கிரிக்கெட் வர்ணனையில் அசத்தும் ‘கிராமத்து இளைஞன்’


கிரிக்கெட் வர்ணனையில் அசத்தும் ‘கிராமத்து இளைஞன்’
x
தினத்தந்தி 16 March 2019 9:53 AM GMT (Updated: 16 March 2019 9:53 AM GMT)

ஐ.டி. ஊழியரை போன்ற தோற்றம், தமிழ் மொழியில் கிரிக்கெட் வர்ணனை, நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டிகளை பற்றிய விமர்சனங்கள், நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டிகளை பற்றிய கணிப்புகள்... என யூ-டியூப்பிலும், பேஸ்புக்கிலும் பரபரப்பாக இயங்குகிறார், ‘கிரிக் ஆனந்தா’.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதிைய சேர்ந்த வரான ஆனந்த், கிரிக்கெட்டை பற்றி சமூக வலைத்தளங்களில் பேச ஆரம்பித்தவுடன், ‘கிரிக் ஆனந்தா’வாக மாறிவிட்டார்.

கிரிக்கெட் வீரர்களை புகழ்வதாக இருக்கட்டும், இல்லை விமர்சிப்பதாக இருக்கட்டும் ‘கிரிக் ஆனந்தா’வின் ஸ்டைல் வித்தியாசப் படுகிறது. ‘தரமான சம்பவம் நிடாஸ் டிராபி’, ‘இளைய தளபதி வாஷிங்டன்’, ‘கிங் கான் ராஷித் கான்’ போன்ற தலைப்புகளில் இவர் வெளியிட்ட விமர்சன வீடியோக்கள், யூ-டியூப்பில் வைரலாகின. மேலும் உலகதர சேனல்களுக்கு நிகராக, போட்டி முடிந்த சில மணி நேரங் களிலேயே, போட்டியின் நிறை-குறை பற்றிய விஷயங்களை ஆய்வு செய்து, யூ-டியூப் வீடியோவாக மாற்றிவிடுகிறார்.

ஒரு ரசிகனாக மனதில் தோன்றும் விஷயங்களும், அனுபவசாலிகளை போன்ற ஆய்வு விவரங்களும் கிரிக் ஆனந்தாவின் வீடியோவில் புது பந்தை போலவே ‘ஸ்விங்’ ஆவதால், இவரது வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

ஆண்டிமடம் பகுதியில் இருந்து சாதாரண ஆனந்தாக கிளம்பி வந்தவர், எப்படி இன்று ‘கிரிக் ஆனந்தவாக’ ஜொலிக்கிறார் என்பதை, அவரே கூறுகிறார். அதை பார்ப்போம்.

கிரிக்கெட் பற்றி நன்றாக பேசுகிறீர்கள். ஆடுகளத்தை கணிக்கிறீர்கள். இரு அணியின் சாதக-பாதகங்களை விளக்குகிறீர்கள். உங்களுக்கும், கிரிக்கெட்டிற்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் கிரிக்கெட் வீரரா?

கிரிக்கெட் விளையாட்டை முழு மூச்சாக நேசிக்கும் பலகோடி ரசிகர்களில் நானும் ஒருவன். ஊர் மைதானங்களில் டென்னிஸ் பந்திலும், ரப்பர் பந்திலும் கிரிக்கெட் விளையாடியதை தவிர, இந்த கிராமத்தானுக்கும் கிரிக்கெட் உலகிற்கும் வேறு எந்தவிதமான தொடர்பும் இல்லை. சிறுவயதில் இருந்து கிரிக்கெட்டை ரசித்து பார்த்த அனுபவமும், கிரிக்கெட்டை பற்றி தேடி படித்த விஷயங் களுமே என்னை கிரிக்கெட் பற்றி பேச வைக்கிறது.

யூ-டியூப்பில் ஏராளமான சேனல்கள் இயங்குகின்றன. சினிமா விமர்சனம், ஓட்டல் விமர்சனம், சுற்றுலா தளங் கள் பற்றிய விமர்சனம்... என ஏராளமான வகைகள் இருந்தும் நீங்கள் ஏன் கிரிக்கெட் விளையாட்டை தேர்ந்தெடுத்தீர்கள்?

