ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 12,500 கோடி டாலரை எட்டியது


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 12,500 கோடி டாலரை எட்டியது
x
தினத்தந்தி 20 March 2019 6:53 AM GMT (Updated: 20 March 2019 6:53 AM GMT)

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்) நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 12,500 கோடி டாலரை எட்டியது.


மும்பை,

ஒரு நிறுவனப் பங்கின் தற்போதைய விலையை, சந்தையில் புழங்கும் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளால் பெருக்க கிடைப்பதே அப்பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) ஆகும்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பல்வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து பெட்ரோலிய பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது. பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் இதுவே முதலிடத்தில் இருந்து வருகிறது. டாட்டா கன்சல்டன்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு நேற்று வர்த்தகம் முடிந்தபோது 12,500 கோடி டாலராக (ரூ.8.71 லட்சம் கோடி) உயர்ந்தது. அண்மையில் எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்குகளின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலரை தாண்டியது. இந்த வகையில் இவ்வங்கி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா கன்சல்டன்சி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. டாப் 10 பட்டியலில் இவ்வங்கி மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.8,928 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 0.8 சதவீத வளர்ச்சியாகும். தொடர்ந்து 16-வது காலாண்டாக இந்நிறுவனத்தின் லாபம் வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய் 4.1 சதவீதம் அதிகரித்து ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பங்கு விலை

மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு ரூ.1,359-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.1,378-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,343-க்கும் சென்றது. இறுதியில் ரூ.1,375.25-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 2.05 சதவீத ஏற்றமாகும்.

Next Story