இந்தோனேஷியா- எத்தியோப்பியா விபத்து: சிக்கலில் போயிங் பறவைகள்


இந்தோனேஷியா- எத்தியோப்பியா விபத்து: சிக்கலில் போயிங் பறவைகள்
x
தினத்தந்தி 19 March 2019 7:33 AM GMT (Updated: 19 March 2019 7:33 AM GMT)

உலக அளவில் பயணிகள் விமான உற்பத்தியில் முன்னணியில் இருப்பது அமெரிக்காவின் போயிங் மற்றும் நெதர்லாந்தின் ஏர் பஸ் நிறுவனம் தான். இந்த நிறுவனங்களின் 95 சதவீத பயணிகள் விமானங்கள் உலகம் முழுவதும் பறந்து கொண்டு இருக்கின்றன.

போயிங் நிறுவனம் கடந்த 1916-ம் ஆண்டும், ஏர்பஸ் நிறுவனம் 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டவை.

ஒரு ஆய்வின்படி, கடந்த 1974-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை போயிங் 19,533, ஏர் பஸ் 11,763 விமானங்களை தயாரித்து டெலிவரி செய்து இருக்கிறார்கள். உலக அளவில் தற்போது பயணிகள் விமானங்களில் போயிங் நிறுவனத்தின் 11,463 விமானங்களும், ஏர் பஸ் நிறுவனத்தின் 9,620 விமானங்களும் பறந்து கொண்டு இருக்கின்றன. அதே போல் 100-க்கும் மேற்பட்ட போயிங், 50-க்கும் மேற்பட்ட ஏர்பஸ் விமானங்கள் இதுவரை விபத்தில் சிக்கி உள்ளன.

2 விபத்துகள்

கடந்த 6 மாதத்திற்குள் போயிங் நிறுவனத்தின் 2 விமானங்கள் விபத்துகளை சந்தித்து உலக அளவில் அந்த விமானத்தின் மீதான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் 29-ந் தேதி இந்தோனேஷியாவில் நடந்த விபத்தில் 181 பேர் உயிரிழந்தனர். கடந்த 10-ந் தேதி எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர். இந்த 2 விபத்துகளிலும் சிக்கியது போயிங் 737 மேக்ஸ் 8 ரகம் என்ற விமானம் தான்.

இந்த 2 விமான விபத்திலும் ஒரு ஒற்றுமை உள்ளது. விமானம் பறக்க தொடங்கிய 13-வது நிமிடத்தில் இந்தோனேஷியா விமானமும், 6-வது நிமிடத்தில் எத்தியோப்பியன் விமானமும் விபத்தில் சிக்கியது. அதாவது பறக்க தொடங்கும் போது ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்தியாவில்...

எனவே அமெரிக்கா, சீனா, இந்தியா உள்பட உலகம் முழுவதும் பறந்து கொண்டு இருந்த 371 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் பறக்க அந்தந்த நாடுகள் தடை விதித்துள்ளன. அதே போல் போயிங் நிறுவனமும், இந்த விமானங்களின் போக்குவரத்தை நிறுத்தி வைக்கும்படி விமான நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்தியாவில் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் இயக்கி வந்த 12 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த விமானங்கள் பெங்களுருவை மையமாக வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தது.

இந்தோனேஷியாவில் இந்த விமானம் விபத்தில் சிக்கிய போதே அது குறித்து ஆய்வு செய்த போயிங் நிறுவனம் 6 வாரத்திற்குள் இந்த விமானங்களின் தகவல் தொழில் நுட்பத்தை மேம்படுத்த போவதாக அறிவித்தது. ஆனால் சொன்னபடி செய்யவில்லை. இதன் தொடர்ச்சியாக 2-வது விபத்தும் அரங்கேறி உள்ளது.

சென்சார் வசதி

இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடந்து வருகிறது. அதில் சில அடிப்படை தகவல்கள் கிடைத்துள்ளன. விமானம் அதிகபட்ச உயரத்திற்கு மேலாக பறக்க முற்பட்டால் அதனை கட்டுப்படுத்தி கீழ் இறக்குவதற்கான சென்சார் வசதி இந்த விமானத்தில் உள்ளது. விமானம் பறக்க தொடங்கியவுடன் அதனை மேலே எழுப்ப பைலட் முயற்சிக்கிறார். ஆனால் அதே வேளையில் விமானம் அதிக பட்ச உயரத்திற்கு சென்று விட்டது என்ற தவறான சென்சார் சிக்னலால் விமானம் தானாக கீழே இறங்க முயற்சிக்கிறது. இதனால் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து இந்த விமானத்தில் இது போன்ற பிரச்சினையை விமானிகள் ஏற்கனவே சந்தித்துள்ளனர். அவர்கள் இதற்கு தீர்வாக தானாக விமானம் இயங்கும் நேரத்தில் மட்டுமே இந்த சென்சார் கருவி இயங்க வேண்டும் என்று சில குறிப்புகளை கொடுத்து உள்ளனர். இது குறித்து போயிங் நிறுவனமும் ஏற்கனவே விளக்கம் அளித்தது. அதாவது இந்த விமானத்தில், விமானிகள் எளிதாக இயக்குவதற்கான நவீன வசதிகள் உள்ளன. இது குறித்து விமானிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம் என்று கூறி இருந்தது. இதற்கிடையே தொடர்ச்சியாக ஏற்பட்ட 2 விபத்துகள் காரணமான போயிங் நிறுவன பங்குகள் சரிவடைந்து சிக்கலை ஏற்படுத்தி உள்ளன.

