பிரமிக்கவைக்கும் லாரிகளை ஓட்டும் பெண்கள்


பிரமிக்கவைக்கும் லாரிகளை ஓட்டும் பெண்கள்
x
தினத்தந்தி 17 March 2019 12:02 PM GMT (Updated: 17 March 2019 12:02 PM GMT)

பார்க்கும்போதே மிரளச் செய்யும் பிரமாண்ட லாரிகளை ஓட்டும் பெண்கள் உலகெங்கும் இருக்கின்றனர். அதிலும் அமெரிக்காவில் அவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.

பார்க்கும்போதே மிரளச் செய்யும் பிரமாண்ட லாரிகளை ஓட்டும் பெண்கள் உலகெங்கும் இருக்கின்றனர். அதிலும் அமெரிக்காவில் அவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த லாரி டிரைவர்களின் எண்ணிக்கையில் 6.2 சதவீதம் என்ற கணக்கில் அவர்கள் உள்ளனர்.

லானெல்லி டெவ்லின் அவர்களில் ஒரு டிரைவர். இவர் தினமும் காலை 10 மணிக்கு கண் விழித்தார் என்றால், தனது 53 அடி நீள லாரியை, தொடர்ந்து 11 மணி நேரம்கூட ஓட்டுகிறார். அதேநேரம் ஒரு தாய், மனைவியாக தனது குடும்பப் பொறுப்புகளையும் கவனித்துக்கொள்கிறார்.

லாரி ஓட்டும் தொழிலின் கடினத்தன்மையும், நீண்டநேரம் பணிபுரிய வேண்டியிருப்பதும் பெண்கள் அதிகம் பேரை இவ்வேலையில் ஆர்வம் காட்டச் செய்யாமல் தடுக்கின்றன என் கிறார் இவர். ஆனால் இந்த வேலையின் சாகசத்தன்மையும், சுதந்திரமும் தனக்குப் பிடித் திருப்பதாகவும் இவர் சொல்கிறார்.

‘‘இந்த வேலையில், நான் விரும்பியபடி செயல்படுகிறேன். இந்த வேலையை எப்படி செய்வது என்று நானே முடிவெடுத்து ரசித்து செய்கிறேன்’’ என்கிறார் டெவ்லின்.

இவர் இப்படிச் சொன்னாலும், இப்போதும் பெண் லாரி டிரைவர்களின் எண்ணிக்கை பெரிதாக அதிகரித்துவிடவில்லை. கடந்த 15 ஆண்டுகளில், 4.5 சதவீதம் என்ற நிலையில் இருந்து 6 சதவீதம் என்ற நிலைக்குத்தான் அவர்கள் எண்ணிக்கை கூடியிருக்கிறது என அமெரிக்க லாரித் தொழிலாளர்கள் சங்கம் கூறுகிறது.

ஆனால், இவ்வேலை கடினமாக இருந்தாலும், நல்ல சம்பளம் கிடைப்பதாகவும் சொல் கிறார்கள். அமெரிக்காவில் லாரி டிரைவர்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 30 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். மற்றொரு நல்ல விஷயம், ஆண் டிரைவர்களுக்கும் பெண் டிரைவர் களுக்கும் சம்பள விஷயத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

‘‘இங்கு ஆண் டிரைவர்களைப் போலத்தான் பெண் டிரைவர்களுக்கும் சம்பளம் வழங்கப் படுகிறது. பெரும்பாலான லாரி நிறுவனங்கள், கிடைக்கும் மைலேஜ், ஓட்டும் நேரம், சரக்கின் எடையைப் பொறுத்து டிரைவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்குகின்றன. பாலினம், இனம், வயது என்று எந்தப் பாகுபாடும் இங்கில்லை’’ என்கிறார், டெவ்லின்.

இவருக்கு வேலையின் காரணமாக பல நேரங்களில் லாரியே வீடாகிவிடுகிறது. இவர் பெரும்பாலும் மூன்று வாரங்கள் தொடர்ந்து லாரி ஓட்டுகிறார். அதன் பின் கிடைக்கும் ஓய்வு நாட்களை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிடுகிறார்.

சிறு வாகன ஓட்டுநர், ஓட்டல் ஊழியர், வரவேற்பாளர், சிறு தொழிலதிபர் என்று பல வேலைகள் பார்த்துள்ள டெவ்லின், லாரி டிரைவராக மாற முடிவெடுத்தது வெகு தாமதமாகத்தான். தற்போது இவருக்கு 55 வயது. ஆனால் அமெரிக்க பெண் லாரி டிரைவர் களைப் பொறுத்த அளவில் இது சராசரி வயதுதான்.

