ஜனவரி இறுதி நிலவரம் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 120.38 கோடி


ஜனவரி இறுதி நிலவரம் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 120.38 கோடி
x
தினத்தந்தி 22 March 2019 5:35 AM GMT (Updated: 22 March 2019 5:35 AM GMT)

நம் நாட்டில், 2019 ஜனவரி இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை (செல்போன் +லேண்டுலைன்) 120.38 கோடியாக உள்ளது.


புதுடெல்லி,

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

நம் நாட்டில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 119.79 கோடியாக இருந்தது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் நிகர அடிப்படையில் 59 லட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது 0.49 சதவீத வளர்ச்சியாகும். இதனையடுத்து தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 120.38 கோடியாக இருக்கிறது.

டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது செல்போன் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை மட்டும் (117 கோடியில் இருந்து) 118 கோடியாக உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

கடந்த ஜனவரி மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதிகபட்சமாக 93 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கி உள்ளது. அடுத்து பொதுத் துறையை சேர்ந்த பீ.எஸ்.என்.எல். நிறுவனம் 9.82 லட்சம் புதிய இணைப்புகளை அளித்து இருக்கிறது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் புதிய இணைப்புகளின் எண்ணிக்கை 1 லட்சமாக இருக்கிறது. அதே சமயம் வோடாபோன் நிறுவனம் அதிகபட்சமாக 35.8 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளது. அடுத்து டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம் 8.4 லட்சம் இணைப்புகளையும், எம்.டி.என்.எல். நிறுவனம் 4,927 இணைப்புகளையும் இழந்துள்ளன.

ஜனவரி மாதத்தில் லேண்டுலைன் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 2.17 லட்சம் கோடியாக குறைந்து இருக்கிறது. முந்தைய மாதத்தில் (டிசம்பர்) அது 2.18 லட்சம் கோடியாக இருந்தது. பீ.எஸ்.என்.எல். நிறுவனம் 90,000 இணைப்புகளை இழந்ததே இதற்கு காரணமாகும். அதே சமயம் பார்தி ஏர்டெல் 29,930 புதிய இணைப்புகளை வழங்கி உள்ளது. வோடாபோன் நிறுவனம் 6,386 இணைப்புகளை அளித்து இருக்கிறது.

அகன்ற அலைவரிசை

ஜனவரி மாதத்தில் அகன்ற அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 4.15 சதவீதம் வளர்ச்சி கண்டு 54 கோடியாக இருக்கிறது. இதில் லேண்டுலைன் வாயிலான இணைப்புகள் 1.82 கோடியாக இருக்கிறது. இந்தப் பிரிவில் பீ.எஸ்.என்.எல். நிறுவனம் மொத்தம் 91.70 லட்சம் இணைப்புகளுடன் முன்னிலையில் உள்ளது. அடுத்து பார்தி ஏர்டெல் (23 லட்சம்), அட்ரியா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் (14 லட்சம்), எம்.டி.என்.எல். (7.7 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் அதிக இணைப்புகளை வழங்கி இருக்கின்றன. மேலும், செல்போன்களில் அகன்ற அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 52.10 கோடியாக இருக்கிறது.

அகன்ற அலைவரிசை இணைப்புகளில் ஐந்து முன்னணி நிறுவனங்களின் சந்தைப்பங்கு 98.63 சதவீதமாக இருக்கிறது. இதில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 28.94 கோடி இணைப்புகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து பார்தி ஏர்டெல் (11 கோடி), வோடாபோன் (10.98 கோடி), பீ.எஸ்.என்.எல். (2 கோடி), டாட்டா டெலிசர்வீசஸ் (22.60 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன.

இவ்வாறு டிராய் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்திய தொலைத் தொடர்புத் துறையில், 2015-16-ஆம் ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 130 கோடி டாலராக இருந்தது. சென்ற நிதி ஆண்டில் (2017-18) அது 5 மடங்கு அதிகரித்து 620 கோடி டாலராக உயர்ந்தது. உலகிலேயே மிக அதிகபட்சமாக நம் நாட்டில்தான் செல்போனில் இணையதள பயன்பாடு மாதம் ஒன்றுக்கு 340 கோடி ஜிகா பைட்டாக இருக்கிறது.

5ஜி தொழில்நுட்பம்

5ஜி எனும் செல்போன் அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம் இன்னும் சில ஆண்டுகளில் அறிமுகமாக உள்ளது. தற்போது ஆரம்ப நிலையில் உள்ள இத்தொழில்நுட்பம் 2020- 2021-ஆம் ஆண்டுகளில் பரவலாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய 3ஜி, 4ஜி நெட்வொர்க்குகளை விட பத்து மடங்கு அதிகமான அழைப்புகள் மற்றும் தகவல் போக்குவரத்தை கையாளும் விதத்தில் 5ஜி நெட்வொர்க் இருக்கும். தகவல் பதிவிறக்க வேகம் 4ஜி நெட்வொர்க்கை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story