வரலாற்று கற்பனை : கருவறையாக மாறிய குடவரைகள்


வரலாற்று கற்பனை : கருவறையாக மாறிய குடவரைகள்
x
தினத்தந்தி 16 March 2019 10:23 AM GMT (Updated: 16 March 2019 10:46 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்தில் இருக்கிறது மாமண்டூர் கிராமம். இங்கு பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட குடவரை குகை கோவில்கள் காணப்படுகின்றன.


இந்திய தொல்லியல் துறையால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று. இந்த குடவரை, 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. அந்த கல்வெட்டு செய்தியில் இருந்து பிறந்த சிறிய கற்பனையே இந்த கதை.

அழகிய மாலைப்பொழுது. சூரியன் தன் கதிர்களை பூமியின் மறுபக்கம் திருப்பிக் கொண்டிருந்தான். சூரியன் மறைய, வருணன் தன் பலத்தை காட்ட சமயம் பார்த்தபடி இருந்தான். மேகங்கள் தங்களிடம் இருந்த நெருக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. இதைக்கண்ட மரங்களோ, ‘நாம் அசைந்தால், காற்றில் மேகங்களும் கலைந்துவிடுமோ’ என்ற அச்சத்தில் அப்படியே அசைவற்று நின்றன.

இதை எல்லாம் கண்டும், காணாமலும், அந்த கடைத்தெருவில் மக்கள் அனைவரும் மும்முரமாக பொருட்களை விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்தனர். மக்களிடையே சற்று அதிகமாகவே பொற்காசுகளும், பொருட்களும் புழங்கியது.

போர் ஒன்று முடிந்துவிட்டால் வெற்றி கொண்ட தேசம், செல்வச் செழிப்போடு திகழும். பொருட்கள், செல்வம், அடிமையாட்கள் மற்றும் பெண்டிர் முதற்கொண்டு, தோல்வி அடைந்த தேசத்தில் இருந்து கொண்டு வரப்படும். எந்த ஒரு போர் தர்மத்திலும் இது எழுதப்படவில்லை என்றாலும், ஒரு மனிதன், தன் மானிட புத்தியை, இதுபோன்ற சமயங்களில் வெளிப்படுத்தவே செய்வான். எந்த தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல.

அந்த கடைத்தெருவின் முடிவில், வெட்டவெளியில் ஒரு சிறிய சிற்பக் கூடம். வயதான கல் தச்சர் ஒருவர், விளக்கு வெளிச்சத்தில், தான் செதுக்கி முடித்த சோமாஸ்கந்தரின் சிலைக்கு, எண்ணெய் தடவி மெருகேற்றிக் கொண்டிருந்தார்.

அருகில் ஒரு சிறிய மரத்தடியில், நிறைமாத கர்ப்பிணியாக, மூன்றாம் பிரசவத்திற்காக வந்த தச்சரின் மகள், தன் தந்தையின் கலை மோகத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். அந்த வழியே வந்த படைவீரர் கூட்டம் ஒன்று, கல் தச்சரிடம் வம்புக்கென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அவர்கள் மது போதையில் இருந்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு வீரன், தன் கையில் வைத்திருந்த பிரம்பை எடுத்து கல் தச்சரின் தலையில் அடித்தான். வலியில் துடித்து கீழே விழுந்தார் அவர்.

போதையின் வசப்பட்டிருந்த அந்தக் கூட்டமோ, உச்சி குளிர்ந்து நகைத்துக் கொண்டிருக்க, தச்சரின் மகள், அதிர்ச்சியில் கீழே விழுந்ததில் பிரசவ வலி ஏற்பட்டது. அவள் வலி பொறுக்க முடியாமல் கதறி அழுதாள். அவளின் வேதனையை கண்டு, வான் மேகங்களும் அழ ஆரம்பித்தன மழை ரூபத்தில்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும், கடைத்தெரு வழியாக சென்று கொண்டிருந்த அந்த நடுத்தர வயது பெண், சத்தம் வந்த திசை நோக்கி ஓடினாள். அங்கு ஒரு கர்ப்பிணிப் பெண், பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருப்பதை கண்டதும், அவளுக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது.

அதே சமயம் அந்த நடுத்தர வயது பெண்ணை கண்டதும், அங்கு போதையில் கலவரம் செய்து கொண்டிருந்த வீரர்களுக்கு அதிர்ச்சி. திடகாத்திரமான உடற்கட்டுடன், கச்சை அணிந்து, இடுப்பு மடிப்புகள் தெரியாத அளவிற்கு புடவை கட்டி, பார்ப்பதற்கு ஒரு அரச குல பெண்ணைப் போல இருந்தாள். வளைந்த புருவங்கள், மை வரைந்த விழிகள், நெற்றி நிறைய குங்குமம், தலை நிறைய சாமந்திப்பூ, உடல் முழுவதும் மணக்கும் வாசனை திரவியங்கள் என ஆறடி சிலையைப் போல் இருந்தாள்.