பல வேலைகளுக்குப் பின், டெவ்லின் வீட்டில் இருந்து குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள ஆரம்பித்தபோதுதான் அந்த அதிர்ச்சி தாக்கியது. அவரது மகனை ஆஸ்டியோபிளாஸ்டோமா என்கிற அரிய எலும்பு வியாதி தாக்கியது. அதனால் குடும்பத்துக்கு கூடுதல் வருமானம் வந்தே தீர வேண்டும் என்ற நிலையில்தான் அவர் லாரி டிரைவராக முடிவெடுத்திருக்கிறார். ஆனால் நினைத்தவுடன் யாரும் எளிதில் லாரி டிரைவராகி விட முடியாது. 60 வயதாகும் கினா பெட்டெல்லி, வர்த்தக வாகனங்களை இயக்குவதற்கான உரிமத்தை கடந்த 2003-ம் ஆண்டு பெற்றார். அதற்கு அவர் 5 மாதங்கள் பயிற்சி வகுப்புக்கு செல்ல வேண்டியிருந்தது. அதில் ஓட்டுநர் பயிற்சியுடன், அதுதொடர்பான கல்வியும் அடங்கும்.

வோய் என்ற மற்றொரு பெண் லாரி டிரைவர், பெண் டிரைவர்கள் ஆண் டிரைவர்களிடம் இருந்து விமர்சனங்களை எதிர்கொள்வது அடிக்கடி நடக்கிறது என்கிறார்.

‘‘ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து துறைகளிலும் பெண்கள் காலூன்ற வேண்டுமானால் கடும் உழைப்புடன் தங்களை நிரூபித்தாகவேண்டும். அதற்கு லாரி டிரைவிங் வேலையும் விதிவிலக்கு அல்ல. பெண் லாரி டிரைவர் ஓரிடத்தில் லாரியை நிறுத்துகிறார் என்றால், அங்கே ஓர் ஆண் டிரைவர் இருந்தால் நிச்சயம் சீண்டுவார். எனது 15 ஆண்டுகால லாரி டிரைவர் வாழ்க்கையில் நான் நிறைய சீண்டல் களைச் சந்தித்துள்ளேன். ‘நீயெல்லாம் வீட்டுல இருந்து குழந்தைகளை கவனித்துக்கொள்ளக்கூடாதா?’ என்பார்கள். அப்படி சொல்பவர்கள் பெரும்பாலும் வயதான டிரைவர்களாகத்தான் இருப்பார்கள்’’ என்கிறார்.

பெட்டெல்லி போன்ற சில பெண் டிரைவர்கள் தாங்கள் தினமும் குறுகிய தூரங்களுக்கு மட்டுமே லாரி ஓட்டுவதால் வீட்டுக்குத் திரும்பிவந்து குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடிகிறது என்று மகிழ்ச்சி கொள்கிறார்கள். ஆனால் நீண்டதூரம், குறிப்பாக நாடு கடந்து லாரிகளைச் செலுத்தும் பெண் டிரைவர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை.

அப்படி நெடுந்தொலைவு லாரி ஓட்டும் டிரைவர்களில் ஒருவர்தான் டெவ்லின். அவர், தங்களுக்கான ஓய்விடங்கள், தூங்கும் இடங்கள் எல்லாமே சவுகரியமாக இருக்கும் என்று கூற முடியாது என்கிறார்.

‘‘சில லாரி நிறுத்தங்களில், விபசாரம், போதைப்பொருள் வியாபாரம் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும். சில இடங்களில் துர்நாற்றம் குடலைப் புரட்டும். அனுபவமிக்க டிரைவர்கள், ஏன், புதிதாக வருகிறவர்கள் கூட கொஞ்சம் அடாவடியாக நடந்துகொள்வார்கள்’’ என குமுறல்களைக் கொட்டுகிறார் டெவ்லின்.

நல்ல சம்பளம், சலுகைகள் போன்ற விஷயங்கள் இதுபோன்ற எதிர்மறையான அம்சங்களை மறக்கச் செய்துவிடுகின்றன என்கிறார்கள் பெட்டெல்லியும் டெவ்லினும். ஆனால் இவர்கள் இப்படிச் சொன்னாலும், இந்த வேலையின் கடினத்தன்மை இவர்களை பாதிப்பது தெரிகிறது. வருவாய் ஈட்டியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்தான் இப்பெண்களை இவ்வேலையில் ஈடுபடச் செய்கிறது.

பெண் டிரைவர்கள் செலுத்தும் லாரிகளைப் போல, இவர்கள் செல்ல வேண்டிய தூரமும் அதிகம்தான்!

Next Story