சிறுவயதில் இருந்தே ரேடியோ வர்ணனையாளராக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. என்னை சுற்றி இருந்தவர்களும் நான் பேசுவதைக் கேட்டு என்னை ஊக்கப்படுத்தியதால், வர்ணனை விஷயத்தில் நான் தீர்க்கமாக இருந்தேன். இருப்பினும் அதற்கான வாய்ப்புகள் கிடைக்காததால், புதுவிதமான முயற்சிகளில் இறங்கினேன். அதுதான் ‘பேஸ்புக் லைவ்’வில் கிரிக்கெட் வர்ணனை.

ஏதாவது ஒன்றை பற்றி பேசுவதற்கு பதிலாக அனைவருக்கும் பரீட்சயமான, அனைவரும் விரும்பக்கூடிய, நான் நன்கு அறிந்திருந்த கிரிக்கெட் பற்றி பேசலாம் என்று எண்ணி, பேஸ்புக்கில் வீடியோக்கள் வெளியிடத் தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இப்போதெல்லாம், கிரிக்கெட்டை செல்போன் ஆப்களிலேயே பார்த்து விடுகிறார்கள். அப்படி இருக்கையில் உங்களது ‘வாய்மொழி வர்ணனை’ எடுபடுகிறதா?

கிரிக்கெட் போட்டிகளை வீட்டில் இருந்தபடி டி.வி.யில் கண்டு ரசிப்பது ஒரு ரகம். அலுவலகங்களில் பணியாற்றும்போது ‘ஹாட் ஸ்டார்’, ‘சோனி லைவ்’... போன்ற ஆப்களின் மூலமாக செல்போனில் பார்ப்பது மற்றொரு ரகம். இவை இரண்டும் இல்லாதபட்சத்தில் ரேடியோ சேனல்களிலும், பிரத்யேக இணையதளங்களிலும் கிரிக்கெட் ஸ்கோர் விவரங்களை தெரிந்து கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி பேஸ்புக்கில் உலாவிக்கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான தமிழ் வர்ணனை சேவையைதான் நான் வழங்கிக்கொண்டிருக்கிறேன்.

கிரிக்கெட் போட்டியின் நேரலை வர்ணனை எப்படி கிரிக்கெட் சம்பந்தமான மற்ற பிற வீடியோக்களாக வளர்ந்தது?

பேஸ்புக்கில் என்னுடைய வர்ணனை வீடியோக்களை பார்த்த பார்வையாளர்கள் தொடர்ச்சியாக யூ-டியூப்பிலும் வீடியோ வெளியிடுமாறு வலியுறுத்தினர். அதனால் யூ-டியூப்பில் ‘கிரிக் ஆனந்தா’ என்னும் சேனலை தொடங்கி பேஸ்புக்கில் செய்து வந்ததை யூ-டியூப் வாயிலாகவும் தொடர்ந்து வருகிறேன்.

போட்டியின் வர்ணனை வீடியோக்களை தாண்டி, கிரிக்கெட் சம்பந்தமான பல சுவாரசிய வீடியோக்கள் பிறந்ததும், யூ-டியூப்பில்தான். இந்திய அணியில் புதிதாக இடம்பிடிக்கும் வீரர்கள் தொடங்கி, பிரபல வீரர்களின் பலம்-பலவீனம் பற்றிய விஷயங்கள் வரை யூ-டியூப் வீடியோவாக வெளிச்சமிட்டு காண்பித்தேன்.

இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி, இந்தியாவுடன் விளையாடும் மற்ற அணிகளின் ‘ஹாட் டாக்’ விஷயங்களையும் அவ்வப்போது பதிவு செய்கிறேன். குறிப்பாக போட்டி நடப்பதற்கு முன்பாகவே நான் கணித்து சொல்லும் விஷயங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதனால் என்னுடைய சேனலை 30 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள்.

உங்களுடைய கிரிக்கெட் கணிப்பின் வெற்றி, தோல்விகளை கூறுங்கள்?

இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், நியூசிலாந்து சுற்றுப்பயணங்கள் பற்றிய என்னுடைய கணிப்பு தவறவே இல்லை. சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த ஆஸ்திரேலிய அணியினர் அபாயகரமானவர்கள் என்ற என்னுடைய கணிப்பு பலித்திருக்கிறது.

பாராட்டு மற்றும் புறக்கணிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்?