அவளை கண்டதும் மது போதையில் இருந்த வீரர்களுக்கு, எலுமிச்சைப்பழ சாற்றை எடுத்து, தங்கள் மூக்கில் ஊற்றி போதையை தெளிய வைத்தது போல் இருந்தது. திடகாத்திரமான அந்தப் பெண்ணின் கண்களில் தெரிந்த கோபக் கனலைக் கண்டு, அந்த வீரர்கள் அனைவரும் அசைவற்றுப் போய் ஒரு ஓரமாக கூடி நின்றனர். அவர்களின் வாயில் இருந்து எந்த ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை.

பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணின் குரல், நடுத்தர வயதுப் பெண்ணை தட்டி எழுப்பியது. அவர் கடைத்தெருவில் இருந்த சில வயதான பெண்களை வரவழைத்தாள். மரத்தடியை சுற்றி கட்டப்பட்ட நான்கு சீலைகளின் மறைவில், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

இவை அனைத்தையும் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள், அந்த நடுத்தர வயதுப் பெண். அவளது காதுகளில் பிரசவ வலியால் வெளிப்பட்ட அழுகுரலும், கண்களில் மழையில் நனைந்து கொண்டிருந்த சோமாஸ்கந்தரின் உருவமும் சிந்தனையை தட்டி எழுப்பின. அவள் மனம் எதையோ எண்ணியபடி அசைபோட்டுக் கொண்டிருந்தது.

‘ஒரு பெண், ஒரு கருவை தன் வயிற்றில் சுமக்கும் பத்து மாதமும், அதனை பேணிப் பாதுகாத்து எவ்வளவு ஜாக்கிரதையாக பிரசவிக்கிறாள்? அந்த கருவுக்கு, தாயின் கருவறை போன்ற ஒரு பாதுகாப்பான, உன்னதமான இடம் வேறொன்றும் இருக்க இயலாது. கருவில் வளரும் குழந்தையானது பத்து மாதமும், எந்த ஒரு பயமும் இன்றி, தன் தாயின் இதயத்துடிப்பை கேட்டபடியும், தன் உணர்வுகளை வெளிப்படுத்தியபடியும் ஆனந்தமாக இருக்கிறது.

ஆனால் இந்த சோமாஸ்கந்தர், மழையிலும் வெயிலிலும் ஏன் வாட வேண்டும்? கடவுளுக்கு அது போன்ற ஒரு இடம், பஞ்ச பூதங்களின் தாக்கத்தை முடிந்த வரை தாங்கும் விதமான ஒரு அறையை நம்மால் ஏன் அமைக்க முடியாது? எம் இறைவன் ஆனந்தமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் வெகு நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறதே?. அசைக்க முடியாத ஒரு பொருள் இந்த பூமியில் இருக்கும் என்றால், அது மலைகள் தான்.

நாம் ஏன் அந்த மலைகளை குடைந்து, இறைவனுக்கு ஒரு கருவறை அமைக்கக் கூடாது? விசித்திரமாக சிந்திப்பதே நம் திறமை ஆயிற்றே? நாம் ஏன் இதை முயற்சி செய்து பார்க்கக்கூடாது?.. சரி.. செய்வோம்’ என்று அந்தப் பெண் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘வீல்..’ என்ற சத்தத்துடன் வெளிப்பட்ட குழந்தையின் அழுகுரலோடு, குதிரையின் காலடி ஓசையும் கேட்டது.

பிரசவம் முடிந்தது. ஒரு வயது முதிர்ந்த பெண், அந்த பச்சிளங்குழந்தையை, மயக்கத்தில் இருந்து நினைவு திரும்பிய கல் தச்சரிடம் காட்டினாள். அவர் ஆனந்த கண்ணீரில் மூழ்கினார்.

அதேநேரம் குதிரையில் வந்து இறங்கிய பல்லவ தளபதிகள், மதுவில் இருந்த வீரர்களை கைது செய்து இழுத்துச் சென்றனர். பல்லவ தளபதிகளோடு வந்திருந்த இளவரசர் நரசிம்மவர்மர், அரசர் குல தோற்றத்தில் இருந்த நடுத்தர வயது பெண்ணைப் பார்த்து, ஒரு சிறிய நகைப்புடன் வணங்கினார். கண்களில் கள்ளத்தனமும், உதட்டின் ஓரத்தில் விஷமப் புன்னகையுமாக, அந்த பெண் வேகமாக நடந்து சென்று, தெருவின் முடிவில் உள்ள திருப்பத்தில் மறைந்தாள்.

அந்த பெண்ணின் சிந்தனைக் குதிரைகள், ‘தொண்டை மண்டலத்தில் உள்ள மாமண்டூர் மலைகளில் குடவரைகள் அமைக்க வேண்டும்’ என்பதையே மனதில் நினைத்தபடி இருந்தது.

விசித்திர வேடமும், விசித்திர சிந்தனைகளிலும் மூழ்கிய அந்த ஆறடி பெண் சிலை, வேறு யாரும் அல்ல.

‘அபிமுக', ‘சத்ருமல்ல', ‘அவனிபாஜன', ‘விசித்திர சித்தர்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட, பல்லவ சக்ரவர்த்தி மகேந்திரவர்ம பல்லவர் தான். முதல் முதலாக, தென்னாட்டுக்குக் குடவரைகளை அறிமுகப்படுத்திய சித்திரக்காரபுலி.

- ஷ்யாம்

Next Story