பயங்கரவாதத்திற்கு எதிராக போராடத் துடிக்கும் ‘ஈரான் ஹல்க்’


பயங்கரவாதத்திற்கு எதிராக போராடத் துடிக்கும் ‘ஈரான் ஹல்க்’
x
தினத்தந்தி 16 March 2019 10:15 AM GMT (Updated: 16 March 2019 10:15 AM GMT)

ஈரானை சேர்ந்த சாஜித் கரீபி, சமூக ஊடகங்களால் ‘ஈரான் ஹல்க்’ என அழைக்கப்படு கிறார்.

 6.2 அடி உயரம், 180 கிலோ உடல், குண்டான கைகள், தொப்பை தெரியாத வயிறு, கட்டுமஸ்தான கால்கள்... என ‘அவெஞ்சர்’ திரைப்படத்தில் வரும் ஹல்க்கை நினைவூட்டுவதால், அவர் ‘ஈரான் ஹல்க்’ காக மாறியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகும் சாஜித், தனது அடைமொழியாக மாறி இருக்கும் ‘ஈரான் ஹல்க்’ பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்ப்போம்.

சாஜித் எப்படி ஈரான் ஹல்க்காக மாறினார்?

கடந்த 10 ஆண்டுகளில் தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது. அதற்கு முன்பு வரை நான் சாதாரண மனிதர்களை போலவே காட்சியளித்தேன். பளு தூக்கும் போட்டிக்கு தயாரானபோதுதான் ஹல்க்காக உருமாறும் எண்ணம் தோன்றியது.

பார்ப்பதற்கு படுபயங்கரமாக இருக்கிறீர்கள். சாதாரண மனிதரில் இருந்து ஹல்க்காக மாறியது எப்படி?

என்னுடைய தாத்தாவும், அஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். அதை மனதில் கொண்டு, கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். நல்ல பலன் கிடைத்தது. ‘பாப்பாய்’ கற்பனை கதாபாத்திரத்தை போன்று மேல் உடலுக்கு என பிரத்யேக உடற்பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். அதாவது அகன்ற தோள்பட்டை, வலிமையான கைகள், பரந்து விரிந்த மார்பு ஆகியவற்றுடன் கட்டுமஸ்தான வயிற்றையும் உருவாக்க ஆசைப்பட்டேன். உடற்பயிற்சியின் கால அட்டவணை அதிகரிக்க அதிகரிக்க... எதிர்பார்த்த உடல் அமைப்புகளும் கிடைத்தன. அதற்கு பிறகுதான் சாதாரண சாஜித், ஈரான் ஹல்க்காக மாறினான்.

ஈரான் ஹல்க், ஒரு நாள்பொழுதில் என்னென்ன செய்கிறார்?

காலை கண்விழித்ததும் வயிறு நிறைய பால் பருகுகிறேன். உடற்பயிற்சிக்கு உடலை தயார் படுத்துவதற்காக காலையில் ஒரு மணிநேரம் கால்பந்து விளையாடுகிறேன். அதைத் தொடர்ந்து 6 மணிநேர உடற்பயிற்சி, 8 வேளை சாப்பாடு, இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு மணிநேர கால்பந்து விளையாட்டு, கடைசியாக 8 மணிநேர தூக்கம்... என நான் ரொம்ப பிசி. குறிப்பாக சாப்பிடும் சமயத்தில் படு பிசியாகிவிடுவேன்.

என்னென்ன சாப்பிடுகிறீர்கள். இயற்கை உணவுகளை தவிர்த்து, செயற்கை மருந்து பொருட்களை சேர்த்து கொள்கிறீர்களா?

என் தோட்டத்தில் விளையும் காய்கறிகள், கிழங்கு வகைகள், சுற்றுவட்டார பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளை தவிர்த்து வேறு எந்தவிதமான பொருட்களையும் சாப்பிடுவதில்லை. குறிப்பாக ஆங்கில மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் எந்தவிதமான ஊட்டச்சத்து பொருட்களையும் சேர்த்து கொள்வதில்லை. சமீபகாலமாக புரோட்டீன் பவுடர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. புரோட்டீன் பவுடர்களை உட்கொண்டால், உடல் எடை வேகமாக அதிகரித்து விடும். ஆனால் உடல் ஆரோக்கியம் கெட்டுபோய் விடும். அதனால்தான் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கிறேன்.

சமூகத்தில் உங்களின் அந்தஸ்து என்ன?

நான் தொழில் பொருளாதாரம் பிரிவில் பட்டம் பெற்றிருக்கிறேன். அதன் காரணமாக ஈரான் நாட்டில் இருந்தபடி, வெளிநாட்டு நிறுவனங்களோடு தொழில் செய்கிறேன். சமீபத்தில் என்னை பற்றிய தகவல்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகியதால், எனக்கு உலகத்தர குத்துச்சண்டை வீரரிடமிருந்து பாக்சிங் பயிற்சி கிடைத்தது. நான்கு வருட குத்துச்சண்டை பயிற்சிக்கு பிறகு, தற்போது உலக நாடுகளில் நடத்தப்படும் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொள்கிறேன். உலகளவில் பிரபலமான ‘டபுள்யூ.டபுள்யூ.ஈ’ ரெஸ்லிங் போட்டியிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பலசாலியாக இருக்கிறீர்கள். ஈரான் நாட்டின் மீது அதிக அக்கறை காட்டுகிறீர்கள். சண்டையிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். இந் நிலையில் ஈரான் நாட்டிற்காக பயங்கரவாத அமைப்புகளோடு மல்லுகட்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

தொழில், குத்துச்சண்டை போட்டி, விளம்பரம்... ஆகிய அனைத்தையும் மூட்டைகட்டிவிட்டு, என்னுடைய பெட்டி படுக்கைகளோடு, ராணுவ முகாம்களில் தஞ்சம் புகுந்து விடுவேன். ஆனால் 6.2 அடி உயரமும், 180 கிலோ எடையும் கொண்ட என்னை ஈரான் ராணுவம் சேர்த்து கொள்ளுமா? என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் எதிரி நாட்டு படைகளுக்கு என்னை குறிப்பார்த்து சுடுவதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது.

நீங்கள் சாலையில் நடந்து செல்லும்போது, கிராம மக்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?

திரையில் வரும் ஹல்க்கை பார்த்து ஊரே பயப்படும். ஆனால் என்னை காமெடி ஹல்க்காக பார்க்கிறார்கள் போலும். இல்லையென்றால் சிரித்தபடி, என்னிடம் வந்து ‘ஒரு செல்பி பிளீஸ்’ என்று கேட்க மாட்டார்கள்.

Next Story