சிறப்புக் கட்டுரைகள்

ஒரு குடும்பம்... ஒரு பள்ளிக்கூடம் + "||" + A family ... a school

ஒரு குடும்பம்... ஒரு பள்ளிக்கூடம்

ஒரு குடும்பம்... ஒரு பள்ளிக்கூடம்
அசாமைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு பள்ளிக்கூடம் கட்டிவிட்டனர்.
அசாமின் பிஸ்வநாத் மாவட்டம் சுவாகுரி கிராமத்தில் உள்ள அந்தத் தொடக்கப்பள்ளியில், சுமார் 60 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 95 சதவீதம் பேர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தப் பள்ளியை கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கியவர், ஹமீத் அலி. இவர் ஓர் ஏழை விவசாயி. 65 வயதாகும் ஹமீத் அலி, சூழ்நிலை காரணமாக தொடக்கக் கல்வியுடன் படிப்பை நிறுத்திவிட்டவர்.

தனது நிலை தமது வாரிசுகளுக்கு ஏற்படக்கூடாது என்று எண்ணித்தான், கஷ்டப்பட்டு இந்தப் பள்ளியைக் கட்டி யிருக்கிறார். தற்போது இப்பள்ளியில் ஹமீத் அலி மற்றும் அவரது சகோதரர் களின் பிள்ளைகள் படித்து வருகின்றனர். இவர்கள் ஒரு கூட்டுக் குடும்பம் போல வசித்து வருகிறார்கள்.

வீட்டுக்கு அடுத்தாற்போலவே பள்ளி என்பதால், குழந்தைகள் குதூகலத்துடன் இங்கு வருகிறார்கள். ‘‘இது எங்களுக்கு வீட்டில் இருப்பதைப் போலத்தான். இங்கு என்னுடன் படிக்கும் அனைவரும் எனது அண்ணன், தம்பிகள்தான். நாங்கள் வீட்டில் ஒன்றாக இருக்கிறோம், பள்ளியிலும் ஒன்றாகப் படிக்கிறோம்’’ என்கிறான், இரண்டாம் வகுப்பு பயிலும் ஜெய்னல் அபிதின்.

அபிதினின் ஒன்றுவிட்ட சகோதரி யாஸ்மினா, ‘‘எங்களுக்கு பள்ளிக்கு வருவதே ஜாலியாக இருக்கும். வகுப்புகள் முடிந்ததும் நாங்கள் அனைவரும் ஒன்றாக விளையாடுவோம். ஒன்றாக படிக்கும் விதத்தில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்’’ என்கிறார்.

ஹமீத் அலி குடும்பத்தினர் முதலில் அஜாலாசுதி என்ற இடத்தில் வசித்திருக்கின்றனர். அங்கு இவர்களின் நிலம் பிரம்மபுத்திரா நதியால் அரித்துச் செல்லப்பட்டதால், அங்கிருந்து சுவாகுரி கிராமத்துக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

‘‘இங்கு வந்தபிறகுதான், அருகில் பள்ளி எதுவும் இல்லை என்பதை ஹமீத் அலி குடும்பத்தினர் உணர்ந்திருக்கின்றனர். எனவே அவர்கள் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் தாமாகவே ஒரு பள்ளிக் கட்டிடத்தைக் கட்டிவிட்டனர்’’ என்கிறார், இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான நபா தாஸ். இவர் உள்ளிட்ட இரு ஆசிரியர்களை அரசாங்கம் நியமித்திருக்கிறது.

‘‘நாங்கள் எளிய விவசாயிகள்தான். பல இடங்களில், பல முறை எங்கள் நிலம், சொத்துகளை பிரம்மபுத்திரா வெள்ளம் அடித்துச் சென்றிருக்கிறது. கடைசியாக நாங்கள் சுவாகுரி கிராமத்துக்கு வந்தோம். இங்கு சிறிது இடம் வாங்கி, வீடுகள் கட்டத் தொடங்கினோம். அப்போதுதான், எங்கள் குழந்தைகள் படிக்க அருகில் பள்ளிக்கூடம் இல்லை என்பதை அறிந்து, எங்கள் இடத்திலேயே எளிமையாக ஒரு பள்ளிக்கூடம் கட்டிவிட்டோம்’’ என்கிறார், ஹமீத் அலி.

இவருக்கு 7 மகன்கள், ஒரு மகள். தங்கள் தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலானோர், சிறுவிவசாயிகளாகவும், கூலித் தொழிலாளி களாகவும் இருப்பதாக ஹமீத் அலி கூறுகிறார். இவரது ரத்த சொந்தங்கள், உறவினர்கள் என்று சுமார் 500 பேர் அருகருகே வசிப்பதாகவும் சொல்கிறார்.

ஹமீத் அலியின் மருமகள் ருஷானாரா பேகம், தங்கள் கூட்டுக் குடும்பத்தில் மொத்தம் 75 குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களில் 65 குழந்தைகள் தங்கள் பள்ளியிலேயே படிப்பதாகவும் தெரிவிக்கிறார்.

‘‘இது எங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பக்கத்திலும், வசதியாகவும் இருக்கிறது’’ என்கிறார், ருஷானாரா.

இங்கு ஆரம்பக் கல்வியை முடிக்கும் குழந்தைகள், அடுத்ததாக சற்றுத் தூரத்தில் இருக்கும் பிஸ்வநாத் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

இந்தப் பள்ளியில் யார் வீட்டு குழந்தைகளும் படிக்கலாம் என்ற போதும், பெரும்பாலான குழந்தைகள் ஹமீத் அலி கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

இங்கு பணிபுரியும் இரு ஆசிரியர்களுக்கும் இப்பள்ளிக்கூடம் பிடித்துத்தான் இருக்கிறது. ஆனால் இன்னும் ஓர் ஆசிரியர் கூடுதலாக இருந்தால் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்க வசதியாக இருக்கும் என்கிறார்கள்.

ஒரு குடும்பத்துக் குழந்தைகள் அனைவரும் ஒரே பள்ளியில் படிப்பது ஓர் அபூர்வமான விஷயம்தானே?

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா: பள்ளிக்கூடத்தில் அடையாளம் தெரியாத நபர் புகுந்து துப்பாக்கிச்சூடு - 2 பேர் படுகாயம்
அமெரிக்காவில் உள்ள பள்ளிக்கூடத்தில் அடையாளம் தெரியாத நபர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. லைபீரியா நாட்டில் பள்ளிக்கூடத்தில் தீ விபத்து; 28 குழந்தைகள் கருகி சாவு
லைபீரியா நாட்டில் பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 28 குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
3. பள்ளிக்கூட மேற்கூரை இடிந்து விழுந்து 50 குழந்தைகள் காயம் 6-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிலைமை கவலைக்கிடம்
மீரட்டில் பள்ளிக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 50 குழந்தைகள் காயம் அடைந்தனர். 6-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
4. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்களை மாணவர்கள் பயன்படுத்தினால் பள்ளி நிர்வாகத்துக்கு அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாணவர்கள் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுமி உயிரிழப்பு
அமெரிக்காவின் மிசாவுரி மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுமி உயிரிழந்தார்.