பிப்ரவரி மாதத்தில், டாலர் மதிப்பில் கச்சா எண்ணெய் இறக்குமதி 8.05 சதவீதம் குறைந்தது


பிப்ரவரி மாதத்தில், டாலர் மதிப்பில் கச்சா எண்ணெய் இறக்குமதி 8.05 சதவீதம் குறைந்தது
x
தினத்தந்தி 21 March 2019 6:52 AM GMT (Updated: 21 March 2019 6:52 AM GMT)

கச்சா எண்ணெய் இறக்குமதி, பிப்ரவரி மாதத்தில், டாலர் மதிப்பில் 8.05 சதவீதம் குறைந்து இருக்கிறது.

புதுடெல்லி

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1,067 கோடி டாலருக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது அது 3 சதவீதம் உயர்ந்து இருந்தது. ஜனவரி மாதத்தில் 4 சதவீதம் குறைந்து 1,124 கோடி டாலராக இருந்தது.

பிப்ரவரி மாதத்தில் 938 கோடி டாலருக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 1,020 கோடி டாலராக இருந்தது. ஆக இறக்குமதி 8.05 சதவீதம் குறைந்து இருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் எண்ணெய் அல்லாத சரக்குகள் இறக்குமதி 4.45 சதவீதம் குறைந்து 2,689 கோடி டாலராக உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,814 கோடி டாலராக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (2018 ஏப்ரல்-2019 பிப்ரவரி), ஒட்டுமொத்த அளவில் 12,872 கோடி டாலருக்கு எண்ணெய் இறக்குமதி ஆகி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 32 சதவீதம் அதிகமாகும். அப்போது இறக்குமதி 9,753 கோடி டாலராக இருந்தது.

கணக்கீட்டுக் காலத்தில் எண்ணெய் அல்லாத சரக்குகள் இறக்குமதி 33,528 கோடி டாலராக இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 3.09 சதவீதம் உயர்ந்துள்ளது. அப்போது இறக்குமதி 32,523 கோடி டாலராக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டில் (2018-19) நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் கடுமையாக அதிகரிக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் மதிப்பீடு செய்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவே இதற்கு காரணம் ஆகும்.

தங்கம் இறக்குமதி

இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதியில் நம் நாடு முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.


Next Story