என்னுடைய அப்பா சின்னப்பிள்ளை கிரிக்கெட் ரசிகர். ஆனாலும் நான் இந்த பாதையில் பயணிப்பதை அவர் விரும்பவில்லை. ‘என்ஜினீயரிங் படிப்பிற்கு ஏற்ற வேலையை தேடிக்கொள்’ என்று அறிவுறுத்தினார். இருப்பினும் என்னுடைய ஆர்வம், அவரை சமாதானப்படுத்தியிருக்கிறது. அதனால்தான் கிரிக்கெட் பற்றிய சில சுவாரசியமான விஷயங்களை என்னோடு பகிர்ந்து வருகிறார். ஆரம்பத்தில் கிரிக்கெட் உலகிற்கு சம்பந்தமில்லாத என்னுடைய பின்புலத்தை சுட்டி காட்டி ஏளனம் செய்தனர். ஆனால் வெகு விரைவிலேயே ஏற்றுக்கொண்டனர்.

நான் உத்வேகத்தை இழக்கும் போதெல்லாம் என் பார்வையாளர்கள், நண்பர்களிடமிருந்து புதுவிதமான உத்வேகம் கிடைக்கிறது. அவர்கள் என்னை சந்திக்கும்போதெல்லாம் கிரிக்கெட் குறித்து பேசுகிறார்கள். கருத்துகள் கேட்கிறார்கள். இணையதள கிரிக்கெட் விளையாட்டில் யார், யாரை தேர்ந்தெடுக்கலாம், யாரை கேப்டனாக்கி பணம் சம்பாதிக்கலாம் என்று கருத்து கேட்கிறார்கள். இதுபோன்ற சிறுசிறு பாராட்டுகள் என்னை மகிழ்ச்சியாக்குகிறது.

அடுத்த கட்ட திட்டம் என்ன?

பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஐ.பி.எல் வேண்டுமா? என்பது குறித்து மக்களிடம் ஒரு கருத்து கணிப்பு வீடியோ எடுக்க திட்டமிட்டுள்ளேன். மேலும் சின்ன சின்ன ஊர்களில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் பற்றிய தேடலை மேற்கொள்ள இருக்கிறேன். இதன்மூலம் வெளி உலகிற்கு பரீட்சயமில்லாத வீரர்களை வெளிச்சம் போட்டு காட்ட முடியும்.

மேலும் என்னை பார்ப்பவர்கள் விளையாட்டு சேனல்களில் சேர்ந்து வர்ணனை செய்ய சொல்கிறார்கள். அத்தகைய ஆசைகள் இல்லாமல் இல்லை. ஆசை நிறைவேறாதபட்சத்தில் நான் இப்படியே கிரிக்கெட் பார்த்துக் கொண்டும், அதை விமர்சித்துக் கொண்டும் இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன்.

கிராமப்புற விளையாட்டு களை, கிரிக்கெட் அழித்து விட்டது என்ற குற்றச்சாட்டிற்கு, கிராமத்து இளைஞனாக உங்களது பதில் என்ன?

கிரிக்கெட், உலகம் முழுவதும் பரவியுள்ள விளையாட்டு. உலகக்கோப்பை போட்டிகளை பல கோடி மக்கள் ரசிக்கிறார்கள். அதனால் கிரிக்கெட் மூலம் நடக்கும் வர்த்தகமும் பெரியது. எனவே கிரிக்கெட்டுக்கு அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. அதற்காக கிரிக்கெட் மற்ற விளையாட்டுகளை அழிக்கின்றது என்றும் கூறிவிட முடியாது. ஒரு விளையாட்டிற்கான ரசிகர்கள் அதிகரிக்கும்போதுதான், அந்த விளையாட்டின் மார்க்கெட்டும், விளையாட்டு வீரர்களின் மதிப்பும் அதிகரிக்கும். ஒரு விளையாட்டை பிரபலப்படுத்துவதும், அழிப்பதும் ரசிகர்களாகிய நம் கையில்தான் இருக்கிறது. என்றுமே ஒரு விளையாட்டு மற்றொரு விளையாட்டை அழிக்காது.

இன்று ஐ.பி.எல்.போட்டிகளை தொடர்ந்து, கபடி, கால்பந்து, பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகள் கிளப் அணிகளாக வளர்ச்சி கண்டிருப்பதால், வெகுவிரைவிலேயே கிராமப்புற விளையாட்டுகளும் எழுச்சி பெறும்.

Next Story