அதிர்வுகளைக் கொண்டு யானைகள் வருகையை அறியும் நுட்பம்


அதிர்வுகளைக் கொண்டு யானைகள் வருகையை அறியும் நுட்பம்
x
தினத்தந்தி 16 March 2019 2:17 PM GMT (Updated: 16 March 2019 2:17 PM GMT)

யானைகள்- மனிதர்கள் மோதலால் இரு தரப்புக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், யானைகள் வரும்போது ஏற்படுத்தும் அதிர்வுகளைக் கொண்டு அவற்றின் வருகையை முன்னரே அறியும் புதிய வழிமுறையைக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், அதைப் பரிசோதித்து வருகின்றனர்.

யானைகள் சாதாரணமாக நடப்பது மூலமாக மட்டுமின்றி, அவை எழுப்பும் ஒருவித ஒலியைக் கொண்டும் அவற்றின் வருகையை முன்னரே அறிந்துகொள்ள முடியும் என்று பெத் மோர்டிமர், டார்ஜெ நிஸ்சன் மெயர் ஆகிய விஞ்ஞானிகள் இணைந்து கண்டறிந்துள்ளனர்.

நிலநடுக்கத்தை அறிவதற்குப் பயன்படுத்தப்படும் அமைப்புமுறையைக் கொண்டே யானைகளின் வருகையையும் கண்டறியலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள், தங்களது ஆராய்ச்சி முடிவுகள் குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் விளக்கினர்.

நிலநடுக்க அலைகள் எனப்படும் ‘சீஸ்மிக் அலைகள்’ தரையின் வழியே ஓரிடத்துக்கு வருவதை, அது சுமார் நான்கு மைல்கள் தூரத்தில் இருக்கும்போதே கண்டறிய முடியும் என்பதை அவர்கள் அப்போது விளக்கினர்.

கென்யாவின் அடர்ந்த காடுகளில் உள்ள யானைகள் நடப்பதன் மூலமும், ஒலியின் மூலமும் வெளிப்படுத்திய அதிர்வுகளை ஜியோபோன் என்ற சாதனத்தைக் கொண்டு அவர்கள் அளவிட்டனர்.

ஓரிடத்தின் நிலையான புவியியல் தகவல்களையும், நிலநடுக்க அலைகளைக் கண்டறியும் கருவியுடன் இணைக்கப்பட்ட மென்பொருளில் பதிவாகும் கணினி சார்ந்த கணக் கீடுகளையும் கொண்டு, யானைகள் வெளிப்படுத்தும் அதிர்வுகள் குறித்த துல்லியமான விவரங்களைக் கண்டறிய முடியும் என்கிறார்கள் அவர்கள்.

யானைகளின் அதிர்வுகளைப் பதிவுசெய்யும்போது அவற்றின் செயல்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டு, பின்பு வெகுதூரத்தில் அமைக்கப்பட்டிருந்த கருவியில் பதிவான அலைகளுடன் ஒத்திசைவு செய்து அது யானையின் செயல்பாடுதான் என்பதை உறுதி செய்தனர்.

மேலும், மணலின் தன்மையும், தரைப்பகுதியில் நிலவும் மற்ற ஒலிகளும் வெகுதூரத்திலிருந்து யானையின் நடமாட்டத்தை அறிவதற்கு தடையாக உள்ளதும், பாறைகளின் வழியே அலைகள் பரவுவதைவிட மணற்பாங்கான இடங்களின் வழியாக அதிர்வுகள் அதிக தூரத்துக்கு பயணிப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த அமைப்புமுறையின் மூலம் யானைகள் வெகு தொலைவில் இருந்தாலும், அவை என்ன செய்துகொண்டிருக்கின்றன, ஏதாவது ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதா என்பது குறித்து முன்னரே தெரிந்துகொள்ள முடியும்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள், ‘கரண்ட் பயாலஜி’ என்ற அறிவியல் இதழில் வெளி யிடப்பட்டிருக்கின்றன.

‘‘யானைகள் இயற்கையாக எழுப்பும் அதிர்வுகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியில், இந்த ஆராய்ச்சி முடிவுகள் புதிய வாய்ப்புகளை வெளிப்படுத்துகின்றன’’ என, சேவ் தி எலிபென்ட்ஸ் என்ற யானைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான பிராங்க் போப் இந்த ஆராய்ச்சி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

‘‘நெரிசலான நிலப்பரப்பில் மனிதனால் உருவாக்கப்படும் இரைச்சல் காரணமாக ஏற்படும் சவால்கள் குறித்தும் இந்த ஆராய்ச்சி பல புதிய விஷயங்களை அளித்துள்ளது’’ என்று அவர் மேலும் கூறினார்.

மாறிவரும் சூழ்நிலைகளால், யானைக்கூட்டம்- மனித சமூகம் என இரு தரப்பும் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் நிகழ்கின்றன. உயிர்ச்சேதங்கள் போன்றவை ஏற்படுகின்றன.

இந்நிலையில், யானைகளின் வருகையை முன்கூட்டி அறிந்து, இரு தரப்பும் பாதிப்பை தவிர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளைக் கண்டறிவது அவசியமானதே.


Next Story