விமானத்தின் விலை ரூ. 837 கோடி

விபத்துக்கு உள்ளான போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தின் விலை ரூ.837 கோடி ஆகும். இந்த விமானத்தில் லீப்1பி என்ற என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. அதனை அமெரிக்க-பிரான்சு கூட்டு நிறுவனமான சி.எப்.எம். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ரக என்ஜினை போயிங் தவிர ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ320 நியோ என்ற விமானத்திலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் என்ஜினில் பிரச்சினை இல்லை என்பதால் ஏர் பஸ் நிறுவனத்திற்கு நெருக்கடி இல்லை.

விபத்து விமானத்திற்கு 4,700 ஆர்டர்கள்

போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் விபத்தில் சிக்குவதற்கு முன்பு வரை இந்த விமானங்கள் உலக அளவில் சிறந்த பயணிகள் விமானங்களாக கருதப்பட்டது. எரிபொருள் சிக்கனத்தில் இது மிக சிறந்த விமானம். மற்ற விமானங்களை விட 19 சதவீதம் எரிபொருளை மிச்சப்படுத்தும். 737 மேக்ஸ் ரகத்தில் 7, 8, 9 என 3 பிரிவுகள் உள்ளது. போயிங் வரலாற்றிலேயே குறிப்பிட்ட காலத்தில் 100 விமான நிறுவனங்களிடம் இருந்து 4 ஆயிரத்து 700 விமானங்களுக்கான ஆர்டர் கிடைத்தது இந்த விமானத்திற்கு தான். அப்படிப்பட்ட இந்த விமானத்தில் விபத்து என்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த விபத்துக்கு பின்னும், 737 மேக்ஸ் விமான தயாரிப்பை நிறுத்த போவதில்லை என்றும், அதன் பாதுகாப்பு மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான விபத்தில் உயிர் தப்பிய பணிப்பெண்

பயணிகள் விமானங்கள் புறப்படும் போது, இருக்கைக்கு கீழ் உயிர் காக்கும் ஆடை உள்ளது என்றும், ஆபத்து காலத்தில் எப்படி தப்பி செல்ல வேண்டும் என்பது குறித்தும் அறிவிப்பார்கள். ஆனால் இது வரை எந்த விமான விபத்திலும் பயணிகள் யாரும் உயிர் தப்பியது கிடையாது. விமான விபத்து என்றாலே அனைவரும் உயிர் இழப்பு தான். ஆனால் அபூர்வமாக சிலர் உயிர் பிழைப்பது உண்டு. அப்படி விமான விபத்தில் சிக்கி உயிர் தப்பியவர் வெஷ்னா உலோவிக் என்ற பெண்மணி. அதாவது அவர் பறந்த விமானம் 33 ஆயிரம் உயரத்தில் வெடித்து சிதறியது. அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்து வெஷ்னா உலோவிக் மட்டும் உயிர் தப்பினார். ஆனால் அவர் எந்த உயிர் காக்கும் ஆடையையும் அணியவில்லை.

வெஷ்னா உலோவிக், யூகோஸ்சால்வியா நாட்டை சேர்ந்தவர். விமான பணி பெண்ணான இவர் கடந்த 1972-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி சுவீடன் நாட்டில் இருந்து செர்பியா புறப்பட்ட விமானத்தில் பணியில் இருந்தார். அப்போது அவருக்கு வயது 22. இந்த விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் செக்குடியரசு நாட்டின் மீது பறந்த போது விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தது. அதில் வெஷ்னா தவிர அதில் பயணம் செய்த 27 பேரும் பலியாகினர். விமானம் கீழே நொறுங்கி விழுந்தவுடன், அருகில் இருந்த கிராம மக்கள் சென்று பார்த்த போது விமான பாகங்களுக்கு இடையே ரத்த கறையுடன் வெஷ்னா மூச்சற்று கிடந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். சுமார் 26 நாட்கள் கோமாவில் இருந்த வெஷ்னா, 2 ஆண்டுகள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்தார். முறிந்து கிடந்த அவரது இடுப்பு, கை-கால் எலும்புகள் சரி செய்யப்பட்டன. பின்னர் வெஷ்னா நடக்க தொடங்கினார். விமான பயணமும் மேற்கொண்டார். தனது 66-வது வயதில் வெஷ்னா உயிரிழந்தார். விமான விபத்தில் வெஷ்னா உயிர் தப்பியது இன்றளவும் உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது. எனவே அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.

Next Story