பின்னும் கூந்தலில் மின்னும் சாதனை


பின்னும் கூந்தலில் மின்னும் சாதனை
x
தினத்தந்தி 17 March 2019 9:49 AM GMT (Updated: 17 March 2019 9:49 AM GMT)

மகாலட்சுமி கமலக்கண்ணன் சென்னையை சேர்ந்த பிரபலமான அழகுக்கலை நிபுணர். இவருக்கு நெருக்கமான பெண்மணி ஒருவரை மார்பக புற்றுநோய் தாக்கி இருக்கிறது.

காலட்சுமி கமலக்கண்ணன் சென்னையை சேர்ந்த பிரபலமான அழகுக்கலை நிபுணர். இவருக்கு நெருக்கமான பெண்மணி ஒருவரை மார்பக புற்றுநோய் தாக்கி இருக்கிறது. அது இவருக்குள்ளும் கவலையை ஏற்படுத்த, அது பற்றிய ஆழமான சமூக சிந்தனையுடன் பெண்கள் சமுதாயத்திற்கே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இவரை கின்னஸ் சாதனையை நோக்கிச் செல்லவைத்திருக்கிறது. அது பெண்களிடம் மாபெரும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சம்பவத்தையும், அது தொடர்பாக மகாலட்சுமி கமலக்கண்ணன் செய்த சாதனையையும் அவரே சொல்லக்கேட்போம்!

“15 வருடங்களுக்கு மேலாக அழகுக் கலைத்துறையில் என்னோடு நெருக்கமாக அந்த பெண் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் அழகுக்காகவே பிறந்தவர்போல் எந்நேரமும் பளிச்சென்று காட்சியளிப்பார். அவரது முகம் எப்போதும் ஜொலிப்பாக இருக்கும். அவர் திடீரென்று நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. பத்து பதினைந்து நாட்கள் இடைவெளியில் நான் அவரை பார்க்க சென்றபோது, அவர் தனது முகத்தை மூடிக்கொண்டு இருட்டுக்குள் உட்கார்ந்திருந்தார். அது ஏன் என்று எனக்கு முதலில் புரியவில்லை. துணியை விலக்கிக்கொண்டு அவரது முகத்தை பார்த்தபோது நான் அதிர்ந்துவிட்டேன். அவர் தலையில் கூந்தல் கொத்துக்கொத்தாக அடர்ந்துபோய் இருந்தது. கண் புருவங்களில்கூட முடிஇல்லை.

நாங்கள் அழகு பேபி என்ற செல்லப் பெயரோடு அழைக்கப்பட்ட அவர், பாட்டி போன்று காட்சியளித்தார். மார்பக புற்றுநோய்க்கு கொடுக்கப்பட்ட கீமோதெரபி சிகிச்சை அவரை அந்த அளவுக்கு பாதித்திருக்கிறது. பெண்களுக்கு கூந்தல் மிக முக்கியமானது. எந்த நோய் தாக்கினாலும் பெண்கள் முதலில், ‘தங்கள் முடி உதிர்ந்துபோகுமே..!’ என்றுதான் கவலைப்படுவார்கள். அந்த அளவுக்கு அவர்கள் கூந்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். முடி இல்லாவிட்டால் அவர் களது தன்னம்பிக்கையே தளர்ந்துபோகும்.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொன்னேன். அது மட்டும் போதாது என்பது எனக்கு தெரியும். அடுத்து நான் பிரான்ஸ் சென்றபோது அங்கு இயற்கை முடியிலே உருவாக்கப்பட்ட நவீன வகை ‘விக்’ ஒன்றை வாங்கிவந்து அந்த பெண்ணுக்கு கொடுத்தேன். அதை அவர் பயன்படுத்த தொடங்கியதும், நோயில் இருந்து மீண்டு வந்ததுபோல் அவருக்கு தன்னம்பிக்கை அதிகரித்து விட்டது. சிகிச்சையும் கைகொடுத்தது. அடுத்த ஆறே மாதங்களில் அவர் பாதிப்பின் சுவடு தெரியாத அளவுக்கு தன் அழகை மெருகேற்றிக்கொண்டார். நோயில் இருந்தும் மீண்டுவிட்டார்.

இப்போது உலக அளவில் பெண்களை வேட்டையாடும் நோய்களில் மார்பக புற்றுநோய் முதலிடத்தில் இருக்கிறது. ஆரோக்கியமும், அழகும் சேர்ந்து அதில் பாதிக்கப்படுவதால், பெண்கள் நிலைகுலைந்து போகிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் பலரை நான் பல்வேறு சூழ்நிலைகளில் சந்தித்தேன். முடிதானம், விக் தானம், பொருளாதார உதவி போன்றவைகளை செய்துகொண்டிருந்தபோதிலும், அதில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே நிரந்தர தீர்வு காணமுடியும் என்று நம்பினேன். உலகத்தில் உள்ள பெண்களை எல்லாம் திரும்பிப்பார்க்கவைக்கவேண்டும் என்றால் உலக சாதனை செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதனால் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டோம்” என்கிறார், மகாலட்சுமி. இவரது கணவர் கமலக்கண்ணன். மகன்கள்: அஸ்வின்குமார், நடிகர் வருண். மருமகள் பவித்ரா அஸ்வின்குமார்.

