சிறப்புக் கட்டுரைகள்

அழகும்... அதிக வருமானமும்... + "||" + Beautiful and ... more income

அழகும்... அதிக வருமானமும்...

அழகும்... அதிக வருமானமும்...
யானையின் கம்பீரத்தி்ற்கு கூடுதல் அழகு சேர்ப்பது, அதன் நெற்றிப்பட்டம். இது யானையின் முகத்தின் நடுவில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும்.
யானையின் கம்பீரத்தி்ற்கு கூடுதல் அழகு சேர்ப்பது, அதன் நெற்றிப்பட்டம். இது யானையின் முகத்தின் நடுவில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும். இமைக்கொட்டாமல் பார்க்கும் அளவுக்கு அதில் ஒருவித ஈர்ப்பு இருக்கும். இந்த நெற்றிப்பட்டம் தயாரிப்பது ஒருவித அபூர்வ கலை. வீடுகளில் வளர்க்கப்படும் யானைகள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருப்பதால், இந்த நெற்றிப்பட்டத்தின் தேவை குறைவுதான். அதனால் நெற்றிப்பட்டம் தயாரிப்பதை ஜனரஞ்சகமாக்கி வீடுகள் மற்றும் அலுவலகங்களை அலங்கரிக்கும் அழகுப் பொருளாக மாற்றியிருக்கிறார், காயத்ரி தேவி. கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த இவருக்கு வயது 35. இந்த கலைப்படைப்பு மூலம் இவர் மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்.

“யானைகளுக்கு அணிவிக்கும் நெற்றிப்பட்டங்களை நான் தயார் செய்வதில்லை. அதனை தரமாக செய்து முடிக்க பல ஆயிரம் ரூபாய் செலவாகும். வீடுகள், அலுவலகங்களை அலங்கரிக்கும் விதத்திலே இதனை தயார் செய்கிறேன். இவைகளை தொங்கவிட்டால் அந்த இடத்தில் ஐஸ்வர்யம் குடியிருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், நிறைய பேர் இதனை விரும்பிவாங்குகிறார்கள். அதனால் இதன் தேவை அதிகமாக இருந்துகொண்டிருக்கிறது.

சிறுவயது முதலே எனக்கு கைவினைப் பொருட்களை உருவாக்கும் ஆர்வம் இருந்தது. ஒரு முறை நான் வெளியூருக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, அங்கு சிலர் அமர்ந்து இந்த நெற்றிப்பட்டத்தை வடிவமைத்துக்கொண்டிருந்ததை பார்த்தேன். அது என்னை வெகுவாக கவர்ந்தது. எங்கள் வீட்டில் அதை தொங்கவிட்டால் ரொம்ப அழகாக இருக்கும் என்று நினைத்து அதன் விலையை கேட்டேன். என்னால் வாங்க முடியாத அளவுக்கு விலைசொன்னார்கள். அப்போதுதான் அவ்வளவு விலைகொடுத்து அதனை வாங்குவதைவிட நாமே வீட்டில் போய் அதை வடிவமைக்க முயற்சிக்கலாமே என்ற எண்ணம் உருவானது.

அதனால் கோட்டயத்தில் எங்கள் வீட்டின் அருகில் யாராவது நெற்றிப்பட்டம் உருவாக்குகிறார்களா? என்று தேடத் தொடங்கினேன். கண்டுபிடித்து, அவர்களை சந்தித்தேன். நான் எதிர்பார்த்ததைவிட மிக அழகாக அவர்கள் தயார் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களிடம், எனக்கு பயிற்சி தர முடியுமா என்று கேட்டேன். அவர்கள் பயிற்சி தர தயங்கியதைத் தொடர்ந்து, திருச்சூருக்கு சென்றேன். அங்கு நிறைய பேர் அதை தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலம் நான் பயிற்சிபெற்றேன்” என்கிறார், காயத்ரி தேவி.

இவர் ஐந்து வருடங்களாக நெற்றிப்பட்டம் தயார் செய்துகொண்டிருக்கிறார். பள்ளிப் பருவத்தில் பாசி மணிகளில் கலைப்பொருட்களை உருவாக்குவது இவரது பொழுதுபோக்காக இருந்து கொண்டிருந்திருக்கிறது. அதில் ஆர்வம் அதிகமாகி பேஷன் ஜூவல்லரி மற்றும் பல்வேறு விதமான கலைப்பொருட்கள் தயாரிக்க கற்றிருக்கிறார். ஆனால் அவைகளில் கிடைத் ததைவிட அதிக வருமானத்தை நெற்றிப்பட்டம்தான் இவருக்கு ஈட்டித்தந்திருக்கிறது.

