்சோளம் ரொம்பவே பிடிக்கும். உருளைக் கிழங்கு சிப்ஸ் உலக கொறிபண்டமாக விளங்கினாலும், ஆரோக்கியம் விரும்புபவர்கள் மக்காச்சோளத்தையே தங்கள் விருப்பமான கொறிபண்டமாக வைத்திருக்கிறார்கள். அது சரி, மக்காச்சோளத்திற்கு ‘பாப்கார்ன்’ என்ற பெயர் ஏன் ஏற்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? வாங்க அதைப் பற்றியும், மக்காச்சோளத்தைப் பற்றிய இன்னும் சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றியும் தெரிஞ்சுக்கலாம்...

* மக்காச்சோளம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்று. குறைந்த கலோரிகள் கொண்டது என்பதால் நொறுக்குத் தீனியாக நிறைய சாப்பிடலாம். சாதாரண ஒரு கோப்பை பொரித்த மக்காச்சோளத்தில் (பாப்கார்ன்) 31 கலோரி ஆற்றலே இருக்கிறது. இதே அளவுள்ள கோப்பையில் உருளை சிப்ஸ் சாப்பிட்டால் 139 கலோரி ஆற்றல் இருக்கும். எனவே மக்காச்சோளம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமோ? என்ற கவலையே இல்லாமல் சாப்பிடலாம்.

* மக்காச்சோளம் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுத்தாத உணவுப் பண்டமாகும். பால், முட்டை, வேர்க்கடலை போன்ற உணவுப் பொருட்கள் ஒவ்வாமை கொண்டவர்கள்கூட மக்காச்சோளம் சாப்பிடலாம்.

* பொரித்து, அவித்து, வறுத்து மக்காச்சோளம் சாப்பிடப்படுகிறது. மாவாக்கி, பண்டங்களாக தயாரித்தும் உண்ணப்படுகிறது. பலவிதமான மணம், சுவை, கூட்டுப்பொருட்களுடன் மக்காச்சோள கொறிபண்டங்கள் கிடைக்கின்றன.

* மக்காச்சோளம் முழுவதும் நார்ச்சத்தும், நோய் எதிர்ப்பொருட்களும் கொண்டது. காய்கறி, பழங்களைவிட சிறந்த நோய் எதிர்ப்பொருட்கள் மக்காச்சோளத்தில் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

* மக்காச்சோள முத்துகள் சிறிதளவு நீர்ச்சத்து கொண் டது. மக்காச்சோளத்தை பொரிக்கும்போது, வெப்பத்தால் அதில் உள்ள நீர் ஆவியாகி வெளியேறுவதால்தான் மக்காச்சோளம் வெடித்துச் சிதறி பொரியாகிறது. 347 டிகிரி வெப்பத்தில் மக்காச்சோளம் பொரியாக மாறும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

* சராசரி எடைகொண்ட மக்காச்சோளத்தில் 1600 முத்துகள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொரிக்கப்படாத நிலையிலேயே ஒரு கோப்பை நிறைய இருக்கும். 2 மேஜை கரண்டி அளவுள்ள மக்காச்சோள முத்துகளை பொரித்தால் ஒரு லிட்டர் பொரி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* மக்காச்சோளம் பொரிபடும்போது 3 அடி உயரம் வரை வெடித்து குதிக்கும். அதனால்தான் கூண்டுவடிவ கலனில் மக்காச்சோளம் பொரித்து எடுக்கப்படுகிறது. பொரிக்கும்போது குதித்து வெடிப்பதால்தான் அதற்கு ‘பாப்கார்ன்’ என்ற பெயர் ஏற்பட்டது.

* சுமார் 45 லிட்டர் கொள்ளளவு உடைய மக்காச்சோளத்தை ஒவ்வொரு அமெரிக்கரும் ஆண்டுதோறும் உண்கிறார்களாம். ஆண்டுக்கு சுமார் 18 பில்லியன் லிட்டர் கொள்ளளவு பொரி அமெரிக்கர்களால் சாப்பிடப்படுகிறது. இவ்வளவு பொரியைக் கொண்டு எம்பயர்ஸ்டேட் கட்டிடத்தை 18 முறை நிரப்ப முடியும்.

* அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் அதிகமாக மக்காச்சோள உற்பத்தி நடைபெறுகிறது. அந்த மாகாணத்தில் மட்டும் 250 மில்லியன் பவுண்டுகள் எடை கொண்ட மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது.

* அமெரிக்காவின் ஓகியோ மாகாணம் அருகே டப்ளினில் காங்கிரீட்டில் செய்யப்பட்ட மக்காச்சோள சிலைகள் ஒரு தோட்டம்போல உருவாக்கப்பட்டுள்ளது. ‘பீல்ட் ஆப் கார்ன்’ என்று இந்த தோட்டம் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மக்காச்சோள சிலையும் 8 அடி உயரம் இருக்கிறது.

* அமெரிக்காவில் 70 சதவீத மக்காச்சோளங்கள் டின்களில் அடைக்கப்பட்டு வீடுகளில் சாப்பிடப்படுகிறது. மீதி தியேட்டர்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் சாப்பிடப்படுகிறதாம். பாப்கார்ன் பொரித்து விற்பதில் 75 சதவீதத்திற்கு மேல் லாபம் கிடைப்பதாக மதிப்பிடப்படுகிறது. அமெரிக்காவில் சினிமா இடைவேளையின் முக்கிய கொறிபண்டமாக வரலாறு படைத்து வருகிறது மக்காச்சோளம்.

* அமெரிக்காவின் இல்லினாயிஸ் நகரில் அலுவலக கொறிபண்டமாக மக்காச்சோளம் 1958-ல் அங்கீகரிக்கப்பட்டது. அமெரிக்காவில் பாப்கார்ன் தினம் ஜனவரி 19-ந் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

* மக்காச்சோள உணவு எடையை குறைக்க உதவும் என்றும், நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது என்றும் அமெரிக்க உணவுக்கட்டுப்பாடு கழகமும், நீரிழிவு கழகமும் அங்கீகரித்துள்ளன.

* முட்டை மற்றும் வறுத்த மாட்டு இறைச்சியைவிடவும் அதிக இரும்புச்சத்து மக்காச்சோளத்தில் உள்ளது. உருளை சிப்ஸ்களைவிட அதிக நார்ச்சத்தும் இதில் உள்ளது.

* உலகின் மிகப்பெரிய மக்காச்சோள உருண்டை 2016-ல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. இது 12 அடி குறுக்களவும், 5 ஆயிரம் பவுண்டுகள் எடையும் கொண்டது. இது கின்னஸ் சாதனையும் படைத்தது.

* உலகில் அதிகமான மக்காச்சோளம் அமெரிக்காவில்தான் சாப்பிடப்படுகிறது. அதேபோல உலகம் முழுதும் சாப்பிடப்படும் மக்காச்சோளத்தில் மிகுதியானவை அமெரிக்காவில்தான் உற்பத்தியாகிறது.

* அமெரிக்காவில் பல வண்ணத்தில் விளைந்த பாரம்பரிய மக்காச்சோள விதைகளை கலப்பு செய்து, ரெயின்போ கார்ன் என்ற பெயரில் வண்ணமயமான மக்காச்சோளம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது அங்கு வண்ணமயமான மக்காச்சோளத்திற்கு நிறைய கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. இதை கிளாஸ் ஜெம் கார்ன் என்றும் அழைக்கிறார்கள்.

* சரியாக சாப்பிட மறுக்கும் குழந்தைகளின் பசிபோக்கவும், நார்ச்சத்து தேவையை ஈடுகட்டவும் மக்காச் சோளம் உதவும். ஆரோக்கியமான மக்காச்சோளத்தை ருசித்து நலம் பெறுவோம்!