“எந்த நோயாக இருந்தாலும் அதை தொடக்கத்திலே கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை பெற்று அதை குணப்படுத்துவது எளிது. மார்பக புற்று நோயும் தொடக்கத்திலே கண்டுபிடிக்கப்படவேண்டும். அதற்காக பெண்கள் சிரமப்படவேண்டியதில்லை. வீட்டிலே சுயபரிசோதனை செய்தால்போதும். மார்பகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றமோ, கட்டிகளோ இருந்தால் அவரவராலே எளிதாக கண்டறிந்து சிகிச்சை பெற்று, எளிதாக அதில் இருந்து மீண்டுவிடலாம்.

சுயபரிசோதனைக்கான விழிப்புணர்வை உருவாக்குவதில் முதற்கட்டமாக சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் ‘விக்’கத்தான் என்ற நிகழ்ச்சியை நடத்தினோம். அதில் 200 பெண்கள் கலந்துகொண்டு ஜூம்பா நடனம் ஆடி, கடற்கரைக்கு வந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அடுத்து, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஏராளமான மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் மற்றும் அழகுக்கலைத் துறையை சார்ந்தவர்களுக்கும், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுக்கள் மூலம், ‘பெண்கள் மார்பக சுயபரிசோதனை செய்வது எப்படி?’ என்று நேரடியாக விளக்கம் அளித்தோம். அதிலும் நல்ல பலன் கிடைத்தது. பின்பு எனது மகா இன்டர்நேஷனல் அகாடமி பார் ஹேர் அண்ட் பியூட்டி நிறுவனம், அழகுக்கலை நிபுணர் மேனகாவின் டா எக்ஸ்டென்ஷன் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து, மார்பக புற்றுநோய்க்கான சுயபரிசோதனையை வலியுறுத்தும் நோக்கத்தில் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டோம்” என்கிறார், மகாலட்சுமி கமலக்கண்ணன்.

இந்த சாதனை நிகழ்வு பெண்களை கவரும் விதத்தில் வித்தியாசமானதாக இருந்தது. ‘பிங்க் பவர்’ என்ற பெயரில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் அழகுக்கலையில் தேர்ச்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள், சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிட்டத்தட்ட 200 கிலோ எடை கொண்ட ‘பைபர் ஹேர்’ என்ற இயற்கைத்தன்மை அதிகம்கொண்ட செயற்கை முடியை பின்னலிடத் தொடங்கினார்கள். வெகுநீளம் கொண்ட அந்த முடிக்கு ஏற்கனவே பிங்க் வர்ணம் பூசியிருந்தார்கள். பிங்க், மார்பக புற்றுநோய்க்கான விழிப் புணர்வு நிறமாகும்.

மறைந்த நடிகர் ஜெமினிகணேசனின் கொள்ளுப் பேத்தியான நெகாரிகாவின் இயற்கை கூந்தலுடன் அந்த பைபர் ஹேரை இணைத்து நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் மின்னல் வேகத்தில் மிக நேர்த்தியாக பின்னலிட்டார்கள். அதனை கின்னஸ் சாதனையை அங்கீகரிக்கும் குழு பல்வேறு கோணங்களில் பதிவுசெய்துகொண்டிருந்தது.

பத்தாயிரம் சதுர அடி கொண்ட அந்த பிரமாண்டமான அரங்கில் ஏராளமான மேஜைகள் போடப்பட்டிருந்தன. பின்னல் அனுமார் வால் போன்று நீண்டுகொண்டே செல்ல அதனை அந்த மேஜைகளில் மலர்க்கொத்து போன்று லாவகமாக சுற்றி அடுக்கிக்கொண்டே இருந்தார்கள். நெகாரிகாவால் திரும்பிப் பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அது நீ..ண்..டு.. கொண்டே போனது. மகாலட்சுமி கமலக்கண்ணன் சாதனைக்குழுவை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க, பெண்கள் கைவலியை கவனத்தில்கொள்ளாமல் பின்னல் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

3 மணி நேரம் 11 நிமிடம் 31 வினாடிகளில் அவர்கள் 484.5 மீட்டர் நீளத்துக்கு பிங்க் நிற ஜடை கூந்தலை பின்னியிருந்தார்கள். இந்த முயற்சி கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர்கள் 2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் நிகழ்த்தப்பட்ட 361.4 மீட்டர் பின்னல் கூந்தல் சாதனையை முறி யடித்திருக்கிறார்கள். அது ஏழு மணி நேரத்தில் ஏராளமானவர்கள் பங்குபெற்ற ஒரு குழுவால் பின்னப்பட்டிருக்கிறது. புகழுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அந்த சாதனையை, இவர்கள் பெண் உலகத்திற்கான சேவை நோக்கில் செயல்பட்டு முறியடித்திருக்கிறார்கள். இந்த சாதனை உடனடியாக ‘யூனிக் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு’ மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

கின்னஸ் சாதனைக்கான முயற்சியை மகாலட்சுமி கமலக்கண்ணன் வெற்றிகரமாக நிறைவு செய்ததும், ‘உங்களுக்கு சமூக சேவை ஆர்வம் உருவானது எப்படி?’ என்று அவரிடம் கேட்டோம்.

