சிறப்புக் கட்டுரைகள்

அதிவேக விமானங்களின் அதிர்வலைகளைப் படம்பிடித்த ‘நாசா’ + "||" + 'NASA' to shoot high speed aircraft Vibrate

அதிவேக விமானங்களின் அதிர்வலைகளைப் படம்பிடித்த ‘நாசா’

அதிவேக விமானங்களின் அதிர்வலைகளைப் படம்பிடித்த ‘நாசா’
‘சூப்பர்சானிக்’ எனப்படும் அதிவேக விமானங்கள் ஏற்படுத்தும் அதிர்வலைகளை ‘நாசா’ முதல்முறையாக படம் பிடித்திருக்கிறது.
ஒலியை விட வேகமான, அதேநேரம் இடிமுழக்கம் போன்ற இரைச்சலை ஏற்படுத்தாத விமானங்களை உருவாக்குவது தொடர்பான ஆய்வில் நாசா ஈடுபட்டுள்ளது.

ஒரு சூப்பர்சானிக் விமானம் மணிக்கு 1225 கி.மீ. என்ற அதிவேகத்தை எட்டும்போது, அது காற்றில் ஏற்படுத்தும் அழுத்தத்தால் உருவாகும் அதிர்வலை களால் காதைக் கிழிக்கும் பேரோசை உண்டாகிறது.

இதுதொடர்பாக கலிபோர்னியா ஆர்ம்ஸ்டிராங் விமான ஆராய்ச்சி மையத்தில் நாசா ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அந்த ஆய்வின்போது இரு டி-38 சூப்பர்சானிக் விமானங்கள் வெறும் 30 அடி இடைவெளியில் வானில் செலுத்தப்பட்டன. அப்போது, அதிநவீன, அதிவேக கேமரா கொண்டு அவை படம் பிடிக்கப்பட்டன.

அந்த விமானங்கள் வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது எடுக்கப்பட்ட அப்புகைப்படங்கள், அற்புதமான காட்சியை வெளிப்படுத்தி இருக்கின்றன.

இரு விமானங்களும் ஒன்றையொன்று ஒட்டி நெருக்கமாகப் பறந்த நிலையில், ‘விமானங்கள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்’ என்று, நாசாவுடன் இணைந்து செயல்படும் பொறியியல் நிறுவனமான ஏரோஸ்பேஸ் கம்ப்யூட்டிங் இங்க்-ன் நீல் ஸ்மித் கூறுகிறார்.

இரு விமானங்கள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் எப்படி ஒன்றுடன் ஒன்று குறுக்கிடுகின்றன என்ற தங்களின் புரிதலை மேம்படுத்த தற்போது கிடைத்திருக்கும் தரவுகள் உதவும் என்றார் அவர்.

சூப்பர்சானிக் விமானங்கள் ஏற்படுத்தும் பேரோசை, பெருந்தொந்தரவு ஆகும். அவை, பூமியில் உள்ள மக்களை திடுக்கிடச் செய்வது மட்டுல்ல, சில நேரங்களில் கட்டிட ஜன்னல் கண்ணாடிகளைக் கூட உடைத்துவிடும்.

அதனால்தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் சூப்பர்சானிக் விமானப் பறப்புக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.

தற்போது சூப்பர் சானிக் விமானங்களின் அதிர்வலைகளைப் படம்பிடித்திருப்பது, எக்ஸ்-59 என்ற அடுத்தகட்ட சூப்பர்சானிக் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த விமானம் உருவாகும்போது, ஒலியைத் தாண்டிய வேகத்தில் பறக்கும் அதே நேரம், மிகக் குறைவான ஓசையையே ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

அப்படி ஒரு நிலை உருவானால், சூப்பர்சானிக் விமானப் பறப்புக்கு விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்படலாம். சூப்பர்சானிக் பயணிகள் விமானமும் உருவாகலாம். இந்த வகை ‘கான்கார்டு’ விமானத்துக்குத்தான் கடந்த 2003-ம் ஆண்டு விடை கொடுக்கப்பட்டது.