“நெற்றிப்பட்டம் தயாரிக்க பெரிய அளவில் கலைத்திறன் தேவையில்லை. ஆனால் இதற்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அவைகளை முழுமையாக கற்றுக்கொள்ளவேண்டும். துணியை வாங்கி அதில் முத்துக்களை கோர்த்து இதுபோல் உருவாக்கிவிட முடியாது. முதலில் வினாயகரை வைத்து திருக்கண் உருவாக்கவேண்டும். பின்பு பஞ்சபூதங்களையும், நவக்கிரகங்களையும் இதில் ஒருங்கிணைத்து கொண்டு வரவேண்டும். நிறைவாக சந்திரகலைவைத்து மணியை கட்டவேண்டும். ஒவ்வொரு வரிசையில்வைக்கும் குமிழ்களும் ஒற்றைப்படையாக இருக்கவேண்டியது அவசியம். யானைக்கான நெற்றிப்பட்டம் இதில் கூடுதல் வேலைகளை கொண்டதாக இருக்கும். உள்ளங்கையின் அளவு முதல் ஏழரை அடி உயரமுள்ள நெற்றிப்பட்டம் வரை நான் தயார் செய்திருக்கிறேன்” என்கிறார்.

இவருக்கு வாழ்க்கையில் பொருளாதாரரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கிறது. அதில் இருந்து மீள இந்த கலையை நம்பி, கடுமையாக உழைத்திருக் கிறார். அந்த உழைப்புதான் இவரை அதிக உயரத்திற்கு கொண்டுசென்றிருக்கிறது.

“கலைச் சேவை என்பதெல்லாம் என் நோக்கமாக இருந்ததில்லை. எனக்கு பணம் தேவைப்பட்டது. அதில் இருந்து மீண்டு வர இந்த கலையை பயன்படுத்திக்கொண்டேன். உங்களுக்கும் பணம் தேவைப்பட்டால், கடுமையாக உழைத்து நீங்கள் சம்பாதிக்க விரும்பினால், இந்த கலையை கற்றுக்கொள்ளுங்கள். இந்த கலை உங்களை ஒருபோதும் கைவிடாது.

நெற்றிப்பட்டத்திற்கான குமிழ்கள் தனித்தனி ஷீட்களாக கிடைக்கும். அதை கத்தரித்து நான் வேலைசெய்யத் தொடங்கிவிட்டால் நான்கு மணி நேரத்தில் இரண்டரை அடி உயரமுள்ள நெற்றிப்பட்டத்தை உருவாக்கிவிடுவேன். அதை 3500 முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்வேன். சில நாட்கள் தினமும் நாலைந்துகூட தயார் செய்திருக்கிறேன். சில மாதங்கள் ஐம்பது வரை செய்து விற்றிருக்கிறேன். சிறுவயதில் இருந்தே கலைப்பொருட்கள் செய்து வந்ததால் என்னால் இதனை வேகமாக உருவாக்கமுடியும்.

இதில் முக்கியமான வேலையே வாடிக்கையாளர்களை கண்டு பிடித்து விற்பனை செய்வதுதான். இணையதளம் மூலம்தான் பெருமளவு விற்பனை செய்கிறேன். பேஸ்புக் குழுவிலும் இணைந்திருக்கிறேன். முன்பெல்லாம் காரில் தூக்கிக்கட்டும் விதத்திலான நெற்றிப்பட்டங்களை தயார் செய்தேன். அதற்கு அதிக வரவேற்பு இல்லாததால், இப்போது அதனை தயாரிப்பதில்லை. என்னிடம் பத்து பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் குமிழ்களை ஒட்டித்தருவார்கள். இறுதிகட்ட மினுக்குப் பணிகளை நான் நுட்பமாக மேற்கொள்வேன். நான் தயார் செய்யும் இந்த கலைப்பொருளுக்கு 12 வருடங்கள் கியாரண்டியும் கொடுக்கிறேன்” என்கிறார்.

காயத்ரி தேவி இசையில் இளநிலை பட்டமும், சமஸ்கிருதத்தில் முதுநிலை பட்டமும் பெற்று பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி யாற்றி வந்தார். அங்கு ஒரு மாதம் வாங்கும் சம்பளத்தை இந்த கலைப் பணியில் ஒரே நாளில் சம்பாதித்துவிட முடியும் என்பதால் அந்தவேலையில் இருந்து விலகிவிட்டார். இவரது கணவர் ஜெயன் துபாயில் பணியாற்றுகிறார். மகன் ரோகித்துக்கு ஐந்து வயது.