“என் பெற்றோர் மறைந்த சிரிப்பு நடிகர் ஐசரிவேலன்- புஷ்பா வேலன். சிறுவயதில் இருந்தே சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்தை பெற்றோர் எனக்கு தந்தார்கள். அதனால் பள்ளியில் நான் நாட்டு நலப்பணித்திட்ட குழுவில் இணைந்து செயல்பட்டு சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகளை உணரத் தொடங்கினேன். அதனால் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் அப்போதே என்னிடம் உருவாகிவிட்டது. என்னால் முடிந்த உதவிகளை தோழிகளோடு இணைந்து செய்துகொண்டிருந்தேன்.

பிளஸ்-டூ கல்வியை முடித்துவிட்டு, அடுத்து என்ன படிப்பது என்று நான் சிந்தித்துக்கொண்டிருந்தபோது பெற்றோர் எனக்கு திருமணம் செய்துவைத்தார்கள். பின்பு என் கணவர் ஒத்துழைப்போடு அழகுக் கலைத் துறையில் நவீன கல்வியை பல நாடுகளுக்கு சென்று கற்றுக்கொண்டு, இந்த துறைக்குள் நுழைந்தேன். அண்ணன் ஐசரி கணேஷ் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். அந்த காலகட்டத்தில் அழகுக்கலைத் துறைக்கு வர பெண்கள் தயங்கினார்கள். நான் தைரியமாக இறங்கி, வாழ்வதற்கு வழியின்றி திக்கற்று நின்றுகொண்டிருந்த ஏராளமான பெண்களுக்கு தன்னம்பிக்கையோடு அழகுக் கலை பயிற்சி அளித்து அவர்கள் கவுரவமாக வாழ வழிசெய்தேன். மாநில, மத்திய அரசு அங்கீகாரத்தோடு அந்த கல்வியை புகட்டினேன். அதுவே நான் செய்த சமூக சேவைதான். இப்போதும் வேல்ஸ் பல்கலைக் கழக சான்றிதளோடு அழகுக்கலை கல்விப் பணியை செய்துகொண்டிருக்கிறேன்”

இந்த சாதனைக்கு நீங்கள் முடிப் பின்னலை தேர்வு செய்தது ஏன்?

“பெண்களை மார்பக புற்றுநோய் பெருமளவு தாக்கிக்கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மனவேதனையை தந்துகொண்டிருக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களும் அந்த நோய்க்கு இலக்காகியிருக்கிறார்கள். அதனால் முதலிலே கண்டறியும் சுயபரிசோதனைக்கு நாம் தயாராகினால் மட்டுமே எதிர்கால பெண்கள் சமூகத்தை காப்பாற்றமுடியும். பெண்கள் கூந்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலும், இந்த நோய் கூந்தலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாலும், கூந்தலை பின்னுவதிலேயே சாதனையை நிகழ்த்த விரும்பினேன்.

புற்றுநோய்க்கு முகம் கிடையாது. ஆனால் அது நமக்கு நெருக்கமானவர்களை தாக்கும்போதுதான் அதன் கோர முகம் நமக்கு தெரியும். அதனால் நாம் ஒவ்வொருவரும் மார்பக புற்றுநோய்க்கான சுயபரிசோதனையை அவரவர் குடும்பத்தில் அறிமுகம் செய்யவேண்டும். யாராவது பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு நமது அளவற்ற அன்பையும், நேரத்தையும் வழங்கி, ‘அந்த பாதிப்பு என்பது அவர்களது வாழ்க்கையின் ஒரே ஒரு அத்தியாயத்தில் வந்துபோகும் விஷயம்தான். அதுவே முழு அத்தியாயம் அல்ல’ என்று தன்னம்பிக்கையூட்டவேண்டும்” என்று கூறிய மகாலட்சுமி கமலக்கண்ணன் பின்னலிட்டு, மாலைபோல் குவித்துவைக்கப்பட்டிருந்த ஜடையின் நீளத்தை பார்த்து வியந்துகொண்டிருந்த பார்வையாளர்களின் அருகில் சென்று, “மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீங்கள் செலுத்தும் அன்பு, இந்த பின்னலைவிட நீளமாக இருக்கவேண்டும்” என்று நெகிழ்ச்சியாக வேண்டுகோள்வைத்தார். அது அனைவரது இதயத்தையும் தொட்டது.

Next Story